Home 2014 ஜூலை ஜெர்மனிக்கு வரீங்களா?
சனி, 28 மே 2022
ஜெர்மனிக்கு வரீங்களா?
Print E-mail

சார்லஸ் IV மன்னர் சிலை அருகில்

பாசத்திற்குரிய பேத்திகளே, பேரன்களே,

எப்படி இருக்கீங்க? பள்ளி, கல்லூரி விடுமுறை முடிந்து மீண்டும் படிக்கத் தொடங்கி விட்டீர்களா?

விடுமுறையை எப்படிச் செலவழித்தீங்க... புதுசு புதுசாக என்னென்ன பாத்தீங்க? எந்தெந்த ஊருக்குப் போனீங்க?

எப்பவும் விடுமுறைகளை நீங்கள் கழிக்கும் முறைபற்றி ஒரு சிறு கட்டுரை போன்ற குறிப்பை உங்களது டைரி... இல்லாவிட்டால் ஒரு தனி நோட்டுப் புத்தகம் போன்றவற்றில் எழுதி பதிவு செய்து பத்திரமாக வைத்துக் கொண்டே வந்தால், பிறகு பல ஆண்டுகள் கழித்து அதைப் படிக்கும்போது _ அதிலும் நீங்கள் எல்லாம் வளர்ந்து பெரியவர்களாகும்போது மிகமிக ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் கூட இருக்குமே! இல்லையா...?

ஜூன் முதல் வாரத்தில் நானும் நம்ம பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் அவர்களும், ஜெர்மனி சென்றிருந்தோம்.

TRAMல் பயணம் செய்யும்பொழுது

அந்நாட்டின் மூத்த பல்கலைக்கழகங்களில் முதன்மையானதான கொலோன் பல்கலைக்கழகத்தின் சார்பில் நமது திராவிடர் இயக்கம், பெரியார்தம் பகுத்தறிவுத் தொண்டின் தாக்கம் பற்றியெல்லாம் பேசுமாறு அழைத்திருந்தனர்;

அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான தென்கிழக்கு நாடுகள் _ தென்கிழக்காசிய நாடுகளின் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துறை பேராசிரியர் திருமதி உல்ரிக் நிக்கலஸ் (இவர் நம்ம தொல்காப்பிய நூலை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்!) அவ்வளவு அன்பும் ஆற்றலும், உபசரிக்கும் உயர் பண்பும் கொண்டவர். அவரது துறையின் நண்பர்கள் திருவாளர் சுவன் அவர்களும், திருமிகு கிளாடியா அவர்களும்கூட அதேபோல மிகுந்த நட்புணர்வு கொண்டு, தொண்டு மனப்பான்மையுடன் பழகுபவர்கள்.

அங்கிருந்த ஒரு வாரமும் எங்களுடன் ஒரு குடும்பமாகப் பழகினார்கள்.

பிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில்

பெரியார் சிந்தனைகளால் கவரப்பட்ட ஜெர்மானிய நண்பர்கள் என்றாலும், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற நம் கணியன் பூங்குன்றப் புலவரின் சிந்தனை அங்கே சிறகடித்துள்ளதைப் பார்த்தோம்; பரவசமானோம்!

என்ன தாத்தா... ஜெர்மனியில் கண்டீர்கள் என்று அவசரமாக நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது!

பிராங்க்ஃபர்ட் (Frankfurt) பெருநகரத்தின் வியக்கத்தக்க பெரிய விமான நிலையத்தில் இறங்கியதும் பேராசிரியர் உல்ரிக் எங்களை வரவேற்று ரயிலில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

ரயில் வசதி ஜெர்மனி நாட்டில் எங்கும் ஏராளம் உண்டு. காலை குறிப்பிட்ட நேரம் 8.02(A.M.) என்றால் 8.02 மணித்துளிகளுக்குச் சரியாக வரும் ரயில்முறை.

(தற்போது சில இடங்களில் அங்கும் நம்மூர் மாதிரி காலதாமதம் என்றாலும் அது சிறு அளவே).

எங்களை அழைத்துப்போக ஒரு மணிநேரம் தள்ளி வரும் தொடர்வண்டிக்குப் பயணச் சீட்டு வாங்கியிருந்தார் பேராசிரியர் அம்மையார்!

