Home 2014 மே பிரபஞ்ச ரகசியம் - 11
செவ்வாய், 26 மே 2020
பிரபஞ்ச ரகசியம் - 11
Print E-mail

சூரியக் குடும்பத்தின் குளிர்சாதனப் பெட்டி

சூப்பர் நோவா

நமது மாபெரும் சூரியக் குடும்பத்தை விண்வெளியில் சென்று பார்த்தோமானால்,  பனிக்கட்டித் துகள்களால் சூழப்பட்ட ஒரு சோப்புக் குமிழ் போலத்தான் நமக்குக் காட்சி தரும்.

சூரியக் குடும்பத்தின் குளிர்சாதனப் பெட்டி

தொலைவிலிருந்து காணும்போது துகள்களாகக் காணப்படும் பனிக்கட்டிகள், அருகில் சென்று பார்த்தால் அவை நமது இமயமலையைவிட பெரிய பனிக்கட்டிப் பாளங்களாகக் காட்சியளிக்கும்.

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் அதில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்க இயற்கையே ஏற்பாடு செய்த குளிர்சாதனப் பெட்டிதான் இந்தப் பனிக்கட்டிச் சுவர்கள். பெருவெளியில் இருந்து மிகவும் ஆபத்து வாய்ந்த கதிர்கள் எப்போதும் நமது சூரியக் குடும்பத்தைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இவற்றில் 90 விழுக்காடு கதிர்களை இந்தப் பனிமலைகள் தனக்குள் ஈர்த்து அவற்றை மீண்டும் பெருவெளியில் எதிரொளித்துவிடுகிறது. இந்தப் பனிக்கவசம் இல்லையென்றால் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் எரிமலை மற்றும் பாறைகள் நிறைந்த பகுதியாக மாறியிருக்கும்.

இந்தப் பனிக்கவசம் வெறும் பாதுகாப்புக் கவசமாக மட்டும் இருந்துவிடவில்லை. இவை சூரிய மண்டலத்தின் உள்ளே நுழைந்து நமக்குத் தேவையான வாயுக்களை வாரிவழங்கி பிறகு மறைந்து விடுகிறது. இந்தப் பனிவெளிதான் வால் நட்சத்திரங்களின் பிறப்பிடமாகும்.

வால் நட்சத்திரங்களின் பிறப்பிடம்

இந்தப் பனிமலைகள் சூரியனுக்கு அருகில் வரும்போது பனிக்கட்டிகள் நீராவியாக மாறி தூசி மற்றும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் தனிமங்கள் அனைத்தையும் சூரியக் குடும்பத்தின் வட்டப்பதையில் வெளியிடுகிறது. இவ்வாறு வெளியிடும் வாயுக்கள் வானில் நீண்டு வால் போல் காட்சியளிக்கும். ஆரம்பத்தில் வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்த வானியல் ஆய்வாளர்கள் இது நமது பால்வெளி மண்டலத்தின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து வருகிறது என தவறாகக் கணக்கிட்டனர்.

எட்மவுண்ட் ஹாலி

மத போதகர்களும் ஜோதிடர்களும் வால் நட்சத்திரத்தைப் பற்றி பல்வேறு பொய்க்கதைகளைப் பரப்பி வைத்திருந்தனர். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த எட்மவுண்ட் ஹாலி என்ற சிறுவனுக்கு மட்டும் வால்நட்சத்திரங்கள் பற்றிய செய்திகள் பொய்யாகத் தெரிந்தன. வானில் வரும் வால் நட்சத்திரத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை என்று அடித்துக் கூறினார்.

சூரியக் குடும்பத்தைச் சூழ்ந்த பனி மண்டலம்

அப்போது அவருக்கு வயது 12. எட்மவுண்டின் இந்த உறுதி அவரது பணக்காரத் தந்தையான சீனியர் எட்மவுண்ட் ஹாலிக்கு மிகவும் பிடித்துவிட்டது. வானியல் ஆய்விற்கு ஊக்கமூட்டும் வகையில் பல்வேறு தொலைநோக்கிகள் மற்றும் அனைத்து வசதிகளும் நிறைந்த அறையைத் தனது மகனுக்கு ஒதுக்கிக் கொடுத்தார். எட்மவுண்ட் ஹாலி இரவு முழுவதும் வானத்தைப் பார்த்து ஆய்வு செய்து பல குறிப்புகளை எழுதி வைத்தார்.

பிரொக்ஷிமா செண்டரி

தன்னுடைய பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளர் படிப்பிற்கு விண்ணப்பித்தார். கல்லூரிக்குச் சென்ற முதல்நாளே பல ஆண்டுகளாக தான் நடத்தி வந்த ஆய்வு பற்றி அனைவரிடமும் கூறி ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார். இரண்டாம் ஆண்டு பயிலும் போது ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தின் மூலம் சூரியக் குடும்பம் மற்றும் சூரியப் புள்ளிகள் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டார்.

