Home 2014 மே அறிஞர்களின் வாழ்வில்.....
புதன், 12 மே 2021
அறிஞர்களின் வாழ்வில்.....
Print E-mail

அலெக்சாண்டரின் பெருந்தன்மை

உலகத்தை வென்று தன் காலடியில் கொண்டுவர வேண்டும் என நினைத்த கிரேக்க இளவரசர் மகா அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வரும் வழியில் பல மன்னர்களை வெற்றி பெற்றார். ஜீலம், சீனாப் நதிகளுக்கு இடையே உள்ள நாட்டை ஆண்ட மன்னர் போரஸ் என அழைக்கப்பட்ட புருஷோத்தமர் அலெக்சாண்டருக்கு அடிபணிய மறுத்தார்.

பலம் பொருந்திய யானைப்படையுடன் போர்த்திறமையையும் பெற்றிருந்த போரசை வென்றுவிட திட்டம் தீட்டினார் அலெக்சாண்டர். கிரேக்கப் படைகள் வீசிய அம்புகள் யானைகளை மிரளச் செய்தன. அவர்கள் வீசிய தீப்பந்தங்களைப் பார்த்த யானைகள் வெறிகொண்டு ஓடின. பாஞ்சால வீரர்கள் திணறினர்.

போரஸ் அமர்ந்து போர் புரிந்த யானையும் ஓடத் தொடங்கியது. யானையை விட்டு இறங்கிப் போர் புரிந்தார் போரஸ். யானையின் மீது மன்னரைக் காணாத படையினர் மன்னர் வீழ்ந்துவிட்டாரோ என நினைத்து ஓடினர். பலம் மிக்கதாகக் கருதப்பட்ட யானைப்படையைத் திணறடித்து ஓடவைத்தனர் கிரேக்க வீரர்கள்.

வீரத்துடன் தனித்துப் போரிட்ட போரசை கிரேக்க வீரர்கள் சூழ்ந்தனர். கைது செய்து அலெக்சாண்டரிடம் அழைத்துச் சென்றனர். கைதி என்ற நிலையிலும் நெஞ்சு நிமிர்ந்து வீர நடையுடன் வந்த திடமான மனிதரைக் கண்டு வியந்தார் அலெக்சாண்டர்.

நீ இப்போது என் கைதி. உன்னை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனினும், உன்னை நான் எவ்வாறு நடத்த வேண்டும் என்று நீ விரும்புகிறாய் என்று கேட்டார் அலெக்சாண்டர்.

எந்தவிதத் தயக்கமுமின்றி, நான் இந்நாட்டு மன்னன். வெற்றி, தோல்வி மாறி மாறி வருவது சகஜம். இம்முறை நீ வெற்றி பெற்றுள்ளாய். ஒரு மன்னன் மற்றொரு மன்னனை எவ்வாறு நடத்த வேண்டுமோ அவ்வாறு நடத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன் என்று பதில் கூறினார் போரஸ்.

போரசின் வீரத்தையும், தன்மான உணர்ச்சியையும் போற்றி அவருடன் நட்புக்கொண்ட அலெக்சாண்டர், அவரது நாட்டிற்கே மீண்டும் மன்னனாக்கினார்.


உள்ளம் பல அறைகளைக் கொண்ட கூடு. ஒரு அறையைத் திறந்து வைத்து ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும்போது மற்ற எல்லா அறைகளையும் நான் மூடிவிடுவேன்.

மூன்று மடைகளில் பாயும் தண்ணீரை, இரண்டு மடைகளை அடைத்து மூன்றாவது மடை வழியாகப் பாயச் செய்தால் எப்படி நீரின் வேகம் சீறிப் பாயுமோ அதேபோல் மற்ற எல்லா அறைகளையும் அடைத்துவிட்டு ஒரே விசயத்தை ஒரே தீவிரத்துடன் சிந்திப்பேன். எனக்குப் பளிச்சென்று நல்ல யோசனை தோன்றும்.

- நெப்போலியன் போனபர்ட்


முட்டாளுக்குத்தான் பாடம்

தமது அரசியல் வாழ்வில் சந்தித்த சோதனைகளையும் வேதனைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதித்துக் கொண்டிருந்தார் சர்ச்சில். அப்போது ஒரு உறுப்பினர் எழுந்து, உங்கள் அனுபவங்கள் முட்டாள்களுக்குத்தான் பாடம் புகட்டுவதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

உடனே சர்ச்சில், நண்பரே உங்களுக்குப் பயன்படுமே என்றல்லவா நான் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றாராம்.


சர்ச்சிலின் சொல்லாற்றல்

ஒருமுறை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சர்ச்சிலுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சில் ‘in exactitudes’ இருப்பதாக சர்ச்சில் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் எந்தப் பதிலும் பேசவில்லையாம். காரணம், அவர்கள் யாருக்கும் அந்த வார்த்தையின் பொருள் தெரியவில்லையாம்.

வீட்டிற்குச் சென்று அகராதியைப் புரட்டிப் பார்த்த பின்புதான், தங்களைப் பொய்யர்கள் என்று சர்ச்சில் கூறியது தெரிந்ததாம்.

‘Liars’ என்று சொன்னால் எளிதில் புரிந்துவிடும் என்பதற்காகவே அப்படி ஒரு புரியாத வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார் சர்ச்சில்.


சாவி கொடுக்கும் பொம்மையா?

அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தை அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும் வாயிலில் நின்றிருந்த சிப்பாய் தன் கையிலிருந்த துப்பாக்கியைக் தாழ்த்தி மரியாதை செய்தார். உள்ளே சென்றதும் துப்பாக்கியை நிமிர்த்திப் பிடித்தார்.

இந்தச் செயலை வேடிக்கையாகப் பார்த்த சிறுமி, சிறிது நேரங் கழித்து வெளியே வந்ததும் மரியாதை செய்தார் சிப்பாய். மீண்டும் மீண்டும் உள்ளே வருவதும் வெளியே போவதுமாக இருந்தார் சிறுமி. சிப்பாயும் தனது வேலையைச் சரியாகச் செய்து கொண்டிருந்தார்.

இதனை வியப்புடன் பார்த்த சிறுமி, அட என்ன இது? நான் வைத்திருக்கும் சாவி கொடுத்தால் வேடிக்கை காட்டும் பொம்மை போலவே செய்கிறதே என்று சொல்லிக்கொண்டே சிரித்துள்ளார். இதனைக் கேட்ட சிப்பாயோ, மரியாதை கருதி சிரிப்பை அடக்கிக் கொண்டார். சிப்பாயை சாவி கொடுக்கும் பொம்மையாக நினைத்தவர் இரண்டாம் எலிசபெத் ராணி ஆவார்.

Share