Home 2014 ஜூலை தூய்மை... ஒழுங்கு... சிங்கப்பூர்!
சனி, 28 மே 2022
தூய்மை... ஒழுங்கு... சிங்கப்பூர்!
Print E-mail

ஒரு பெரியார் பிஞ்சின் பயண அனுபவம்

என் பெயர் அன்பு. நான் ஏழாம் வகுப்பு அ பிரிவு படிக்கிறேன். கோடை விடுமுறையில் இந்த முறை சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பெற்றோருடனும், தங்கையுடனும் முதல்முறையாக விமானப் பயணம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. சென்னை விமான நிலையத்தைவிட சிங்கப்பூர் விமான நிலையத்தில் நிறைய வசதிகள் இருந்தன.

அங்கு பயணிகள் தங்கள் பைகளுடன் சிரமப்படாமல் நடப்பதற்கும் படி ஏறுவதற்கும் இறங்குவதற்கும் எஸ்கலேட்டர் வசதியும், லிப்ட் வசதியும் உள்ளது. இது குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

அங்கு போக்குவரத்து வசதி மிகவும் எளிமையாக உள்ளது. பேருந்து மற்றும் இரயிலில் பயணிக்கும்போது ஒவ்வொரு முறையும் டிக்கெட் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக பயணச்சீட்டு அனுமதி அட்டையைப் பயன்படுத்தி உள்ளே செல்லலாம்.

ஈஸ்ட் கோஸ்ட் பீச் எனும் இடத்தைப் பார்த்தேன். அந்த இடத்தில் சுத்தமாக இருந்த மணலையும், கடல் தண்ணீரையும் பார்த்தேன். அங்கே வாடகைக்கு மிதிவண்டி கிடைக்கும். அங்கு இருந்த மிதிவண்டி எடுத்து ஓட்டினேன்.

அடுத்தது மீன் பண்ணைக்குப் போனேன். அங்கு பலவகை வண்ண மீன்கள் வளர்க்கப்படுவதையும், ஏற்றுமதி செய்வதையும் பார்த்தேன். 2 லட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு மீனைப் பார்த்து மகிழ்ந்தேன். அதன் பாதுகாப்பாளரிடம் அனுமதி பெற்று மீனுக்கு அதற்கென்று உள்ள உணவைக் கொடுத்தேன்.

அடுத்தது விலங்கியல் பூங்காவிற்குச் சென்றேன். அங்கு விலங்குகள் கூண்டுக்குள் அடைக்கப்படாமல் வெளியே மேய்ந்துகொண்டு இருந்தன. ஒரு சிங்கத்தைப் பார்த்தேன். அது ஒரு மாமிச உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து நான் பயந்து போனேன்.

ஒரு பெரிய ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்தேன். அது ஒட்டகச்சிவிங்கி பொம்மையா அல்லது ஒட்டகச்சிவிங்கியா என்று எனக்குத் தெரியவே இல்லை. அதன் கழுத்து மிகவும் நீளமாக இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.

நான் அங்கே பறவைகள் சரணாலயம் சென்றேன். விதவிதமான பறவைகளைப் பார்த்தேன். அங்கே ஒரு பறவைக்கு உணவு கொடுத்தேன்.
அடுத்ததாக செந்தோசா போனேன். அங்கே எனக்குப் பிடித்த விசயங்கள்  நிறைய இருந்தன. அங்கு கேபிள் காரில் பயணம் செய்தேன்.

மீன் பண்ணையில் மீனுக்கு உணவு

எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மிக உயரத்திலிருந்து சிங்கப்பூர் துறைமுகத்தில் ஏராளமான கப்பல்களைப் பார்த்து ரசித்தேன். அங்கே பெரிய பெரிய சறுக்கு மரங்கள் உள்ள நீச்சல் குளத்திற்குச் சென்றேன். ரொம்ப மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தேன். இது போன்ற நீச்சல் குளம், பயிற்சி மய்யங்கள் அங்கு நிறைய உள்ளன.

அங்கே என் சித்தப்பா வீட்டிலும் எங்க அத்தை வீட்டிலும் தங்கினேன். அங்கேதான் ரொம்ப சுத்தமான சாலையைப் பார்த்தேன். அங்கு குப்பைகள் பெயருக்குக்கூட கிடையாது. அங்கு மூலைமூலையாக குப்பைகள் கொட்டிவைக்கப்படுவது கிடையாது. அப்படி ஒரு சுத்தத்தைப் பார்த்தேன். எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

அங்கே ஒரு சிங்கத்தின் சிலையைப் பார்த்தேன். அதன் பெயர் மேர்ல்லயன். சிங்கப்பூரின் அடையாளமாக இந்த சிலை உள்ளது. மீன் உடம்பும் சிங்கத் தலையும் கொண்ட அந்தச் சிங்கத்தின் வாயிலிருந்து தண்ணீர் கொட்டும்.

இரவு நேரத்தில் அதை வண்ண விளக்குகளால் ஒளிமயம் ஆக்கிவிடுவார்கள். இதை நான் ரொம்ப ரசித்து மகிழ்ந்தேன். அங்கே பழைய சீன உழைப்பாளர்களின் சிலை எல்லாம் இருந்தது. அதை நான் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தேன்.

விலங்கியல் பூங்காவில் கடல் சிங்கம் காட்சியைக் காணும் பார்வையாளர்கள்

அங்கே ஒரு நூலகத்திற்குப் போனேன். அங்கு அனைவருக்கும் தனித்தனியே படிப்பதற்கு நிறைய வசதிகள் உள்ளது.

மேலும், அறிவியல் மய்யம், பவுலிங விளையாட்டு மய்யம் உள்ளிட்ட ஏராளமான இடங்களுக்குச் சென்று வந்தோம். அனைத்து இடங்களுக்கும் சென்றுவர பேருந்து, இரயில், மகிழுந்து வசதிகள் மிக எளிமையாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. தூய்மை, அமைதி, விதிகளை மீறாத ஒழுங்கு மிகுந்த சிங்கப்பூர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

(சிங்கப்பூர் பயணம் தொடரும்)

Share