பிரபஞ்ச ரகசியம் -13
Print

விண்மீன் மண்டலம்

- சரவணா இராஜேந்திரன்

பெருவெளி அல்லது பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வு அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுமேரியர்கள் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்றாலும் அவை பெரும்பாலும் மூடநம்பிக்கையை மய்யமாக வைத்தே இருந்தது. சில அறிவியல் அறிஞர்கள் கால இடைவெளியில் இந்த மூடநம்பிக்கைகளை உடைத்து உண்மைகளை மக்களுக்கு உணர்த்தினர்.

ஆனாலும் பலவித எதிர்ப்பின் காரணமாக கடந்த 19-ஆம் நூற்றாண்டுவரை வானியல் பற்றிய அறிவுத்தேடல் மிகவும் மெதுவாகத்தான் இருந்தது. கலிலியோ போன்ற அறிஞர்கள் இல்லையென்றால் நாம் இன்றைய விண்வெளியைப் பற்றி அறிந்திருக்க முடியாது. இந்த அறிஞர்கள் வானவியலைப் பற்றி முழுமையான தகவலைத் தராவிட்டாலும் இன்று வானியலைப்பற்றிய தேடலுக்கான ஒரு பெரும் பாதையைத் திறந்துவிட்டனர். இன்றும் நாம் அவர்களின் வழிகாட்டுதலில்தான் பயணிக்கிறோம்.

நாம் இதுவரை படித்த பிரபஞ்ச ரகசியம் 12 பாகங்களும் அவர்கள் தொடங்கிவைத்த ஆரம்பப் புள்ளியின் விரிவுதான். நமது நவீன விண்வெளி அறிவியல் பயணம் தொடங்கி 50 ஆண்டுகள் கூட ஆகவில்லை, ஆனாலும் இந்த அய்ம்பது ஆண்டுக் காலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பார்த்துவந்த விண்வெளியின் புதிர்கள் பலவற்றிற்கு நாம் விடை கண்டுவிட்டோம்.

கலிலியோவின் கைவண்ணத்தில் உருவான தொலைநோக்கி நமக்கு கோள்களின் உண்மையைக் கூறியது. புருனோவின் அதீத அறிவாற்றல் நமது சூரிய மண்டலத்தையும் தாண்டி பெருவெளியில் நம்மைப் பயணிக்க வைத்தது. வானியல் பற்றிய துளியும் அறிவில்லாத காலத்தில் மக்கள் தங்களின் அறிவிற்கு எட்டாதவற்றைப் பற்றி பல்வேறு கற்பனைக் கதைகளை உருவாக்கி அவற்றுடன் வானத்தின் தோற்றங்களைப் பொருத்திப் பார்த்தனர்.

புருனோ

அவற்றிற்குப் பல புனைப்பெயர்களையும் கொடுத்து கற்பனையான ஓர் உருவத்தை வரைந்து வைத்தார்கள். பிற்காலத்தில் அதைச் சிலையாக வடித்து கல்லைப் பூசை செய்து வந்தனர். எடுத்துக்காட்டாக மழையை, வருண பகவான் என்று அழைத்தனர். காற்றை, வாயுபகவான் என்று அழைத்தனர்.

சூரிய வெப்பத்தால்தான் நீர் ஆவியாகி மலைமுகடுகளால் தடுக்கப்பட்டு குளிர்ந்த காற்றுப் பட்டவுடன் மழையாகப் பொழிகிறது என்று அக்கால மக்கள் அறியவில்லை. அதே நேரத்தில் காற்று என்பது வெறும் பிராண வாயு மாத்திரம் அல்ல, பல்வேறு வகையான வாயுக்கள் நமது வளிமண்டலத்தில் உள்ளது. அப்படிப் பார்த்தோமென்றால் வாயு பகவானில் பல பிரிவுகள் இருந்திருக்க வேண்டுமே.

மக்கள் அறிவியல் வளர்ச்சியடையாத அன்றைய காலகட்டத்தில் கற்பனைக் கதைகளை நம்பிக்கொண்டு இருந்தனர்! தற்போது வானியல் பற்றிய பல உண்மைகளை அறிந்த பிறகும் படித்தவர்கள் கூட பண்டையகாலக் கதைகளை நம்பிக்கொண்டு இருக்கின்றனர். தற்போது வானியல் அறிவு பற்றிக் கூறினால் உடனே புராணங்களை எடுத்து நீட்டிவிடுகிறார்கள்.

இதோ இதைப்பற்றி எங்களது கடவுள் முதலிலேயே கூறியிருக்கிறார் என்று தாங்களும் முட்டாளாகி கேள்வி கேட்பவர்களையும் குழப்பி விடுகிறார்கள். அறிவியல் என்பது கேள்விகேட்டு, அதற்கான சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, அவ்விடையில் இருந்து மேலும் கேள்விகேட்டல் ஆகும். ஆனால் மத நூல்கள் எல்லாம் கேள்வி கேட்கவே கூடாது என்று உறுதியாகக் கூறுகின்றன. நீங்கள் கேள்விகேட்டால் கடவுளுக்கு எதிராக மக்களைத் திரட்டுபவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படும்.

