Home 2014 ஜனவரி பிரபஞ்ச ரகசியம் -7
திங்கள், 27 ஜனவரி 2020
பிரபஞ்ச ரகசியம் -7
Print E-mail

நமது பூமியின் தங்கை

வெள்ளியின் வளிமண்டலத்தில் அமைக்கப்பட இருக்கும் மிதக்கும் நகரத்தின் மாதிரி

- சரவணா ராஜேந்திரன்

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் துணைக்கோள்களில் பயணம் செய்து பல இரகசியங்களை அறிந்துகொண்டு வருகிறோம். இந்த முறை நமக்கு மிகவும் அறிமுகமான வீனஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெள்ளி என்னும் கோளை நோக்கிப் பயணம் செய்வோம்.

சந்திர கிரகணத்தின்போது ஒளிரும் வெள்ளி

கோள்கள் உருவானபோது சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக ஆரம்பகால பெரிய நெருப்புக் கோளங்கள் சமமாகப் பிரிந்து ஒன்று பூமியாகவும் மற்றொன்று வெள்ளியாகவும் மாறியது. வெள்ளி சூரிய மண்டலத்திலேயே மிகவும் அமைதியான கோள் ஆகும். இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது.

சூரிய உதயத்துக்கு முன்னும், சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னும் வெள்ளி நன்றாக ஒளிர்கிறது. ஆதலால் அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலில் இதைத் தொலைநோக்கி மூலம் பார்த்து ஆய்வு செய்த பெருமை கலிலியோவைச் சாரும்.

வெள்ளிக்கோளும் பண்டைத் தமிழ் நாகரிகமும்

கிறித்தவர்களின் வேதாகமத்தில் (பழைய ஏற்பாடு ராஜாக்கள் 10:22, 23) இஸ்ரவேலின் சாலமன் அரசனுக்குப் பரிசாக தமிழகத்தில் இருந்து பலவிதப் பரிசுப்பொருட்கள் சென்றது பற்றிய குறிப்புகள் உள்ளது. எகிப்திய ராணிகள் சந்தனம் மற்றும் முத்து போன்றவைகளை தமிழகத்தில் இருந்து சென்ற வணிகர்களிடமிருந்து வாங்கினார்கள் என்ற குறிப்பும் உள்ளது.

இவையனைத்தும் மேற்குக் கடற்கரை (தற்போதைய கேரளா), தாழை, காயல், குலசை, முத்துக்குழித்துறை (தூத்துக்குடி மாவட்டம்) மற்றும் பூம்புகார் போன்ற துறைமுகங்களில் இருந்து கொண்டு சென்ற விவரங்கள் உள்ளன.  சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு திசை காட்டவோ அல்லது அடையாளம் காணவோ எந்த ஒரு உபகரணமும் கிடையாது.

பழங்காலத்தில் கப்பல்களுக்கு வழிகாட்டும் வெள்ளி

மிதக்கும் நகரங்களை உருவாக்கி  மனிதர்கள் வாழும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் இயற்பியல் விதிகளின்படி சாத்தியமாகிவிட்டால், எதிர்காலத்தில் விண்வெளிச்  சுற்றுலாத்தலமாக இந்த வெள்ளி மிதக்கும் நகரம் அமையும்.

காற்றின் துணைகொண்டு மட்டுமே பாய்விரித்து பெரிய மரக்கலன்கள் அரபிக்கடலிலும் இந்துமகா சமுத்திரத்திலும் பயணிக்கும். அப்போது அவர்களின் வழிகாட்டியாகவும், திசைகாட்டியாகவும் காலநிலைகளை உணர்த்தும் கருவியாகவும் வெள்ளி திகழ்ந்திருக்கிறது. உதாரணமாக, கோடைக்காலங்களில் வெள்ளி மிகவும் அதிகமாக மிளிரும்.

