Home 2014 ஜூன் அறிஞர்களின் வாழ்வில்
ஞாயிறு, 25 அக்டோபர் 2020
அறிஞர்களின் வாழ்வில்
Print E-mail

பாழாய்ப் போன இருமல்

துருக்கிப் படையின் 1500 வீரர்களைக் கைது செய்து பாசறைக்குக் கொண்டு வந்தார் மாவீரன் நெப்போலியன். 2 நாள்கள் ஆனதும் உணவுப் பொருள்களின் கையிருப்புக் குறைந்தது. எனவே, அவர்களை விடுவித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

தளபதியை அழைத்து, உணவுப் பொருள்களின் கையிருப்புக் குறைந்ததால் துருக்கிப் படை வீரர்களை விடுவித்துவிடு என்றார். தளபதி தலையசைத்துத் திரும்பியபோது நெப்போலியனுக்கு இருமல் வந்தது. பாழாய்ப் போன இருமல் (Masacre Toux) என்று முனங்கிக் கொண்டே நெப்போலியன் இருமியது தளபதிக்கு மஸாக்ரேஸ் டூஸ் (Masacrez Touz) என்று புரிந்தது. மஸாக்ரேஸ் டூஸ் என்பதற்கு அவர்களைக் கொன்றுவிடு என்பது பொருளாகும்.

அனைவரையும் விடுதலை செய் என்றவர் தன் முடிவினை மாற்றிக் கொண்டார் போலும் என நினைத்த தளபதி அடுத்த விநாடி 1500 துருக்கிப் படை வீரர்களையும் கொன்று குவித்தார்.


டூமாசின் பேச்சு

தன்னை மறந்த நிலையில் கதாபாத்திரங்களுடன் ஒன்றாகி வாழ்ந்து வந்தவர் பிரெஞ்சு நாட்டின் பிரபல நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ்.

ஒரு நாள் அவரைக் காணவந்த நண்பர் அவரது அறையிலிருந்து சிரிப்புச் சத்தமும் பேச்சுச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்ததால் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். சிறிது நேரம் காத்திருந்துவிட்டு, வேலைக்காரரிடம் சென்று, உன் எஜமானுடன் யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவரைச் சந்திக்கிறேன் என்றார்.

இதனைக் கேட்ட வேலைக்காரர், என் எஜமானுடன் இப்போது யாரும் இல்லை. அவர் தன் கதாபாத்திரங்களுடன்தான் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

டூமாசின் நண்பர்கள் அவரிடம், நீங்கள் எவ்வாறு கதைகளை உருவாக்குகிறீர்கள் என்று கேட்டபோது, நான் கதைகளை உருவாக்குவதில்லை. தாமே என்னுள் உருவாகின்றன என்று பதில் கூறியுள்ளார். அது எப்படி முடியும் என்றதும், அது எப்படியோ எனக்குத் தெரியாது.

ஒரு பழ மரத்திடம் சென்று அது எப்படிப் பழங்களைக் கொடுக்கிறது என்று கேளுங்கள் என்றாராம். எழுதிக் கொண்டிருக்கும்போது நண்பர்கள் யாராவது பார்க்க வந்தால் ஒரு கையை அசைத்துக் கொண்டே இன்னொரு கையால் எழுதிக் கொண்டிருக்கும் திறமை பெற்றவர்.


பெர்னாட் ஷாவின் புத்தக வாசிப்பு

புதிய புத்தகத்தை வாங்கியதும், அதில் என்ன இருக்கும் என்று யோசித்து தம் அறிவில் பட்டதைத் தனியே எழுதி குறிப்பு எடுத்தபின்புதான் வாசிக்கத் தொடங்குவார் பெர்னாட் ஷா.

எடுத்துக்காட்டாக, உலக வரலாறு என்பது நூலின் தலைப்பு எனில், தனக்குத் தெரிந்தவரை யார் யாரைப் பற்றியெல்லாம் என்னென்ன குறிப்புகள் இடம் பெற்றிருக்கும் என்று முதலில் சுருக்கமாக எழுதி வைத்துவிடுவார். பின்னர், புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஒப்பிட்டுப் பார்ப்பாராம்.


சர்ச்சிலின் ஒத்திகை

உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவாளர் வின்ஸ்டன் சர்ச்சில், தனது ஒவ்வொரு சொற்பொழிவையும் புதிதாகப் பேசப்போவது போல் அதிக கவனத்துடன் தயாரித்துப் பேசி ஒத்திகை பார்த்துக் கொள்வார்.

ஒருமுறை, சர்ச்சில் குளியலறையிலிருந்த போது, ஏதோ பேசும் குரல் கேட்கிறதே, தன்னிடம்தான் ஏதோ சொல்கிறாரோ என நினைத்த வேலைக்காரர், அய்யா என்னை அழைக்கிறீர்களா?ஷ் என்று குரல் கொடுத்துள்ளார்.

நான் உன்னை அழைக்கவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து, அவருக்குச் சில அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறேன். எனவே, என்னை இப்போது தொந்தரவு செய்யாதே என்றாராம் சர்ச்சில்.


1586  நூல்கள்

கார்ல் மார்கஸ் மூலதனம் என்ற நூலினை எழுத 1586 நூல்களைப் படித்தாராம்.


அணுகுண்டிலிருந்து மீட்சி பெற...

முதல் அணுகுண்டுப் படைப்பின் மேற்பார்வையாளரான விஞ்ஞானி ராபர்ட் ஆப்பன் ஹீமர், அமெரிக்கக் காங்கிரஸ் குழுவின் முன்பு மூன்று அணுகுண்டு தொடர்பான விவரங்களை விளக்கினார். இதனைக் கேட்க ஏராளமான அறிஞர்களும் பெருமக்களும் திரண்டிருந்தனர்.

ஹீமர், அணுகுண்டின் அழிவுகளைக் குறித்து விளக்கம் கொடுத்தபோது, இதிலிருந்து தப்பித்து மீட்சிபெற ஏதேனும் வழி உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதனைக் கேட்ட ஹீமர், இல்லாமல் இருக்குமா? நிச்சயமாக இருக்கிறது என்றார்.

அது என்னவென்று கூறுங்கள் என்று ஆர்வத்துடன் மீண்டும் கேட்கப்பட்டது. உடனே, அதுதான் சமாதானம் என்று தமக்கு முன் இருந்த ஒலிபெருக்கியில் சொல்லிவிட்டு அருகிலிருந்த இருக்கையில் ஹீமர் அமர்ந்து கொண்டார்.

Share