புருனோவைப் பற்றி நாம் அனைவரும் முந்தைய பெரியார் பிஞ்சு இதழில் படித்துள்ளோம். மதகுருமார்கள் பூமி, வானம், நிலவு, சூரியன் மற்றும் விண்மீன்கள் பற்றி பல்வேறு புனைக்கதைகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்கிக்கொண்டு இருந்த காலகட்டத்தில் புருனோ இவ்வாறு கூறினார் நாம் வாழும் இந்த பூமி இப்பெருவெளியில் காணப்படும் தூசிகளில் ஒன்றுதான்.

நாம் சூரியமண்டலத்தை விட்டு தூரம் சென்று பார்ப்போமானால் நமது பூமி கண்களுக்குத் தெரியாது, அதைவிட நமது சூரியனுடன் பல்வேறு விண்மீன்களும் ஒன்று சேர்ந்து இரவில் பார்க்கும் விண்மீன்கள் போல் காட்சிதரும். அந்தக் கூட்டத்தில் நமது சூரியன் எது என்று நாம் குழம்பிப் போவோம். மேலும், இவ்வளவு பெரிய பெருவெளியைப் படைத்தது கடவுள் என்பது முட்டாள்களின் வாதம், இது கடவுளால் படைக்கப்பட்டது அல்ல என்று உறுதியாகக் கூறினார்.

கடவுள் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் பலர் தங்கள் பிழைப்பில் மண்விழுந்துவிடப் போகிறதே என்று நினைத்து அனைத்து வல்லமையும் படைத்த கடவுளை இகழ்கிறார்கள் என்று புருனோ மீது குற்றம் சுமத்தி அவரை உயிரோடு எரித்துவிட்டனர். புருனோ எரிநெருப்பின் வேதனையிலும் இவ்வாறு கூறினார், மூடர்களே இந்த நெருப்பு என் உடலை மாத்திரம் தான் எரிக்கும், வரும் காலத்தில் நான் பரப்பிய இந்தப் பெருவெளியைப்பற்றிய அறிவு நெருப்பு உங்கள் அனைவரின் நம்பிக்கைகளைப் பொசுக்கிச் சாம்பலாக்கிவிடும்.

அப்போதும் உங்கள் பேச்சை நம்ப சிலர் இருப்பார்கள். அதாவது ஒளிவிடும் விண்மீன்களுக்கு இடையே சில கருமையான இடங்களைப் போன்று உங்களின் மூடத்தனத்தை நம்பும் மூடர்களும் இருப்பார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் அறிவொளி பரப்பும் விண்மீன்களைத்தான் பார்க்க விரும்புவார்கள் கருமை சூழ்ந்த பிற இடங்களை அல்ல என்று கூறி உயிர்விட்டார்.

இன்றும் நாம் வானவியலைப் பற்றிய பல மூட நம்பிக்கைக் கதைகளைக் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். படித்தவர்கள் கூட இதை மத நம்பிக்கை என்ற பெயரில் நம்புகின்றனர். உதாரணத்திற்கு சமீபத்தில் செவ்வாய்க்கோளை ஆராய நமது இந்திய வானியல் ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) மங்கள்யான் என்ற விண்கலத்தை ஏவியது.

ஏவியவர்கள் பெரிய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் அவர்களின் தலைவர் ஒரு வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று மங்கள்யானின் வரைபடத்தையும் மங்கள்யான் மாதிரியையும் வைத்து வழிபட்டு பிறகு விண்கலம் ஏவப்பட்டது. பார்த்தீர்களா! அறிவியல் அறிஞர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட தாங்கள் படித்த படிப்பின் மீது வைக்கும் நம்பிக்கைகளைவிட ஏதோ ஒருகாலத்தில் பொய்யாக மக்களை ஏமாற்றப் பயன்பட்ட கடவுளை நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இது போன்ற முட்டாள்தனமான செயல்களால் அறிவியலை ஆர்வமாகப் படிக்கும் குழந்தைகளும் குழம்பிப் போவார்கள். இந்த அறிவியல் அறிஞர்கள் மெத்தப்படித்தும் மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வராமல் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

புருனோ கூறிய மின்னிடும் விண்மீன்களிடையே இருக்கும் கருமைப்பொருட்கள் இவர்கள் போன்றவர்கள் தானே?

இரவு நேர வானத்தின் முகவரிகள்

முதலில் கூறியது போல வானியல் அறிஞர்கள் வானில் விண்மீன்களைக் கண்டறிய ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை வைத்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, திருநெல்வேலியில் இருந்து ஒருவர் சென்னையில் உள்ள உங்களது வீட்டிற்கு ஒரு தபால் அனுப்புகிறார் என்று வைத்துக் கொண்டால் என்ன செய்வார்? முதலில் உங்கள் பெயர், பிறகு உங்கள் வீட்டு எண், அதன் பிறகு வசிக்கும் தெரு, நகரத்தின் பெயர் இவற்றைக் குறிப்பிடுவார்.