குளிர்காலங்களில் மங்கலாகவும் மழைக்காலங்களில் தொலைவில் இருப்பது போலவும் காணப்படும். கோடைக்காலங்களில் வெள்ளி அதிக அளவு மின்னும் போது கடலில் புயல்கள் வரும் சூழல் உள்ளதைப் புரிந்து கொண்டு அதற்கான பாதுகாப்பு முறையைக் கையாண்டனர்.

கோடைக்காலங்களில் கடல்மட்டத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக சில இடங்களில் வெற்றிடம் தோன்ற அந்த வெப்பச்சலனத்தால் சூறாவளியுடன் கூடிய மழை உண்டாகிறது. இதுபோன்ற காலமாற்றம் ஏற்படும் வேளைகளுக்கு முன்பு வெள்ளி அதிகமாக ஒளிவிட ஆரம்பிக்கிறது. இதிலிருந்து நமது மூதாதையர்கள் சூறாவளியின் அளவைக் கணக்கிட்டு கடலில் பயணம் செய்துள்ளனர்.

கிரேக்க மற்றும் சீன இலக்கியங்களில் வெள்ளி மற்றும் சூறாவளி குறித்த எந்த ஒரு குறிப்பும் காணப்படவில்லை.

வெள்ளியின் இயற்பண்புகள்

அளவில் பூமியை ஒத்து இருப்பதால் இது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது. வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம் மென்மையான லோபடே சமவெளியும் 20 சதவீதம் மென்மையான எரிமலைச் சமவெளியும் அடங்கும். இதன் வடதுருவத்தில் நமது பூமியின் கண்டங்களைப் போன்ற பெரிய தரைப்பகுதியும், வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்குச் சற்று தெற்கில் ஒரு தரைப்பகுதியும் காணப்படுகிறது.

வெள்ளியும் பூமியும் ஓர் ஒப்பீடு

ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையான பரப்பளவு கொண்ட வடக்குத் தரைப்பகுதி பாபிலோனியக் காதல் தெய்வமான ஈஸ்தரின் பெயரில் அழைக்கப்படுகிறது. மேக்ஸ்வெல் மேண்டஸ் என்பது வெள்ளியின் மிக உயர்ந்த மலையாகும்.

பரப்பளவில் இரண்டு தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இணையான தெற்குத் தரைப்பகுதி அப்ரொடைட் டெர்ரா என்று அழைக்கப்படுகிறது. நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது வெள்ளி விண்மீன்களைவிட பிரகாசமாக ஒளிர்கிறது.

பூமியின் அருகில் இருக்கும்போது அதன் பிரகாசம் அதிகமாக இருக்கும். பகல் நேரங்களில்கூட பிரகாசமாக வெற்றுக்கண்களுக்குத் தெரியும். மாலை நேரத்தில் கீழ்வானில் இருக்கும்போது எளிதில் காணக் கூடியதாகவும் இருக்கிறது.

வெள்ளிகிரகணம் அல்லது வெள்ளி சூரியக்கடப்பு (Transit of Venus)

பெரிதாக்கப்பட்ட வெள்ளி சூரியக் கடப்பு

சூரிய சந்திர கிரகணங்களைப் போல  வெள்ளிக்கோளுக்கும் கிரகணம் உண்டு. வெள்ளிக் கோளில் ஏற்படும் கிரகணத்திற்கு Transit of Venus என்று பெயர்.  சூரியக் குடும்பத்தின் வரிசையில் இருந்து புதன், வெள்ளி, பூமி இதன் துணைக்கோள் நிலவு போன்றன ஒன்றையொன்று மறைத்து வருகின்றன.

அதாவது, நாம் கண்ணாம்பூச்சி விளையாடுவது போல் அவற்றின் உருவம் பெரிதாக இருந்து, ஒன்றையொன்று முழுமையாக மறைத்தால், அது கிரகணம். மறைக்க முயலும் சூரிய பிம்பத்துக்குள் வரும் பொருள் சிறிதாக இருந்தால், அதனை மறைப்பு என்கிறோம். வெள்ளி மறைப்பு என்பது கிட்டத்தட்ட சூரிய கிரகணம் போலத்தான்.

