
கதிரவன் கிழக்கினில் உதிக்கிறது கடமையை நம்மிடம் பதிக்கிறது
வளைந்து ஆறுகள் ஓடுது வங்கக் கடலை நாடுது
அலைகள் கரையை மோதுது ஆழ்கடல் அமைதியை ஓதுது
மலைகள் உயர்ந்து நிற்குது மங்காப் புகழைக் கற்குது
காற்றே புயலாய் வீசுது கடுஞ்சின அழிவைப் பேசுது
இரவினில் விண்மீன் ஒளிருது இருக்கிற வாய்ப்பைப் பகருது
இயற்கை பாடம் சொல்லுது ஏற்றிடு மனதில் நல்லது.
- செழியரசு
இயற்கையைக் காப்பாய்!
வேக மாக நாமெல்லாம் விஞ்ஞா னத்தால் உயர்கின்றோம்; தேகத் தாலே உழைக்காமல் திரண்ட செல்வம் சேர்க்கின்றோம்; காகம் குருவி பறவைகளைக் கதிர்வீச் சாலே அழிக்கின்றோம்; தாகம் தீர்க்கும் தண்ணீரைத் தரையில் வற்றச் செய்கின்றோம்.
இயற்கை தன்னை அழித்திட்டால் இன்பம் எல்லாம் நீங்கிவிடும்; செயற்கை யான இன்பங்கள் சிலநாள் மட்டும் தான்நிற்கும்; இயற்கை யோடு கைகோர்த்த இசைந்த விஞ்ஞா னத்தால்தான் உயர்ந்த உலகம் உருவாகும்; உயிர்கள் எல்லாம் நலமாகும்!
- கே.பி.பத்மநாபன்
|