எகிப்து நாட்டிற்குச் சுற்றுலா வந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களில் இடம் பெற்றிருந்த வால் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் இவரை மிகவும் கவர்ந்தன. அதன் பிறகு  வால்நட்சத்திரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உலகம் முழுவதிலுமிருந்து திரட்டினார். அவற்றை ஆராய்ந்தபோது குறிப்பிட்ட ஒரு வால் நட்சத்திரம் மட்டும் ஓரிடத்தில் மீண்டும் மீண்டும் வந்து மறைவதைக் கவனித்தார்.

எட்மவுண்ட் ஹாலி

அந்த நட்சத்திரத்தை நீண்ட காலம் ஆய்வு செய்து, இறுதியில் வால் நட்சத்திரங்கள் நமது சூரியக் குடும்பத்திலிருந்துதான் வருகின்றன என்று உறுதி செய்தார். பின்னர், வால்நட்சத்திரம் மீண்டும் வரப்போகும் ஆண்டினைக் கணித்துக் கூறினார்.  1682-ஆம் ஆண்டு தனது மாணவப் பருவத்தில் பார்த்து ஆய்வு செய்ய முன்வந்தவர், அடுத்து 1758-ஆம் ஆண்டு  மீண்டும் வரும் என்று தெளிவாகக் கூறினார்.

அதேபோல் அடுத்து 10 முறை வால்நட்சத்திரம் தோன்றும் ஆண்டுகளையும் கூறினார். எட்மவுண்ட் ஹாலி 1942-ஆம் ஆண்டு ஜனவரி 17-அன்று தனது வால் நட்சத்திரங்கள் ஆய்வு பற்றி நீண்டதொரு ஆய்வரங்கம் நடத்தினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆய்வாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வரங்கில் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

அனைத்திற்கும் நிதானமாக சான்றுகளோடு பதில் அளித்தபிறகு  தூங்கச் சென்றவர் பிறகு எழவே இல்லை. உறக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. ஆனால், உலகமே எதிர்பார்த்தது போல் 1758-ஆம் ஆண்டு அவர் குறிப்பிட்ட திசையில் வால் நட்சத்திரம் மீண்டும் தோன்றியது. அதன் பிறகே உலக விண்ணியல் ஆய்வாளர்கள் வால் நட்சத்திரம் நமது சூரியக் குடும்பத்தின் பாகம்தான் என்பதை ஒப்புக்கொண்டனர்.

கருமை சக்தி (Dark energy, Dark matter)

நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு, கலிலியோ முதல் நியூட்டன் வரை பலர் விரிவான ஆய்வுகளை நடத்தினார்கள். இவர்களின் ஆய்வு முடிவுகளின்படி சூரியனைப் போன்று பல நட்சத்திரங்கள் அவற்றைச் சுற்றும் கோள்கள் என பரந்து விரிந்த உலகம் உண்டு என்று முடிவு செய்தனர்.

அணுக்கள்

தலைசிறந்த அறிவியலாய்வாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் 1916-ஆம் ஆண்டு ஜெர்மனியை விட்டு அமெரிக்காவிற்குச் செல்லும் முன்பு முதல் கருமை சக்தி (Dark energy, Dark matter) குறித்த சமன்பாட்டைத் தந்தார். அவரது கூற்றுப்படி, நாம் காணும் வெளிச்சமான பாகம் வெறும் 5 விழுக்காடு மட்டுமே, மீதமுள்ள 95 விழுக்காடு கருமை சக்திகளால் சூழப்பட்டுள்ளது என்றார்.

அன்ஸ்டைனின் கூற்றுப்படி, பெருவெளியில் உள்ள அனைத்துப் பொருட்களும் ஏதாவது ஒரு ஆற்றலைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. தகுந்த வாய்ப்புக் கிடைக்கும்போது அது தனது சக்தியை முழுவதுமாகப் பயன்படுத்துகிறது என்றார். அதாவது, விதை ஒன்று நீண்ட நாட்களாக மண்ணுக்குள் இருந்து மழை பெய்ததும் முளைவிடுவது போன்று ஆகும்.

நீண்ட நாட்களாக அது மண்ணுக்குள் இருந்தாலும் அதற்குள் ஒரு சக்தி ஓட்டம் இருக்கிறது. அதேபோல்தான் விண்வெளியிலும் நடக்கும் என்றார். அய்ன்ஸ்டைனின் இந்தக் கோட்பாட்டை மேலும் ஆராய பல விண்வெளி ஆய்வாளர்கள் முன்வந்தனர்.

சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரம் பிரொக்ஷிமா செண்டரி

1915-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ரோபெர்ட் இன்னெஸ் (Robert Innes) என்ற விண்வெளி ஆய்வாளர் நமது சூரியனுக்கு அருகில் புதிய நட்சத்திரம் ஒன்றைக் கண்டுபிடித்தார். அதற்கு  பிரொக்ஷிமா செண்டரி எனப் பெயர் சூட்டினார். தொடக்கத்தில் இந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்த ரோபர்ட் இன்னெஸ், இது சூரியனைவிடப் பெரியதாக இருக்கலாம் என்று முடிவு செய்தார். அவருக்குப்பின் அந்த நட்சத்திரத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்தவர்கள் சூரியனைவிட மிகவும் சிறிய நட்சத்திரம் என்று கண்டுபிடித்தனர்.

இந்த நட்சத்திரத்தைச் சுற்றி அடர்த்தியான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அணுக்கள் பரவியுள்ளது. மேலும், அபாயகரமான கதிர்வீச்சும் இதனிலிருந்து வெளிப்படுகிறது. இதன் காரணமாக இந்த நட்சத்திரம் இரத்தச் சிவப்பில் காணப்படுகிறது. ஆகையால் இதை, சிவப்புக் குள்ள நட்சத்திர (dwarf red star) வரிசையில் வைத்தார்கள்.

பிரொக்ஷிமா செண்டரி தொடக்க காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தது. இதனுள் உள்ள ஆற்றல் தீர்ந்த பிறகு சூப்பர் நோவாவாக மாறி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது மிகப்பெரிய உருவத்தை இழந்து இன்று மிகவும் சிறியதாகக் காட்சியளிக்கிறது.

ரோபெர்ட் இன்னெஸ் கண்டுபிடித்த பிரொக்ஷிமா செண்டரி மற்றும் நமது சூரியக் குடும்பத்திற்கு இடையில் பல கோள்கள் இருப்பதைத் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்தனர். இதற்கு கருங்குள்ளக் கோள்கள் (dwarf planets) எனப் பெயர் சூட்டினர். இந்தக் கோள்களை சாதாரணக் கண்களாலும் மிகவும் ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கியாலும் பார்க்க முடியாது.

இவற்றைப் புறஊதாக்கதிர்களைக் கண்டறியும் தொலைநோக்கி மூலமே காணமுடியும். ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் விதிப்படி, இப்பெருவெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஆற்றல் உண்டு.

அந்த ஆற்றல் மூலத்திலிருந்து வெளிப்படும் மிகவும் சிறிய கதிரியக்க வீச்சைக்கூட புறஊதாக்கதிர் தொலைநோக்கி கண்டறிந்துவிடும். அதன்படி, இப்பெருவெளி ஆற்றல் மூலமாகத் திகழ்கின்றது. வெற்றுவெளி என்பது எங்குமே இல்லை என்பது உறுதியானது.

அடுத்து ஆல்பா செஞ்சுரி A, ஆல்பா செஞ்சுரி B என்ற ஒட்டிப்பிறந்த இரண்டு நட்சத்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ள நீண்ட பயணத்தை மேற்கொள்வோம்.

சூப்பர் நோவா - நட்சத்திரங்கள் ஆற்றல் குறைந்து சுருங்கும்போது அதன் வேகம் அதிகரிக்கும். சில நட்சத்திரங்கள் மணிக்கு பத்து மில்லியன் மைல் வேகத்தில் சுழலுகின்றன. உட்புறத்திலுள்ள அழுத்தமும் மேல்புறத்திலுள்ள வேகமும் அதை வெடிக்கச் செய்கின்றன. அது ஒரு பில்லியன் நட்சத்திரங்களுக்கு ஒப்பான பேரொளியை வீசி வெடிக்கிறது.

சில சமயங்களில் அது தனது எல்லையையும் கடந்து மிகவும் அதிகமாகப் பிரகாசமடைகிறது. அதன்  பிறகு அந்த நட்சத்திரம் மிகவும் சுருங்க ஆரம்பித்து இறுதியில்  கருந்துளைப் (பிளாக் ஹோல்) பிரதேசமாக மாறுகிறது. நமது சூரியனும் தனது ஆற்றலை இழந்து விரிவடையத் தொடங்கும்.

அப்போது  புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்ற கோள்கள் சூரியனில் மூழ்கிப்போய்விடும். வியாழன், மற்றும் சனிக்கோள் சூரியனின் அதீத வெப்பத்தில் ஆவியாகிவிடும். தனது ஆற்றல் அனைத்தையும் இழந்து சூரியனும் சிவப்புக் குள்ள நட்சத்திரமாக மாறிவிடும்.

- சரவணா ராஜேந்திரன்

Share