Home 2014 ஜூன் உலக மக்களின் உணவு முறைகள்
வியாழன், 29 அக்டோபர் 2020
உலக மக்களின் உணவு முறைகள்
Print E-mail

அறிவாற்றல் பெறத்தொடங்கிய ஆரம்ப காலத்தில், மனிதர்கள் அனைவரும் மாமிச உண்ணிகளாகவே இருந்தனர்.  அறிவுபெற்ற மனிதர்கள் காய்கறி மற்றும் பழங்களைக் கண்டு பயந்தனர்.

பச்சையாக இருக்கும் ஒரு காய் சிவப்பாகவோ, பழுப்பு நிறமாகவோ, மஞ்சள் நிறமாகவோ மாறும் போது அதற்கு ஏதோ மந்திரசக்தி இருப்பதாகவும், அதைச் சாப்பிட்டால் சாப்பிடுபவர்களும் தங்களின் நிறம் மாறி காய்ந்து போவார்கள் என்றும் நினைத்தனர்.

காலப்போக்கில் மனித உருவத்தைக் கொண்ட குரங்குகள் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவதைக் கண்டார்கள். அவற்றிற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாததைக் கவனித்து, குரங்குகள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் பழங்களைச் சாப்பிட்டனர்.

அதன் பிறகு, தானே கனிகளைப் பறித்துச் சாப்பிட ஆரம்பித்தனர். அறிவுவளர்ச்சி அடைந்த பிறகு மாமிசத்துடன் காய்கறிகளையும் சாப்பிடத் தொடங்கினான். இதற்கு பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ஆண்டுகள் வரை ஆனது. மனிதக் குழு உலகெங்கும் பரவியதும் மனிதர்களின் உணவும் பெரிதும் மாற்றம் கண்டது.

அமெரிக்கர்கள்: அமெரிக்க மக்கள் அய்ரோப்பியர்களின் வருகைக்கு முன்பு மேய்ச்சல் நிலங்களில் வாழும் மாடுகளையே தங்களின் உணவுத் தேவைக்காக நம்பி இருந்தனர். அய்ரோப்பியர்களின் வருகைக்குப்பின் விவசாயமுறையும் நவீனமயமாகிவிட்டபடியால் கோதுமை, சோளம் மற்றும் கேழ்வரகு இவர்களின் உணவுத்தேவையில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.

அய்ரோப்பியர்கள்: அய்ரோப்பியர்களின் முக்கிய உணவு மாமிசம் ஆகும். இவர்களின் உணவில் 50 விழுக்காடு மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி 10 விழுக்காடு மீன்களும் 40 சதவீதம் காய் மற்றும் தானிய உணவு வகைகளும் இடம்பெறும். அய்ரோப்பாவில் குளிர்காலம் கடுமையான குளிராகவும் கோடை மிதமான வெயிலாகவும் இருக்கும். கோதுமை மற்றும் உருளைக்கிழங்கிற்கு உகந்த சூழல் ஆகையால் ரொட்டி உருளைக்கிழங்கு தொடர்பான உணவுவகைகளும் அய்ரோப்பியர்களால் அதிகம் உண்ணப்பட்டு வருகிறது.

ஆசியர்கள்: உலகின் மக்கள்தொகையில் 50 விழுக்காடு ஆசியாவில்தான் வாழ்கின்றனர். வெப்பமண்டல தானியப் பயிரான நெல் ஆசியர்களின் உணவில் முதலிடம் பிடிக்கிறது. அதே போல் ஆசியர்களின் உணவில் அசைவ உணவுகளைவிட சைவ உணவே அதிகம் கலந்துள்ளது. இது அதிக உடலுழைப்பைக் கொண்டு இருக்கும் ஆசிய மக்களுக்குச் சரிவிகிதமான உணவாக அமைகிறது.

அரேபியர்கள்: பாலைவனப்பகுதி வாழ் மக்களான அரேபியர்களுக்கு கோதுமை மற்றும் ஆட்டிறைச்சியுடன் மாட்டிறைச்சியும் முக்கியமான உணவாகும். இவர்களின் உணவுவகைகளில் சைவஉணவு சிறிதளவு இடம் பெறுகிறது, முக்கியமாக பேரீட்சை, மற்றும் வறட்சியான பகுதியில் வளரும் பழங்கள் போன்றவை அரேபியர்களின் உணவுவகைகளில் சேர்கிறது. அரேபியர்களின் உணவுவகையில் ஒட்டகப்பால் முக்கியத்துவம் பிடிக்கிறது. அவ்வப்போது ஒட்டக இறைச்சியையும் உணவாக உட்கொள்வார்கள்.

ஜப்பானியர்கள்: முழுக்க முழுக்க கடலால் சூழப்பட்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஆகவே இவர்களின் உணவும் கடலுணவு வகையைச் சார்ந்தது. அரிசி பருப்புவகைகளுடன் மீன் பெருமளவில் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இங்கு இறைச்சி, மீன் உணவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியர்கள்: ஆதிகால திராவிடப் பிரிவு மக்களான ஆஸ்திரேலியப் பழங்குடியினர் விவசாயத்தில் கைதேர்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். ஆகையால் அரிசி மற்றும் காய்கறிகள் இவர்களின் உணவில் முதலிடம் பிடித்தது. அசைவ உணவான மாட்டிறைச்சி மற்றும் இதர மாமிசங்கள் இரண்டாம் நிலை உணவுகளாகும். ஆஸ்திரேலியாவில் வாழும் ஈமு கோழியும், சில வகை கங்காருக்களும் இவர்களின் உணவுவகைகளில் ஒன்றாக இருந்தது. கங்காருக்கள் தேசிய விலங்காக அறிவிக்கப் பட்டவுடன் அவற்றை உணவாகக் கொள்வதையும் வேட்டையாடுவதையும் நிறுத்திக்கொண்டனர்.

ஆப்ரிக்கர்கள்: மனிதர்கள் தோன்றிய இடமாகக் கருதப்படும் ஆப்ரிக்கக் கண்டத்தில் வாழும் மனிதர்கள் நீக்ரோக்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் முக்கிய உணவு மாமிசமாகும். வேட்டையாடி அதன் மூலம் கிடைக்கும் மான், குரங்கு, காட்டு எருமை என பலவகையான தாவர உண்ணி வன விலங்குகளை உணவாகக் கொள்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் குழுவாக வாழ்வதால் உணவுத்தேவைக்காக மாடு ஆடு பன்றி போன்றவற்றையும் வளர்க்கின்றனர். இக்கால்நடை விலங்குகளின் மூலமும் தங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். தானிய உணவு ஆப்ரிக்க மக்களிடையே மிகவும் குறைவாகவே உள்ளது.

Share