பொதுச் சொத்து நம் சொத்தே!
Print

- சிகரம்

மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மட்டமான, இழிவான, கேவலமான இயல்புகள் பல. அவற்றைக் களைந்து சரியான செயல்பாடுகளை உருவாக்கி, செம்மைப்படுத்தத்தான், அறிவுரைகள், அறவுரைகள், நூல்கள், கல்வி, நாடகங்கள், ஊடகங்கள் எல்லாம்.

வரிசையில் முந்துதல், திருடுதல், பொய்கூறல், கீழறுத்தல், பொறாமைகொள்ளல் என்று எத்தனையோ மனித இயல்புகளில், பொதுச்சொத்துக்களை நாசஞ் செய்வதும், வீணடிப்பதும், சேதப்படுத்துவதும், களவாடுவதும் தொடர்ந்து நடக்கின்றன.

பொதுக் கழிவறை கட்டிவைத்தால் அதைவிட்டுவிட்டு, கழிவறையைச் சுற்றிக் கழிப்பது; கண்ட இடத்தில் துப்புவது, பலர் நடக்கும் இடத்தில் கழிவுகளைக் கொட்டுவது என்பது படித்தவர், படிக்காதவர், நகரத்தார், கிராமத்தார் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா தரப்பாலும் செய்யப்படுகின்றன.

தன் வீட்டுக் கழிவறையில் கழித்தபின் நீர் ஊற்றத் தவறாதவர்கள், பொது இடங்களில் நீர் ஊற்றுவதில்லை. அடுத்து வரும் நம்மைப் போன்றவர்கள் பயன்படுத்த வேண்டுமே என்ற அறிவும் பொறுப்பும் இல்லையென்றால் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியுண்டா?

நாம் கழித்ததை அடுத்தவர் அலசவேண்டும் என்று எண்ணுவது பண்பாடாகுமா? ஒருவர் செய்யும் தவற்றால் அடுத்தடுத்து வருவோர் அதைப் பயன்படுத்தாது விலகுவர் அல்லது அவர்களும் அதே தவற்றைச் செய்வர்.

தன் வீட்டில் தேவையற்றபோது மின்சாரத்தை நிறுத்தி வைக்கும் மக்கள், பொதுஇடங்களில் அதைச் செய்வதில்லை. ஆளில்லாமலும் மின்விசிறி சுற்றும், விளக்கு எரியும். திறந்த குழாயை மூடாமல் செல்வதால், கிடைத்தற்கரிய நீர் பாழாகும்.

நம் பொருளாக இருந்தாலும், பிறர் பொருளாக இருந்தாலும், பொதுப் பொருளாக இருந்தாலும், பொருள் வீணடிக்கப்படுவது மாபெரும் குற்றம்; மன்னிக்க முடியாத குற்றம். தந்தை பெரியார் அவர்கள் இதில் மிகவும் கண்டிப்புக் காட்டினார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பொதுச்சுவற்றில் கண்டதை எழுதுவது; பொது இடங்களில் எச்சில், சளி துப்புவது நம் மக்களுக்கே உரிய நடைமுறையாகி
விட்டது.

எனவே, பிஞ்சுகளாக உள்ள குழந்தைகள்தான் இதுபோன்ற தரமற்ற செயல்களைத் தவிர்த்து, மற்றவர்க்கு எடுத்துக்காட்டாய் நடந்து சமுதாயத்தைச் செம்மைப்படுத்த வேண்டும்.

செல்ல விலங்குகள் கழிவுகளைக் கூட தெருவில் விடாமல் சவ்தாள் (Plastic bags) பைகளில் ஏந்துகின்ற உயர்பண்பு அயல்நாடுகளில் உள்ளது.

சிங்கப்பூர் தூய்மையின் சின்னமாகத் துலங்குகிறது. அங்கு யாரும் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்ட மாட்டார்கள்; கழிவுகளைக் கழிக்க மாட்டார்கள்.

எதிர்வீட்டுச் சுவர் ஓரம் கழிப்பதும், குப்பை கொட்டுவதும் இங்கு எழுதப்படாத மரபு.

சுற்றுலாச் செல்லும் இடங்களில், பூங்காக்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைச் சிதைப்பது, அதில் செதுக்குவது என்று பல செயல்களைச் செய்கின்றனர். குறிப்பாக சிறுவர்கள் இச்செயலைச் செய்கின்றனர். இது முற்றிலும் தப்பு.

பொதுவழியில் முள், கல், ஆணி கிடந்தால் எடுத்து உரிய இடத்தில் போடப் பழகவேண்டும்.

தண்ணீர் வீணாக ஓடிக்கொண்டிருந்தால் நிறுத்தி வைக்க வேண்டும்.

பொது இடத்தில் குப்பை கிடந்தால் எடுத்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும். அல்லன தவிர்த்து நல்லன செய்ய இது பழக்கும்.

பூங்காக்களில் பூக்களைப் பறித்தல், புல்தரையைச் சேதப்படுத்துதல், கிளைகளை ஒடித்தல் கூடாது.

குப்பைகளைக் கொளுத்தி மாசுபடுத்தக் கூடாது. மக்கும் குப்பை, மக்கா குப்பையென்று பிரித்து ஒழிக்க வேண்டும்.

பொது இடங்களில் உள்ள பொருட்களைக் களவாடக் கூடாது.

பொதுச்சொத்து என்பது நமக்குத் தொடர்பில்லாதது என்ற அறியாமையே இச்சீர்கேடுகளுக்கெல்லாம் காரணம். பொதுச்சொத்து என்பது நம் சொத்து; அரசுச் சொத்து என்பதும் நம் சொத்தே என்ற உண்மையும் உரிமையும் உணரப்பட்டால், பொறுப்பும், போற்றலும் தானேவரும்.

பொதுச் சொத்தைப் போற்றலும், காத்தலும் பண்பாடு மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், நம் வளர்ச்சிக்கும் அது உதவக்கூடியது ஆகும் என்ற உண்மையை பிஞ்சுகள் உள்ளத்தில் பதித்து ஒழுக வேண்டும்;  பெரியவர்கள் பழக்க வேண்டும்.

Share