Home 2014 ஏப்ரல் பருவமே...
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022
பருவமே...
Print E-mail

- ந.தேன்மொழி

‘Best year of one’s life’ எதுவென்றால் அது பள்ளிப்பருவம்தான்.

ஏனென்றால் பிள்ளைகளின் வாழ்க்கையை, எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பருவம் இது. இந்தப் பருவத்தை முறையாகப் பயன்படுத்துபவர்கள் நல்லதொரு எதிர்காலத்தை நோக்கிப் பயணம் செய்ய முடியும்.

தடுமாறுபவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்க நேரிடும். எதிர்காலம் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கும். பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான வாழ்க்கையை வாழ நேரிடும்.

பள்ளிப் பருவ காலத்தில் பிள்ளைகளின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது பள்ளியும், படிப்பும் மட்டுமே அல்ல. அதையும் தாண்டி பள்ளி தவிர்த்த வெளி இடங்களில் அவர்கள் நடந்துகொள்ளும் முறை, ஒழுக்கம், நேர்மை, தன்னம்பிக்கை மற்றும் எதிலும் கவனம் சிதறாமை போன்றனவும் மிக முக்கியம்.

நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒவ்வொரு மாணவனும் தன்னை அறிதல் வேண்டும். தன்னை அறிதல் என்பது ஒவ்வொரு மாணவரும் தங்கள் குடும்பச் சூழ்நிலை, மாணவராக தன்னுடைய கடமை இவற்றைத் தெளிவாக அறிந்துகொண்டு இருப்பது.

மேலும் மாணவர்கள் தங்களுக்குள்ளே இருக்கும் திறமைகளை முதலில் இனங்கண்டு கொள்ள வேண்டும். அடுத்து, அந்த ஆற்றலை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து களம் இறங்க வேண்டும்.

ஒவ்வொரு பிள்ளையிடமும் ஒவ்வொரு தனித்திறமை கண்டிப்பாக உள்ளது. திறமையும் ஆற்றலும் ஒருவருக்கொருவர் வேறுபடும். அவ்வளவுதான். திறமையும் ஆற்றலும் உடலை மட்டும் பொறுத்தது அன்று. அது ஒவ்வொரு மாணவரின் உள்ளத்தையும் அறிவையும் பொறுத்தது. எந்த ஒரு மாணவர் தன்னிடம் உள்ள ஆற்றலை அடையாளம் கண்டு அதன்மூலம் தன் திறமையை வெளிக்கொண்டு வருகிறாரோ அவரே வெற்றி காண்பார்.

செய்கின்ற தொழில் எதுவாயினும் அதில் தன் திறன் வெளிப்படுமாறு தன்னை உயர்த்திக்கொள்ளல் என்பதே உயர்வுக்கான வழியாகும். இது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பொருந்தும்.

பொதுவாகவே பள்ளியைத் தவிர்த்து வெளி இடங்களில் நடக்கும் செயல்களினால் கவரப்பட்டு தடுமாறாமல் இருக்க மாணவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

சில பிள்ளைகள் தன் வயதுக்கு மீறிய சிலருடன் நட்புக் கொண்டாடுவார்கள். இதை  ‘Morbid Relationship’ என்று சொல்லலாம். இத்தகைய நட்பினால் சிறுவயதிலேயே சில தேவையற்ற கெட்ட பழக்கவழக்கத்திற்கு பிள்ளைகள் அடிமையாகின்றார்கள்.

பெண் குழந்தைகள் இந்த விசயத்தில் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளி இடங்களில் அறிமுகமில்லாத நபர்கள் உங்களிடம் பேச முற்படுவர். உங்களின் உள் உணர்வு (Intution) பேச்சை வளர்க்காதே என்றுதான் சொல்லும். ஆனால் சிலசமயம் நாகரிகம் காரணமாக நம் உள்உணர்வைப் புறக்கணித்து பேச்சை வளர்த்தால் அது ஆபத்தில் கொண்டுவிடும்.

அடுத்ததாக இணையதளங்களில் வரும் ஆபாச வலைத்தளங்களை நண்பர்களுடன் பார்ப்பது. இது முற்றிலும் தவறான பழக்கம். தன் அறிவை இழந்து சுயசிந்தனையைத் தானே மழுங்கடித்துக் கொள்வது. மேலும் சிறு வயதிலேயே தேவையற்ற பாலியல் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு படிப்பிலிருந்து கவனம் சிதறி வாழ்க்கையைத் தொலைக்க நேரிடும்.

பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தைப் பற்றியும், பிள்ளைகள் அதிகமான நேரத்தை எங்கு, யாரிடம் செலவிடுகின்றார்கள் என்பதைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அடுத்தது செல்பேசி. இதன்மீது மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வம். தன் தாய்தந்தை வருமானத்தையும் மீறி குடும்பச் சூழ்நிலையை மறந்து எவ்வளவு விலைகொடுத்தும் ‘Cell Phone’ வாங்க பெற்றோரை வற்புறுத்தும் பிள்ளைகள் ஏராளம்.

ஆண், பெண் நண்பர்களுடன் காரணமில்லாமல் உரையாடலை வளர்த்துக்கொண்டு பின் தேவையில்லாத பல பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள். பெற்றோர் அவசியம் தங்கள் பிள்ளைகளின் எதிர்த்தரப்பிலிருந்து பேசுவது யார் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.   பெரும்பாலான மாணவர்கள் இன்று போதை மருந்துகளுக்கு அடிமையாகி உள்ளனர்.

சங்கிலித் தொடர்போல ஒரு பிள்ளையிடம் இருந்து இன்னொருவருக்கு என வெகு சுலபமாகப் பரவி வருகிறது. போதைக்கு அடிமையான மாணவர்கள் பெற்றோரிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும் இருந்து விலகி, தன்னை மறக்கும் சூழ்நிலைக்கு வந்துவிடுவார்கள். அதனால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைக்கின்றார்கள்.

மாணவர்கள் அனைவரும் ஒன்றே ஒன்றை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தவறு, பின் தவறை மறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள் உங்கள் மனதில் மிருகத்தனத்தை மெல்ல மெல்லக் குடியேறச் செய்து விடுகின்றது. அதனால் உங்களிடம் உள்ள மனிதத்தன்மை வெளியேறி விடும். இறுதிவரை தவற்றைத் திருத்திக் கொள்ளாவிடில் முழுக்க முழுக்க மிருகத்தனத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும்.

மாணவர்கள் தன் பெற்றோருடன் நல்ல ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். பள்ளி மற்றும் வெளியில் ஏற்படும் அனுபவங்களைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களின் துணையோடு உங்கள் வாழ்க்கையை வளமானதாக்கிக் கொள்ளுங்கள்.

Share