எப்படி சூரிய கிரகணத்தில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு வருகிறதோ, அது போலவே, வெள்ளி மறைப்பில், பூமி, சூரியனுக்கு இடையில் மிக மெதுவாக சின்னக் கரும்புள்ளியாக சூரியனின் ஒரு ஓரத்தில் இருந்து மறுமுனைவரை செல்லும்.

அப்போது சூரியனின்மீது கிட்டத்தட்ட ஒரு கால்பந்து அளவில் வட்டமான நிழல் நகர்ந்து செல்லும். வெள்ளி நமது பூமியின் அளவு இருந்தாலும்கூட அதிக தூரத்தில் இருப்பதால் இந்தக் கிரகணத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.  இந்த நிகழ்வை நாம் வெறும் கண்களால் பார்க்கமுடியும்.

வெள்ளி சூரியக் கடப்பு (வட துருவத்திலிருந்து எடுத்த படம்)

பூமி சூரியனுக்கு அருகில் வரும்போது அதாவது கோடைக்காலமான மே, சூன் மாதங்களில் வெள்ளி சூரியக்கடப்பு நிகழும். 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.40லிருந்து 8 மணிவரை இந்த இயற்கையின் அதிசயம் நிகழ்ந்தது. இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி 6 மணி நேரம் இந்தச் சூரியக் கடப்பு நிகழ்ந்தது.

பசிபிக் மகாசமுத்திரத்தைக் கடந்த ஜேம்ஸ்குக் தனது பயணத்தின்போது வெள்ளிச் சூரியக்கடப்பைக் கண்டதாக தனது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். குக் பார்த்த இடம் இன்றும்கூட, பிரென்சு பாலினீசியத் தீவான திஹாட்டியில் வெள்ளியின் முனை(Point Venus) என்றே அழைக்கப்பட்டு, அங்கே அதன் அடையாளச் சின்னமாக ஒரு தூண் வைக்கப்பட்டுள்ளது.

நல்லவேளை, இது நமது ஜோதிடர்களின் பேரறிவிற்குப் புலப்படவில்லை. அப்படித் தெரிந்திருந்தால் இதையும் வெள்ளிகிரகணம் என்று கூறி இதற்கும் பரிகாரம் இதர எல்லாம் செய்யவைத்து சம்பாத்தியம் பார்த்திருப்பார்கள்.

பூமி மற்றும் சூரியன் இரண்டின் ஈர்ப்புவிசைக்கு இடையில் சிக்கி இருப்பதால் இதன் சுழற்சிவேகம் மிகவும் மெதுவாகவே உள்ளது. தன்னைத்தானே சுற்ற 244 பூமி நாட்கள் ஆகிறது. அதே நேரத்தில் சூரியனைச் சுற்றிவர 224 நாட்கள் ஆகிறது. (இது ஓர் ஆண்டு ஆகும்.) நவீன கருவிகள் வரும் முன்பு வெள்ளியின் நிழலை வைத்து சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துள்ளனர்.

வெள்ளியின் வளிமண்டலம்

பிட்டர்ஸ்பர்க் (Petersburg) மற்றும் மிக்கைல் லோமொனோசொவ் (Mikhail Lomonosov) என்ற விஞ்ஞானிகள், வெள்ளிக் கோளில் வளிமண்டலம் இருப்பதை உறுதி செய்தனர். 1761இல் வெள்ளி சூரியக்கடப்பு நிகழ்வை ஆராய்ந்தனர்.

