Home 2014 ஆகஸ்ட் பிஞ்சுகளின் ஆளுமை!
சனி, 31 அக்டோபர் 2020
பிஞ்சுகளின் ஆளுமை!
Print E-mail

ஆளுமை  என்பதை Personality என்று ஆங்கிலத்தில் கூறுவர். Personality என்றால் தோற்றமிடுக்கு என்று தவறான பொருள் வழக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால், ஆளுமை என்பது தோற்றத்தைப் பொறுத்ததல்ல. காரணம், தோற்றம் இயற்கையால் அமைவது. அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது.

அப்படியாயின் ஆளுமை என்றால் என்ன?

உள்ளத்தாலும், எண்ணத்தாலும், செயலாலும் தீர்மானிக்கப்படுவது ஆளுமை. இது இரு கூறுகளை உடையது. ஒன்று தன்னைத்தானே ஆளும் திறன். மற்றது, மற்றவர்களை ஆளும் வல்லமை.

பொதுவாக, பிறரை ஆளும் வல்லமையையே ஆளுமை என்று கொள்கின்றனர். இது முழுமையான முடிவு அல்ல. தன்னைத்தானே ஆளும் திறனே ஆளுமையின் முதன்மை அடையாளம். தன்னை ஆள முடியாதவன் மற்றவரை ஆள முடியாது. எனவே, ஆளுமையின் அடிப்படையே தன்னை ஆளுகின்ற திறத்தில்தான் அடங்கியுள்ளது என்பதை ஆழமாக மனதிற் கொள்ள வேண்டும்.

இந்த ஆளுமை இயல்பாயும் வரும், சுற்றுச்சூழலாலும் அமையும், கற்றும் பெற்றுக் கொள்ளலாம். ஆளுமை பெரியவர்களுக்கேயன்றி பிஞ்சுகளுக்கும் உண்டு. அதை பெரியவர்களும், பிஞ்சுகளும் உணர்ந்து செயல்பட்டால், பிஞ்சுகள் பிற்காலத்தில் பெரிதும் சாதிக்க முடியும்.

பிறப்பிலே பிறப்பது ஆளுமை: குழந்தை பிறந்ததுமே அதனுடைய ஆளுமைத்திறன் பிறக்கிறது. தனக்குப் பசி வந்தவுடன் இயல்பூக்கத்தால், இயல்பான உணர்வால் அழுகிறது. அழுதவுடன் தாய் பாலூட்ட அதன் தேவை நிறைவடைகிறது. அதன்பின் தனக்குப் பசி எழும்போதெல்லாம் அழவேண்டும் என்பதை அது அறிகிறது. அடுத்த நிலையில் அழுது தன் தேவையை நிறைவு செய்து கொள்கிறது.

பாலுக்காக அழும் குழந்தையின் அழுகை ஆளுமையின் ஓர் அங்கமே! தன் தேவைக்குக் குரல் எழுப்ப வேண்டும் என்ற புரிதலால் எழும் அழுகை, தேவை நிறைவிற்கான முயற்சி. எனவே, அம்முயற்சியே ஆளுமையின் அடையாளமாய் அமைகிறது.

அடுத்தபடியாக வளரவளர, வயது கூடக்கூட எல்லாத் தேவைக்கும் அழும். அழுதே தேவைகளையெல்லாம் நிறைவு செய்ய முயலும். இதை நாம் ஒட்டாரம் பிடிவாதம் என்போம். ஆனால், உண்மையில் இது ஓர் ஆளுமையே! உரிமைக்குரல் எழுப்புவது ஆளுமையின் அடையாளம் என்றால், குழந்தையின் அழுகையும் அவ்வகையே.

விருப்ப ஆளுமை: அடுத்து தனது விருப்பங்களை, தான் விரும்பும்படியே பெற முயலும் ஆளுமை பிஞ்சுகளிடம் அதிகம். உண்ணும் உணவிலிருந்து, உடை, அணி என்று எல்லாவற்றிலும் தான் விரும்புவதையே பெற வேண்டும் என்ற பிடிவாதம் பிஞ்சுகளிடம் உண்டு. இது அவர்களின் இரண்டாவது ஆளுமை.

முன்னிற்கும் ஆளுமை: வீட்டிலும் சரி, வெளியிலும் சரி தன்னை முன்னிறுத்திக் கொள்ள பிஞ்சுகள் முயலுவர். இந்த முயற்சி அவர்களின் முதன்மையான ஆளுமையாகும்.

