Home 2014 ஜூன் பழகு முகாம்
ஞாயிறு, 25 அக்டோபர் 2020
பழகு முகாம்
Print E-mail

நான் அருண் பேசுகிறேன்

ஏதோ ஒரு குறுகுறுப்பு எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. காரணம், முதன்முதலாக அம்மா இல்லாமல் நான் வெளியே வந்திருக்கிறேன். ஒருநாள் இரண்டு நாள் அல்ல, மொத்தம் ஆறு நாட்கள். பெரியார் பிஞ்சு மாத இதழ் சார்பில், தஞ்சாவூரில் பழகு முகாம் என்று ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்களாம்.

அதற்குத்தான் சென்று கொண்டிருக்கிறேன். தனியாக அல்ல..... என் அப்பாவும் உடன் வருகிறார். ஆனால், அப்பா என்னோடு தங்க முடியாது போலிருக்கிறது. என்னை அங்கு விட்டுவிட்டு வந்து விடுவதாக பேசிக் கொண்டார்கள். ஏனோ, எனக்கு இதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. யாரோ பிரின்சாம்.... அந்த மாமாதான், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று அப்பாவிடம் உறுதியளித்தாராம். பேருந்தில், அந்த மாமாவும் எங்களுடன் வந்து கொண்டுதான் இருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவருடன் என்னையும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு பெரியார் பிஞ்சுகள் வருகிறார்கள். எனக்கு வயது எட்டு நடக்கிறது. என்னுடைய வயதிலும் சிலர் அதில் இருக்கத்தான் செய்தார்கள்.

ஆனால் அவர்களில் யாருக்கும் எனக்கிருப்பது போல தடுமாற்றம் இல்லை போலிருக்கிறது. ஆனந்தமாக அரட்டை அடித்துக் கொண்டு வந்தனர். நான் யாருடனும் பேசவில்லை. என் அப்பாவுடன் நன்றாக ஒட்டிக்கொண்டேன். நாங்கள் புறப்பட்டது மே மாதம் 4ஆம் நாள். பழகு முகாம் 05.-05.-2014லிருந்து 10.-05.-2014 வரை நடைபெறுமாம். என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை.

அம்மாவுடன்தான் நான் அதிகமாக ஒட்டிக் கொள்வேன். அம்மாவைக் கட்டிப்பிடித்தபடிதான் தூங்குவேன். எனக்குத் தனியாக எந்த வேலையும் செய்யத் தெரியாது. அப்பாவிடம் சொன்னால், அதெல்லாம் தானாகவே கற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அய்யோ.... நான் யாரிடம் சொல்வேன். காலையில் எழுந்ததிலிருந்து ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம், குளியல், உணவு, உடை.... இப்படி எதையுமே என்னால் தனியாக செய்ய முடியாது.

அப்பாவை நினைத்தால் எனக்குக் கோபம் கோபமாக வருகிறது. ஆனால், அவரை என்னால் எதுவும் செய்ய முடியாது. அதுமட்டுமேயல்ல... எனக்கு வேண்டியதையெல்லாம் அவர் வாங்கித் தருகிறார். அம்மாவும் வேண்டும், அப்பாவும் வேண்டும். இந்த ஒரு விசயத்தில் மட்டும் அப்பா என்னைப் புரிந்து கொண்டால் என்ன கெட்டுப் போய்விடும்? எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. அப்பா என்னைத் தட்டி எழுப்பினார். எழுந்தேன்... இன்னமும் விடியவில்லை.

அவரவர்கள் தங்கள் தங்கள் பைகளுடன் இறங்கிக் கொண்டிருந்தனர். எங்கள் பன்னிரண்டு பேரையும் பாதுகாப்பாக நிற்க வைத்தனர். அதில் ஒருவர், என் அப்பாவைவிட வயது கொஞ்சம் அதிகமிருக்கலாம். திடீரென்று.... என்னருகில் வந்து, என் பெயர் வடிவேலு, உங்க பேர் என்ன? என்றார். எனக்கு வெட்கமாகப் போய்விட, என் அப்பாவின் கால்களில் என் முகத்தைப் புதைத்துக் கொண்டேன். ஆனால், என் அப்பாவோ, அந்தப் புதிய மனிதரிடம் எனது பெயரைச் சொல்லச் சொல்லி என்னை உந்தித் தள்ளினார். நானும் வேறு வழியின்றி, என் பெயர் அருண் என்று சொன்னேன்.