அப்போது, சூரியக் கதிர்களின் ஒளி விலகலினால் வெள்ளியின் பகுதியும், அதன் மேல் வளிமண்டலமும் தெரிந்துள்ளன. பின்னர் 1769இல் நடைபெற்ற வெள்ளி சூரியக்கடப்பின் போது, கனடாவிலுள்ள ஹட்சன் வளைகுடா, சைபீரியா, கலிபோர்னியா மற்றும் நார்வே பகுதிகளுக்கு விஞ்ஞானிகள் பயணித்து இந்த நிகழ்வைத் துல்லியமாக ஆராய்ந்தனர். இதன் மூலம் புதனின் மேற்பரப்பில் வளிமண்டலம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

வீனஸ் எக்ஸ்பிரஸ் திட்டம்

Venus Express (VEX) என்பது அய்ரோப்பாவின் ஈசா (ESA) விண்வெளி நிறுவனம் வெள்ளிக் கோளை ஆராய்வதற்காக முதன்முதலில் அனுப்பிய விண்கலம் ஆகும். 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் நாள் ஏவப்பட்ட  இந்த விண்கலம் வெள்ளியின் சுற்றுப் பாதையை ஏப்ரல் 2006இல் அடைந்தது.

வெள்ளிக் கோள் பற்றிய தகவல்களை இது தொடர்ச்சியாக பூமிக்கு அனுப்பி வருகிறது. மொத்தம் ஏழு உபகரணங்களைக் கொண்டு சென்ற இந்த விண்கலத்தின் முக்கிய நோக்கம், வெள்ளியின் வளிமண்டலத்தை நீண்ட காலம் கண்காணிப்பதாகும்.

வெள்ளிக்கோளினைத் தொடர்ந்து ஆய்ந்துவந்த ஈசா விண்வெளி ஆய்வு நிறுவனம் 2012ஆம் ஆண்டு மிகப்பெரிய உண்மை ஒன்றினை வெளிக்கொண்டு வந்தது. அதாவது, தொடர்ந்து வெள்ளியின் தரைப்பகுதிகளை பலூன்கள் மூலம் ஆய்வுசெய்து வந்தபோது வெள்ளியின் தரைத்தளம் சூடாக இருந்தாலும் அதன் மேலே சுமார் 100 கி.மீ. உயரத்தில் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்கள் அதிக அளவில் உள்ளன. அதேபோல் மேற்பரப்பில் ஓசோன் படலம் இருப்பதும் கண்டறியப்பட்டது.

வெள்ளிக்கோளும் உயிரினமும்

வெள்ளிக் கோளின் தரைப்பகுதி உயிரினங்கள் வாழும் சூழலைப் பெறவில்லை. அதன் வளிமண்டலத்தில் 100 கி.மீ தூரத்தில் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் நிறைந்து இருப்பதால், இப்பகுதிகளில் உயிரினம் வாழத் தகுந்த சூழல் உள்ளது. இதன் காரணமாக மிதக்கும் நகரம் என்ற திட்டத்தை அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யம் முன்வைத்துள்ளது.

தற்போது அண்டார்டிகாவில் உள்ள ஆய்வரங்கம் போன்று வெள்ளியின் வளிமண்டலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய ஆய்வரங்குகளை நிறுவ உள்ளது. அதில் சோதனை ஓட்டம் மூலம் விண்வெளி ஆய்வாளர்களை முதலில் அனுப்பிச் சோதனை செய்த பிறகு, பெரிய மிதக்கும் நகரங்களை உருவாக்கி  மனிதர்கள் வாழும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் இயற்பியல் விதிகளின்படி சாத்தியமாகிவிட்டால், எதிர்காலத்தில் விண்வெளிச்  சுற்றுலாத்தலமாக இந்த வெள்ளி மிதக்கும் நகரம் அமையும். அதே நேரத்தில் நிரந்தரமாக மனிதர்கள் வாழவும் ஏற்ற இடமாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளது.

அடுத்து நாம் நமது சூரியனுக்கு அருகில் உள்ள புதன் கோளினை நோக்கிப் பயணிப்போம்.

Share