கூடிவாழும் ஆளுமை: சமூகம் என்பதே கூடிவாழ்வதன் விளைவே. இந்த சமூக உணர்வு பிஞ்சுகளின் நெஞ்சில் இயல்பு விருப்பமாகவே எழுகிறது. ஒரு தெருவில் 10 பிள்ளைகள் இருப்பின் அவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவர். எங்கு சென்றாலும், விளையாடினாலும், ஆடிப் பாடினாலும் ஒன்றாக இணைந்து செயல்படுவர்.

வீட்டில் பெரியவர்கள் அடக்கி, ஒடுக்கி, முடக்கி வீட்டிலே அடைத்தாலும், அதையும் மீறி வெளியில் ஓடிவந்து சேர்ந்து கொள்வார்கள். இதன்வழியே தோழமை ஆளுமை துளிர்க்கிறது.

உருவாக்கும் ஆளுமை: மணலால் வீடு கட்டுதல், ஊஞ்சல் அமைத்து ஆடுதல், நுணா காயால் தேர் செய்தல், பனை மட்டையில் காற்றாடி செய்தல் என்று பல விளையாட்டுப் பொருள்களை தன் கையால் தாங்களே உருவாக்கும் ஆளுமைத்திறன் பிஞ்சுகளிடம் ஏராளம்.

விளையாட்டு ஆளுமை: நீந்துதல், தாண்டுதல், பதுங்கியவரைப் பிடித்தல், கிட்டிப்புள், குண்டு விளையாடல், கில்லி விளையாடல் என்பன போன்ற விளையாட்டுகளில் அணி அமைத்தல், தலைமை தாங்கல், உத்தி பிரிதல் என்று எத்தனையோ ஆளுமைப் பண்புகள் அவர்களிடம் மிகுந்து உள்ளன.

நிருவாக ஆளுமை: கல், மண், இலை, காய் என்று எளிதில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கடை நடத்தும் விளையாட்டு மூலம் அவர்களின் நிருவாக ஆளுமை வெளிப்படும். பழைய பிலிம்களைப் பொறுக்கி, உருபெருக்கிக் கண்ணாடியைக் கொண்டு, சூரிய ஒளியை கண்ணாடி வழியாகப் பிரதிபலிக்கச் செய்து, இருட்டறையில் திரை கட்டி, திரையரங்கையே உருவாக்கி மகிழும் ஆளுமை பிஞ்சுகளிடம் உண்டு.

அப்பா அம்மா போல நடித்து குடும்பம் நடத்தும் விளையாட்டில் அவர்களின் குடும்ப நிர்வாகத்திறன் வெளிப்படக் காணலாம்.

கிராமங்களில் இன்றும் நிலவும் இதுபோன்ற ஆளுமை எச்சங்கள், நகர்ப்புறங்களில் மறக்கப்பட்டன. கணினியும், செல்பேசியும், தொலைக்காட்சியும் நகர்புறப் பிஞ்சுகளின் ஆளுமை வெளிப்பாடுகளை விழுங்கிவிட்டன. அவர்களின் உடல் நலத்தையும், உள நலத்தையும் கெடுத்துவிட்டன.

எனவே, பிஞ்சுகளின் ஆளுமைத்திறன் மிளிர பெரியவர்களும், பிஞ்சுகளும் சிலவற்றை உணர்ந்து நடக்க வேண்டும்.

பிஞ்சுகளின் பிடிவாத ஆளுமையை, செதுக்கிச் செம்மைப்படுத்தி சாதனை படைக்க தகுதிப்படுத்த வேண்டும்.

அவர்களின் இளமையை படிப்பில் மட்டுமே தொலைக்காமல், மற்ற ஆளுமைத் திறன்களை விளையாட்டு, கலை, படைப்பாற்றல், தொழில்நுட்பம், பண்பாட்டுக் கூறுகள் இவற்றை அறியவும், பழகவும் குடும்பமும், பள்ளியும், சமூகமும் துணை நிற்க வேண்டும், பயிற்றுவிக்க வேண்டும்.

சூரிய ஒளியைச் சக்தியாக மாற்றுவது போல, குழந்தைகளின் ஆளுமைத் திறன்களை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தி, அவர்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், உலகின் செழுமைக்கும் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளும் தங்கள் ஆளுமை அறிந்து, அதை மெருகேற்றி உயர வேண்டும்.

Share