Home 2014 ஜனவரி எது மனிதாபிமானம்?
செவ்வாய், 22 செப்டம்பர் 2020
எது மனிதாபிமானம்?
Print E-mail

- மேகா

அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்த வளவனின் அப்பா, வெளியில் செல்லலாம் கிளம்புங்க என்றார். உடனே, வளவனும் அவன் தங்கை நிலாவும் கடற்கரைக்குச் செல்லலாம் என்று தங்கள் விருப்பத்தைக் கூறினர். கடற்கரை மணலில் துள்ளிக் குதித்து ஓடினர் வளவனும் நிலாவும். ஆர்ப்பரித்து எழுந்து வரும் கடல் அலைகளைப் பிரமிப்புடன் பார்த்து இருவரும் நின்றனர்.

பின்னர் தண்ணீரினுள் கால் வைத்து சிறிது தூரம் சென்று பெற்றோருடன் மகிழ்ச்சியுற்றனர். நிலா, தண்ணீரில் நின்று விளையாடியது போதும், சிறிது நேரம் கடற்கரை மணலில் அமர்ந்து கடலினை ரசிக்கலாமா என்றான் வளவன்.

கடற்கரை மணலில் அமர்ந்ததும், வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்த 10 வயதுச் சிறுவன் இவர்களின் அருகில் வந்தான். வேர்க்கடலை வாங்கிக்கங்க சார், ரொம்ப ருசியா இருக்கும். உடலுக்கும் மிகவும் நல்லது என்று சொல்லிவிட்டு வாங்குவார்களா மாட்டார்களா என்ற பரிதவிப்புடன் நின்றான்.

வேர்க்கடலை வேண்டாம் தம்பி, நாங்க வீட்டிலிருந்தே நிறைய பொருள்களைச் சாப்பிடக் கொண்டு வந்திருக்கோம். அதுவே போதும் என்றார் வளவனின் அப்பா. என்னதான் வீட்டிலிருந்து திண்பண்டங்கள் எடுத்து வந்திருந்தாலும் கடற்கரையில் விற்கும் பொருள்களை வாங்கிச் சாப்பிடுவது என்றால் குழந்தைகளுக்குத் தனி விருப்பம்தானே. அந்த வகையில் அப்பா வாங்கிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற நிலையில் வளவனும் நிலாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குழந்தைகளின் மனநிலையினை ஓரளவு புரிந்து கொண்ட சிறுவன், சார், உங்க குழந்தைகளின் உடம்புக்கு நல்ல பொருளைத்தானே சார் வாங்கிக் கொடுக்கப் போறீங்க, அவங்க ரெண்டு பேரும் ஆசையா பார்க்குறாங்க சார், தயவுசெய்து வாங்கிக் கொடுங்க என்றான் கெஞ்சலுடன்.

சிறுவனின் சாமர்த்தியத்தைக் கண்ட நிலாவின் அம்மா, நல்லா பேசுறியே தம்பி, உன் பேர் என்ன? உங்க வீடு எங்க இருக்கு என்றார். அடுத்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மனிதர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை நினைத்த சிறுவன் சிரித்துக் கொண்டே, என் பெயர் குணா, வீடு பக்கத்தில்தான் இருக்கு என்றான்.

4 பொட்டலங்களை வாங்கிவிட்டு, படிக்கலையா தம்பி எனக் கேட்ட வளவனின் அப்பாவிடம் அய்ந்தாம் வகுப்புப் படிக்கிறேன் சார், 5ஆவது ரேங்க்குக்குள் எடுப்பேன் சார் என்றான் குணா. உங்க அப்பா என்ன செய்கிறார் என்றதும், எனக்கு அப்பா இல்லை சார், அம்மா வீட்டு வேலை செய்றாங்க, அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போய்விடும். அதனால் மாலை நேரத்தில் நான் இந்த வேலையைச் செய்கிறேன் என்றான்.

என்ன சார் வேர்க்கடலை எப்படி இருக்கு என்ற குணாவுக்கு நல்லா இருக்கு தம்பி என பதிலளித்தார் அம்மா. பின்ன என்ன மேடம், இன்னும் கொஞ்சம் வாங்கிக்கோங்க, நாளைக்கு வைத்துக்கூட சாப்பிட்டுக் கொள்ளலாமே என்றான் குணா. சரி தம்பி, இப்பக் கொடுத்ததுபோலவே இன்னும் கொடு. மொத்தம் எவ்வளவு ரூபாய் ஆச்சு என்றார் வளவனின் அப்பா.

40 ரூபாய் சார் என்றதும், 50 ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தார். மீதி 10 ரூபாய் கொடுத்த குணாவிடம், தினமும் எவ்வளவோ செலவு செய்கிறோம். இந்த 10 ரூபாயில் நமக்குக் குறைந்தாவிடப் போகிறது என்று நினைத்தவராய் நீயே வைத்துக்கொள் தம்பி என்றார்.

ஏழைக்கு உதவும் குணமும் மனமும் எல்லோருக்கும் வருவதில்லை என நினைத்த குணா, சார், தங்கள் உதவிக்கு நன்றி. ஆனால் எனக்குத் தங்கள் பணம் வேண்டாம் என்றான். ஏன் தம்பி வேண்டாம்கிற, உனக்கு ஏதாவதொரு செலவுக்கு உதவும் என்றார் அம்மா.

என்னைப் பிச்சை எடுக்கப் பழக்கப்படுத்தி விடாதீர்கள் என்ற குணாவிடம், தம்பி நீ தவறாகப் புரிஞ்சிக்கிட்ட. மனிதாபிமான அடிப்படையில்தான் நான் கொடுத்தேன் என்றார் வளவனின் அப்பா. சார், இப்போது தாங்கள் கொடுக்கும் இந்தச் சிறிய உதவியை ஏற்றுக் கொண்டால், நாளைக்கும் இதேபோல் யாரேனும் கொடுக்கமாட்டார்களா என்ற எண்ணம் எனக்குள் தோன்றும். பின்னர் சோம்பேறியாகிவிடுவேன்.

யாராவது உதவி செய்யாத போது பிச்சை எடுக்கவோ திருடவோ மனம் தூண்டும். உழைப்பில் எண்ணம் போகாது. உங்களைப் போல இரக்க குணம் படைத்தவர்களால்தான் நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் உருவாகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. நம் நாட்டில் இப்ப உள்ள பிச்சைக்காரங்க போதும். இன்னொருவனை உருவாக்கி விடாதீங்க.

என்னைப் போன்ற சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில், ரயிலில் அல்லது பிற இடங்களில் விற்கும் பொருள்கள் உங்களுக்குத் தேவைப்பட்டால் - பயனுள்ளதாக இருந்தால் வாங்கி எங்களை  எங்கள் உழைப்பை ஊக்கப்படுத்துங்கள். என்று கூறி 10 ரூபாயை அவரது கையில் திணித்துவிட்டு விறுவிறுவென நடந்தான்.

கடல் ஓசையைவிட குணாவின் குரல் ஓசை வளவனின் பெற்றோர் மனதில் ஆர்ப்பரித்தது.

Share