Home 2014 பிப்ரவரி உடல்நலம் காக்கும் பப்பாளி
வியாழன், 26 மே 2022
உடல்நலம் காக்கும் பப்பாளி
Print E-mail

கரிகா பப்பயா (Carica Papaya) என்னும் தாவரவியல் பெயரினைக் கொண்ட பப்பாளிப் பழம் வெப்பப் பகுதிகளில் வளரக்கூடியது. மத்திய அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் முதன்முதலில் அறியப்பட்ட பப்பாளி. போர்ச்சுகீசியராலும் ஸ்பானிஷ் மக்களாலும் பிற ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி மரம் ஆரோக்கிய மரம் என்றும் பப்பாளிப் பழம் ஆரோக்கியப் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

வைட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்களுள் முதலிடத்தில் மாம்பழமும் இரண்டாம் இடத்தில் பப்பாளியும் உள்ளன. பப்பாளி பழுக்கப் பழுக்க வைட்டமின் சி சத்து அதிகரித்துக் கொண்டே செல்லும். 100 கிராம் காயாக உள்ள பப்பாளியில் 32 மில்லி கிராமும், சிறிது பழுத்த பப்பாளியில் 40-72 மி.கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53-95 மி.கிராமும் நன்கு பழுத்ததில் 68-136 மி.கிராமும் வைட்டமின் சி இருக்கும்.

மேலும், வைட்டமின் பி1, பி2, போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், நார்ச்சத்து, நியாசின் போன்ற சத்துகளும் உள்ளன.

நன்கு வளர்ந்த பழுக்காத காய் வாட்டான பப்பாளிக் காயில் உள்ள புரோடியா லிடிக் என்சைம்ஸ் என்ற தாது புரதத்தையும் மேலும் சிலவற்றையும் செரிக்க வைக்கும் தன்மை உடையது. அர்ஜினைன் போன்ற அமினோ அமிலங்களை, இந்தப் புரதத்தைச் செரிக்க வைக்கும்போது உற்பத்தி செய்ய உதவுகிறது.

நமது உடலில் உள்ள தசைகளைப் பலப்படுத்தவும் கொழுப்பைக் குறைக்கவும் அர்ஜினைன் பெரிதும் உதவுகிறது. ஒரு கிராம் பப்பைனுக்கு (Papain)35 கிராம் இறைச்சியைச் செரிக்கச் செய்யும் ஆற்றல் இருப்பதால், இறைச்சியை மென்மையாக்க சமையலில் சேர்க்கப்படுகிறது. நன்கு வளர்ந்த பழுக்காத காயில்தான் பப்பைன் அதிகமாக உள்ளது.

நமது குடலில் புகுந்த தேவையற்ற கிருமிகள் (பாக்டீரியாக்கள்) மற்றும் ஏனைய புல்லுருவிகளையும் பழுக்காத பழம் அழிக்கிறது. இதயம், கல்லீரலைக் காப்பதுடன், பித்தம் நீக்கி உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டும். பல் தொடர்பான குறைகள், சிறுநீர்ப் பிரச்சினைகள், ரத்த சோகை போன்றவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

பப்பாளிப் பழத்தைத் தேனில் தோய்த்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குறையும். பப்பாளிப் பழத்தில் உள்ள என்சைம் நொதி தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி தோலினை மிருதுவாக்கும்.

புற்றுநோய் செல்களிலுள்ள ஃபைப்ரின் (Fibrin) என்பதை அழிக்க பப்பாளியில் உள்ள பப்பைன் பயன்படுகிறது. உடலின் மற்ற பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கும் ஆற்றல் பப்பைனுக்கு உள்ளது.

பப்பாளிப் பழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாகச் சேர்வதில்லை. எனவே, நீரிழிவு நோயாளிகளும் தினமும் பப்பாளி சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தினைப் பாதுகாத்துக் கொள்ளலாம். பட்டினி இருப்பவர்கள் பப்பாளிச் சாற்றையும், வெள்ளரிச் சாற்றையும் பருகி பயன் அடையலாம்.

பப்பாளி மரத்திலிருந்து வரும் பால் (Latex) காயங்களைக் குணமாக்கும் வல்லமை கொண்டது. பப்பாளி மரத்தின் பச்சைப் பகுதிகளிலும் விதைகளிலும் உள்ள கார்பைன் (Carpine) எனும் ஆல்கலைட் இதயத் துடிப்பைச் சீராக வைக்க உதவுகிறது. பப்பாளி கரோட்டின் சத்தினை அதிகம் கொண்டிருப்பதால் கண் பார்வைக்கும் உறுதுணை புரிகிறது.

பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்திலிருந்து நம்மைக் காக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO).

நுண்ணுயிர் எதிரி (ANTIBIOTIC) மருந்துகளைச் சாப்பிட்ட ஒருவரின் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பப்பாளிக்கு உள்ளது.  தினமும் பப்பாளி சாப்பிடுபவர்களை எந்த நோயும் எளிதில் தாக்காது.

நோய்த் தொற்றுகளும் ஏற்படாது. இயற்கையிலேயே விசக் கிருமிகளைக் கொல்லும் சத்து பப்பாளியில் இருப்பதால், ரத்தத்தில் நோய்க்கிருமி தாக்கி நோயினை உருவாக்கும் வாய்ப்பு இல்லை.

Share