Home 2014 ஏப்ரல் விந்தன் எழுதிய குட்டிக் கதைகள்
திங்கள், 26 செப்டம்பர் 2022
விந்தன் எழுதிய குட்டிக் கதைகள்
Print E-mail

மறைந்த எழுத்தாளர் விந்தன் தமிழ் எழுத்துலகில் வித்தியாசமானவர். அவரது எழுத்துகள் சமூக அவலங்களைச் சாடின. மனித நேயத்தைப் போற்றின. விந்தன் எழுதிய பெரியார் அறிவுச்சுவடி பகுத்தறிவுச் சாட்டையடி. ஓ மனிதா என்ற விந்தனின் நூல் மிகவும் புகழ்பெற்றது. சிறுவர், சிறுமியர் மட்டுமல்லாது அனைவருக்கும் அறம் கூறும் அவரது குட்டிக்கதைகள் சில...

கருணை

தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், ஆகா, மனிதனின் கருணையே கருணை! எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தேடிப்பிடித்து தூண்டி முள்ளில் வேறு குத்தி, தண்ணீருக்குள் அல்லவா விட்டிருக்கிறான்? என்றது நன்றியுடன்.

அட முட்டாளே! கருணையாவது, கத்தரிக்காயாவது? அவன் உன்னைப் பிடித்துச் சாப்பிடுவதற்காக அல்லவா அதை ஏவி விட்டிருக்கின்றான்! என்றது தவளை.

நன்றிகெட்டதனமாகப் பேசாதே! எப்போதும் நல்லதையே நினை. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்; கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்! என்றது அது.

செய் அப்பனே, செய்; உனக்கு எது நல்லதோ அதையே செய்! என்றது இது.

அவ்வளவுதான்; துடித்துக் கொண்டிருந்த புழுவை விழுங்கிய மீனும் துடித்துக்கொண்டே அய்யோ ஏமாந்தேனே! என்றது பரிதாபமாக.

நன்றிகெட்டதனமாகப் பேசாதே! கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்; நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்! என்றது தவளை.


கடமை

காட்டுக்கு வேட்டையாட வந்திருந்த தன் எஜமானனுக்காக புதரில் மறைந்திருந்த ஒரு முயலை விரட்டு, விரட்டு என்று விரட்டிற்று ஒரு நாய்.

ஓடி ஓடிக் களைத்த முயல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்று, அட, இனத் துரோகி! என்னைப் போல் நீயும் ஒரு மிருகம், உன்னைப்போல் நானும் ஒரு மிருகம். கேவலம், ஒரு சில எலும்புகளுக்காக என்னை நீ இப்படிக் காட்டிக் கொடுக்கலாமா? என்று கேட்டது.

காட்டிக் கொடுத்தால் இனத் துரோகி; காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம்? என்று நீதான் சொல்லேன்! என்று அதைத் திருப்பிக் கேட்டது நாய்.

முயல் விழிக்க, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் உங்களுடைய கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள்! என்றது ஒரு கழுகு, அங்கிருந்த ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி.

சரி, இப்போது ஓடுவதுதான் என் கடமை! என்று சொல்லிக்கொண்டே முயல் ஓடிற்று.

என் கடமை உன்னைத் துரத்துவதுதான்! என்று சொல்லிக்கொண்டே அதைத் துரத்திற்று நாய்.

டுமீர்! என்று ஒரு சத்தம். சுருண்டு விழுந்த முயலைப் பாய்ந்து வந்த கழுகு தன் காலால் இறுகப் பற்றிக்கொண்டு மேலே பறந்தது;

இதைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற நாய், மறுகணம் தன்னைத் தானே சமாளித்துக்கொண்டு சொல்லிற்று:

இது பலனை எதிர்பாராமல் செய்யும் கழுகின் கடமைபோலும்!


தியாகம்

ஆற்றங்கரை ஓரத்திலிருந்த ஒரு கல்லின் மேல் தான் கொண்டு வந்திருந்த அழுக்குத் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தான் ஒரு சலவைத் தொழிலாளி.

அழுக்கடைவது துணி; அதை வெளுக்கும்போது அடிபடுவது நீ, ஆகா, உன் தியாகமே தியாகம்! என்று கல்லைப் புகழ்ந்தது! கழுதை.

மன்னியுங்கள்; துணி வெளுக்கப்படும்போது நானும் வெளுக்கப் படுகிறேன் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்! என்றது கல், உண்மையை மறைக்க விரும்பாமல்.

அசடு வழிந்த கழுதை ஆற்றைப் பார்க்க, ஆறு கல்லைப் பார்த்து முணுமுணுத்தது:

பிழைக்கத் தெரியாத தியாகி, பிழைக்கத் தெரியாத தியாகி!


சமாதானம்

நாலைந்து நாட்களாகத் தெருத் தெருவாகத் திரிந்தும் ஓர் எச்சில் இலை கூடக் கிடைக்கவில்லை ஒரு கிழட்டு நாய்க்கு. அப்படியே கிடைத்தாலும் மற்ற நாய்களுடன் போட்டியிட்டு அதைத் தின்ன முடியவில்லை அதனால். ஆகவே பசி ஒரு பக்கமும், வயோதிகத்தால் ஏற்பட்ட வாட்டம் இன்னொரு பக்கமுமாக அது ஒரு நாள் ஒரு வீதி வழியே தளர் நடை நடந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது அதற்கு முன்னால் ஓர் எச்சில் இலை வந்து விழ, அதற்காக அந்தக் கிழட்டு நாயை முந்திக்கொண்டு ஏழெட்டு நாய்கள் ஓடிவந்து சண்டையிட, நில்லுங்கள் சகோதரர்களே,  நில்லுங்கள், கேவலம் ஓர் எச்சில் இலைக்காக ஒரே இனத்தைச் சேர்ந்த நாம் இப்படியா சண்டையிட்டுக் கொள்வது? வெட்கம்! வெட்கம்! என்றது அது வேதனையுடன்.

அதைக் கேட்டு மற்ற நாய்கள் வெட்கத்தால் தலைகுனிந்து நிற்க, அதுதான் சமயமென்று கிழட்டு நாய் அந்த எச்சில் இலையைக் காலி செய்துவிட்டு, வாழ்க சமாதானம்! என்றது, சற்றே வாட்டம் தணிந்து.

அதுவரை அதைக் கவனித்துக் கொண்டிருந்த மற்ற நாய்களில் ஒன்று பெருமூச்சுடன் சொல்லிற்று:

சமாதானத்திற்கு எப்போது வாழ்த்துக் கூற வேண்டுமென்று இப்போதல்லவா தெரிகிறது எனக்கு!

Share