எதிர்பார்த்ததைவிட நாங்கள் விமானத்திலிருந்து இறங்கி விரைந்து வெளியே வந்துவிட்டதால், ஏன் தேவையின்றி ஒரு மணி நேரத்தை இந்த நடைமேடையில் காத்திருந்து வீணாக்க வேண்டும் என்று எண்ணி, பேராசிரியர் அம்மையார் அவர்கள், பயணச் சீட்டை மாற்றி எடுக்க அந்தப் பணிமனைக்குச் சென்றார்; ஏற்கெனவே வாங்கிய பயணச் சீட்டுக்கு, பணம் திருப்பி வாங்கிட, ஒரு சான்றிதழ் பெற்றுத் திரும்பினார்!

சென்னை-_திருச்சி மாதிரி தூரம்; பிராங்க்ஃபர்ட்டிலிருந்து கொலோன் நகரத்திற்கு. 55 மணித்துளிகளில் ரயில் பறந்தது! விரைந்தது! வெளியில் எங்கும் பசுமை நிறைந்த காட்சிகள்.

கண்ணுக்கு இதம் தரும் இக்காட்சிகளிடையே சிறுசிறு கிராம வீடுகள், நகரங்கள், எல்லாம் ஓடோடின. ரயில் வேகத்தில் அவை ஓடும்படித் தானே தெரியும் _ இல்லையா? சுவைத்தோம். அங்கு பணியாற்றும் ஜெர்மனிப் பெண் ஒரு புத்தகத்தை விரித்துப் படித்து வந்தார்! பிஸ்கெட் பாக்கெட், தேனீர் வாங்கி வந்தார் நண்பர் எங்களுக்குத் தர! ரயிலில் அந்த வசதி உண்டு. அந்த இளம்பெண் பான் (Bonn) ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டார்.

கொலோன் _ பெரிய நகரம். பழைய சிற்பக்கலையில் மாபெரும் சர்ச், மாதாகோவில் _ கட்டிடக்கலையின் அழகு வடிவம்; இப்போது அங்கு பழுது பார்க்கிறார்கள். தொடர்வண்டி நிலையம் விட்டு இறங்கியவுடன் பார்த்தோம்; கம்பீரமாகக் காட்சியளித்தது.

வேன் மாடலில் இருந்த டாக்சியில் (வாடகை உந்து) பெட்டிகளை ஏற்றி எங்களுக்கு என ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டல் இபீஸ் (Hotel Ibis) சென்று பெட்டி படுக்கைகளை இறக்கி வைத்தோம். சிறு அறை _ ஆயினும் கச்சிதமாக அமைதியும் தூய்மையும் நிறைந்திருந்தது. இரவு 10 மணிக்குமேல் லேசான குளிர். மற்றபடி கடுமை இல்லை. வெளியில் நடந்து சென்றோம்.

ஒரு துருக்கியர் உணவு விடுதியில் அங்குள்ள பிரபல இனிப்பான பக்ளவா (Baklava) வாங்கித் தந்தனர்;  அது நல்ல இனிப்பான துருக்கியரின் தனி சுவீட் என்பது எனக்குத் தெரியும். சாலாது (Salad),  கீரை, ரொட்டி சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டே திரும்பினோம்.

நகரம் முழுவதும் செல்ல டிராம் (Tram) வசதியாக உள்ளது! ஒரு வாரத்திற்குப் பயன்பட மொத்தமாக பயணச்சீட்டுகளை _ சலுகை விலையில் எங்களுக்கு வாங்கித் தந்துவிட்டார் பேராசிரியர். அறையின் சாவி முக்கியம் என்றும் கூறினார்.

எங்கும் அமைதியாக இருந்தது! ஜெர்மனி நாட்டின் மக்கள் தொகை 4 கோடிதான்! தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சரிபகுதி தானே! எனவே நடமாட்டம் குறைவே. ஒழுங்கு, கட்டுப்பாடு எதிலும். பிறகு அடுத்து எழுதுவேன்.

பிரியமுள்ள தாத்தா,
கி.வீரமணி

Share