அதுபோலத்தான் விண்ணில் மின்னிடும் விண்மீன்களை அடையாளம் கொள்ள விண்மீன் குழுக்கள், அவற்றின் தன்மை, ஒளிவிடும் ஆற்றல் போன்றவற்றைக் குறிப்பிட்டனர். இதை நாம் விரிவாக முந்தைய இதழில் தெரிந்து கொண்டோம். ஜோதிடர்கள் மொத்தம் 12 இராசி (விண்மீன் மண்டலம்) மற்றும் 27 விண்மீன்களைக் குறிப்பிட்டனர். ஆனால் அறிவியலாளர்கள் மொத்தம் 87 விண்மீன் மண்டலங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

12 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்மீன்களைப் பற்றிய முழு விபரங்களைத் திரட்டியுள்ளனர். இந்த ஜூலை(மாதப்பருவத்தில்) வானில் தெரியும் இரண்டு விண்மீன் குழுமங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வோம்.

கோடைக்கால வானில் நம் கண்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய விண்மீன் மண்டலத்தில் விருச்சிகம் எனப்படும் ஸ்கார்ப்பிய விண்மீன் மண்டலம், மற்றும் துலா எனப்படும் லிப்ரா விண்மீன்மண்டலம் கன்னி எனப்படும் விர்கொ, தனுசு எனப்படும் சஜிடெரியஸ் போன்ற நன்கு பழக்கப்பட்ட பெயர்களுடைய விண்மீன் மண்டலங்களும் அறிவியலாளர்களால் பிரிக்கப்பட்ட ஆட்டிடையான்(Bootes), யாழ் (lyra), பாம்பு(serpens), புஜங்கதாரி(ophiuchus) போன்றவை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் முழுவதுமாகத் தெரியவரும்.

உயரமான ஒரு பகுதி அல்லது வானம் முழுமையாகத் தெரியும் இடத்தில் இருந்து கவனித்தால் இவை அனைத்தையும் உங்களால் எளிதாக அடையாளம் காண முடியும். கோடையில் தென்வானின் உச்சியில் தோன்றும் இரவு 10 மணிக்குப் பிறகு மிகவும் தெளிவாக முழுவடிவமாகத் தோன்றும் இந்த மண்டலத்தில் ஆல்பா ஸ்கார்பி (antares), அண்டாரஸ், ஸ்கார்பி பீட்டா கிராஃபியஸ், டெல்டா த்ஷூபா, எப்சிலான் வெய், ஸ்கார்பி லாம்டா, மற்றும் தீட்டா ஸ்ர்க்காஸ் போன்ற விண்மீன்கள் அடங்கியுள்ளன.

ஆல்பா ஸ்கார்பி என்ற அண்டாரஸ் தமிழில் கேட்டை (ஜ்யோஷ்டா) என்று அழைக்கப்படும். இது சூரியனைக் காட்டிலும் சுமார் 30,00,000 மடங்கு பெரியது. இந்த விண்மீன் எவ்வளவு பெரியது என்றால் ஒளியின் வேகத்தில் ஒரு ராக்கெட்டில் பயணம் செய்தாலும் இதை முழுமையாக ஒரு சுற்று சுற்றிவர ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும். இது ஆனிமாத நட்சத்திரம் என்றழைக்கப் படுகிறது.

ஆனி மாத முழுநிலா இந்த நட்சத்திரத்தின் அருகில் தோன்றுவதே இந்தப் பெயர்வரக் காரணமாகும். இந்த விண்மீனும் நமது சூரியனைப்போல் தெளிவான தனித்த மிகப்பெரிய விண்மீனாகும். இந்த விண்மீன் நமது பூமியிலிருந்து 425 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது இது இளஞ்சிவப்பு வண்ணத்தில்(Pink) மிகவும் அழகிய வடிவில் நமது கண்களுக்குத் தெரியும். விருச்சிக விண்மீன் மண்டலத்தின் தலைப்பகுதியில் வரிசையாக பீட்டா ஸ்கார்பி, டெல்டா ஸ்கார்பி, மற்றும் எப்சிலான் ஸ்கார்பி போன்ற விண்மீன்கள் உள்ளன. இவை அனைத்தும் வரிசையாக அழகுடன் காட்சிதரும்.

உயிரினம் வாழ ஓர் உலகம் துலா விண்மீன் மண்டலம்

விண்மீன் மண்டலங்களில் பல விண்மீன்கள் உள்ளன என்பதை நாம் அறிந்துள்ளோம். நமது சூரியனும் ஒரு விண்மீன்தான். நமது சூரியனைச்சுற்றி கோள்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நமது பூமி.

அப்படி யென்றால் பிற விண்மீன் மண்டலங்களில் உள்ள விண்மீன்களைச் சுற்றி கோள்கள் உண்டா? அப்படி உண்டென்றால் அந்தக்கோள்களில் உயிரினம் வாழ்கிறதா? இக்கேள்விக்கான விடையினை அடுத்த தொடரில் தெரிந்து கொள்வோம்.

Share