அவர் மீண்டும், முழுப்பெயரே அருண்தானா? என்று கேட்டார். விடமாட்டார் போலிருக்கிறதே? என்று எண்ணிக்கொண்டு அருண்மொழிப் பாண்டியன் என்று சொன்னதும், திடுக்கிட்டது போல, உடலைக் குலுக்கினார். ஏனோ, எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவரோ, அனைவரின் கவனத்தையும் என் மீது திருப்பி, கேட்டீங்களா.... அருண்மொழிச் சோழன் மாதிரி பாண்டியன் என்று ஏதோ சொன்னார்.

எல்லோருடைய பார்வையும் என் மீது விழுந்தது. எனக்கு இன்னமும் வெட்கமாகப் போனது. எப்படி எடுத்த உடனே அடுத்தவங்ககிட்ட இப்படிப் பேச முடியுது? இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை பேருடன் அறிமுகம் ஆனது, கொஞ்சம் திகட்டினாலும் ஏனோ ஆனந்தமாகவும் இருந்தது.

அதன்பிறகு, எல்லாமே வேக வேகமாக நடைபெற்றது. சற்றுநேரத்தில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் என்று சொன்னார்கள். அம்மா...டி இவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்தை நான் பார்த்ததே இல்லை. பள்ளிக்கூட கட்டிடத்தைவிட மரங்கள்தான் அதிகம் இருந்தது. அப்புறம்... அப்புறம்... சிலுசிலுன்னு குளிர்ர்...ரா இருந்துச்சு, நல்லா.... இருந்துச்சு.

அப்புறம், எனக்கு பிளட்டெஸ்ட் எடுத்தாங்க, ம்.... என்னைப் பத்திக் கேட்டுக் கேட்டு எழுதிக்கிட்டாங்க, அப்புறம் அப்பா புறப்பட்டுட்டாரு. அப்பாவைப் பிரியும் ஏனோ எனக்கு அழுகை வரும்போல இருந்திச்சு. ஆனால், நிறைய்ய... சின்னப் பசங்க, என்ன மாதிரி.... ஏதோ பறவைகள் சரணாலயம் மாதிரி.... குழந்தைகள் சரணாலயமா அந்த இடம் எப்பப்பாரு கயமுய கயமுய என்று பேச்சு இருந்துக்கிட்டே இருந்திச்சு. எனக்கு இது புதுசு. எனக்கு இது புடிக்கும் போலத்தான் இருந்தது.

அப்பா புறப்படும்போது, வடிவேலு மாமாகிட்ட என்னைக் காட்டி ஏதோ சொல்லிக்கிட்டிருந்தாரு. அவரும் சரி சரி அப்பிடிங்கிற மாதிரி தலையைத் தலையை ஆட்டுனாரு.

சென்னையிலிருந்து வந்திருந்த சின்னப் பசங்கள்ல மூணுபேரு என்னோட ரூம் மேட்டாயிட்டாங்க. முதநாள்ல நிறைய சொல்லிக் குடுத்தாங்க. அதுல எனக்கு ரொம்பப்புதுசு எதுன்னா, அதிகாலை நேரத்தில் ஜாக்கிங் போனதுதான். ஆனால், மத்தவங்களைப்போல நான் இல்ல. எனக்கு அம்மா நினைவு வந்திடுச்சு. எங்களைக் கவனிச்சிக்க அம்மா மாதிரியே டீச்சர்ஸ் இருந்தாங்க.

ஆனால், இவங்க அம்மா இல்லையே!  நிறைய்ய... மாமாக்களெல்லாம் எங்களோட ஜாக்கிங் வந்தாங்க. அப்புறம், கராத்தே, சிலம்பம், யோகா, ஏரோபிக்ஸ்... ஏதேதோ சொல்லிக் குடுத்தாங்க. நான் முதல் நாள்ல ஏரோபிக்ஸ்தான் கத்துக்கிட்டேன். எனக்கு அது சரியா வர்ல... இன்னும் கத்துக்கணும்... அப்புறம் ரொம்ப முக்கியமான விசயம்... நான் முதன்முதலா தனியா குளிச்சிட்டேன்.

வந்திருந்த எல்லோரையும் ஒன்னா உட்கார வைச்சு தொடக்க விழான்னு நடத்தினாங்க. அதில பேசின அன்பு மாமா, உங்களுக்கெல்லாம் கணக்கு, அறிவியல் பாடத்துக்கு டியூசன் நடத்தப் போறோம்னு சொன்னாரு... ஆகா... இது என்னடா இங்கயும் வம்பாப் போச்சுன்னு பயந்துட்டேன். அப்புறம்...?

(அடுத்த இதழ்ல சொல்வார் அருண்)

வெய்யிலுக்கு இதமாய் குடிக்க, கடிக்க...

நாள்தோறும் காலை நடைப்பயிற்சிக்கு முன்பு : பிஸ்கட், பால் அல்லது தேநீர்

இடைவேளைகளில் : எலுமிச்சை சாறு, கேக், நெல்லிச்சாறு, கடலை அச்சு, தர்ப்பூசணி, தேங்காய் பிஸ்கட்டுகள், மோர், ரோஸ் மில்க், வெள்ளரி, தேநீர், சுண்டல்

மாலையில்: இனிப்பு அவல், தேநீர் அல்லது பால்.
பட்டாணி - மாங்காய் சுண்டல், தேநீர்.
புட்டு, பிஸ்கட், பால்.
மைசூர்போண்டா, மிக்சர், தேநீர்.

8-12 வயதினருக்கான பயிற்சிகள்:

உடற்பயிற்சி, யோகா, சிலம்பம், கராத்தே, ஏரோபிக்ஸ், ஓவியம், மணல் சிற்பம், கைத்தொழிகள், ஆளுமை மேம்பாடு, உணவுப் பழக்கம், சாலை பாதுகாப்பு, கணிதத் திறன், நூலகப் பயிற்சி, பேச்சு, நினைவுத்திறன் பயிற்சிகள், பண-நேர மேலாண்மை, திட்டமிடல், வரலாற்றுச் சுற்றுலா, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, முதலுதவிப் பயிற்சி, விளையாட்டு, குழந்தைகள் நலன் பாதுகாப்பு.

பிஞ்சு மடல்

மானமிகு தமிழர் தலைவர் கி.வீரமணி தாத்தா அவர்களுக்கு நன்றி! நன்றி!!

பேரன்பு கொண்ட மானமிகு தமிழர் தலைவர் கி.வீரமணி தாத்தா அவர்களுக்கு வணக்கம். நான் கடந்த 04.05.2014 மாலை 6.00 மணி முதல் 10.05.2014 நண்பகல் 1.30 மணிவரை தாங்கள் ஏற்பாடு செய்த பெரியார் பிஞ்சு பழகு முகாமில் கலந்து கொண்டமைக்குப் பெருமைப்படுகிறேன்.

நான் இப்பழகுமுகாமில் சிலம்பம், கராத்தே, யோகா போன்றவற்றையும், மன அழுத்தத்தைக் கையாளுவதற்கும், இந்த வளரிளம் பருவத்தில் நேரம், வெளியுலகத் தொடர்பைக் கையாளுவதற்கும் கற்றுக்கொண்டேன்.

அது மட்டுமல்லாமல் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இந்தப் பழகு முகாமில் எனக்கு உதவிய ஆசிரியப் பெருமக்களுக்கும், பிரின்ஸ் அண்ணா அவர்களுக்கும், பேராசிரியை பர்வின் அம்மா அவர்களுக்கும், மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் தாத்தா அவர்களுக்கும், தங்கள் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து எங்களுக்கு வழிகாட்டிய உங்களுக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!!

இப்படிக்கு,   எஸ்.என்.ஏ.குழலி, திருவாரூர்

(அடுத்த இதழ்ல சொல்வார் அருண்)

Share