Home 2014 ஆகஸ்ட் உலகளவில் சாதித்த பெரியார் பிஞ்சுகள்
திங்கள், 26 அக்டோபர் 2020
உலகளவில் சாதித்த பெரியார் பிஞ்சுகள்
Print E-mail

பெரியார் தாத்தா, உணவை வீணாக்கினால் கடுமையாகக் கண்டிப்பாராம். சொல்வது மட்டுமல்ல, தான் சொன்னபடியே செய்தும் காட்டுவாராம். அப்படிப்பட்ட பெரியாரின் தொண்டர்களின் வழிவந்த மாணவி ஒருவர், இதையே தொடர் பிரச்சாரமாகச் செய்து உலகளவில் முதல்பரிசைப் பெற்றுள்ளார். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

திராவிடர் கழகத்தின் முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத் தலைவர், மானமிகு சிவனணைந்த பெருமாள் அவர்களின் மகனும் நெல்லை மண்டலத் தலைவர் பொறியாளர் மனோகரனின் தம்பி கி.மகேந்திரன்_வெண்ணிலா ஆகியோரின் மகள் வெ.ம.கயல்தான் மேற்கண்ட பரிசைப் பெற்றிருக்கிறார். அப்பா....டி... தலையைச் சுத்தறமாதிரி இருக்கா? ஒன்னுமில்ல, பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்ட மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர் கயல். இவர் மதுரை டி.வி.எஸ். பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறார்.

கயல்

இவர் பள்ளியில் தன் ஆசிரியர்களின் வழிகாட்டுதலில், பக்கத்து ஊர்களுக்குச் சென்று, உணவை வீணாக்கும் மக்களிடம், பசியினால் வாடும் பரிதாப நிலையில் உள்ளவர்களை ஒளிப்படமாகக் (Video) காட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் உணவு வீணாவதைத் தடுக்கவும், சத்தான உணவைக் குழந்தைகளுக்குச் கொடுப்பதற்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

உடன் பயிலும் மாணவர்களிடையே இத்தகைய சிந்தனைகளைத் தூண்டிவிடும் பணியைத் தொடங்கி இருக்கிறார். அது மட்டுமல்ல, இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் பயிர் வளர்ப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, செய்முறை மூலமே செய்துகாட்டி புரிய வைத்துள்ளார். இப்படி ஒரு புள்ளியில் தொடங்கிய இவரின் பணி இப்போது பரந்து விரிந்து தழைத்துள்ளது.

முகிலன்

இந்தப் பணிகளுக்காகவே, லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் உலக அளவில், இப்படிப்பட்ட பணிகளைச் செய்பவர்களுக்கு தரக்கட்டுப்பாடு _ போட்டி நடத்துகிறது.(Quality Control International Convention).

தமிழ்நாட்டில் இருந்து மூன்று குழுக்கள் இந்தப் போட்டியில் பங்குபெற்றன. கயலும் அந்த மூன்றில் ஒரு குழுவில் இடம் பெற்றிருந்தார். இவர் தனது செயல் திட்டத்தை அங்கிருந்த நடுவர்கள்முன் வைத்து திறம்பட விளக்கியிருக்கிறார். இவரின் திட்டத்திற்கு நடுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. அதனால் கயல் பங்கேற்ற குழு முதல் பரிசையே தட்டிச் சென்றது.

இதற்கு முன் இரண்டு செயல் திட்டங்களைக் கொடுத்திருக்கும் கயல், தங்கள் குழுவுக்குக் கிடைத்த வெற்றிக்கு தன்னுடைய ஆசிரியர்களின் ஊக்கம்தான் முக்கியக் காரணம் என்று சொல்லி யிருக்கிறார். தன்னுடைய எதிர்காலக் கனவாக மருத்துவராகி, மக்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

உணவுக் கட்டுப்பாட்டுக்கு மட்டுமல்ல, தன் வாழ்க்கைக்கே ஒரு திட்டத்தை _ அதுவும் தெளிவான திட்டத்தைப் போட்டுக் கொண்ட கயல், தன் வெற்றிக்குக் காரணமாக இன்னொன்றையும் கூறுகிறார். முடியாதது என்று எதுவும் இல்லை என்றும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை இருந்தால் நமக்குள் இருக்கும் திறமை தானாக வெளிப்படும் என்றும் கூறியுள்ளார்.

அது சரி, இதைத்தான் பெரியார் தாத்தா, நாம் தானாகப் பிறக்கவில்லை. ஆகவே, தனக்காக வாழக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு தெளிவான வழியைத் தெரிவு செய்துள்ள கயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். என்ன சொல்றீங்க!

ஒரு வெற்றிக்கே மகிழ்ச்சின்னா, இன்னொரு வெற்றியையும் சொன்னா இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவீங்கள்ல! இந்தாங்க... அடுத்த மகிழ்ச்சிச் செய்தி! அதுவும் அதே குடும்பத்திலிருந்து!

அதாவது, திராவிடர் கழகத்தின் முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத் தலைவர் சிவனணைந்த பெருமாள் அவர்களின் புதல்வனும், நெல்லை மண்டலத் தலைவர் பொறியாளர் மனோகரன் அவர்களது சகோதரி மனோரஞ்சிதம் _ திருநாவுக்கரசு ஆகியோரின் மகன் டி.முகிலன்தான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகமும், மேக்மில்லன் பதிப்பகமும் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட பாடங்களில் திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகின்றன. சார்க் நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக பல்வேறு கட்டங்களில் நடைபெறும் போட்டி இது. இதில், முதல் இடத்தைப் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

இந்தத் தங்கப் பதக்கத்தைத்தான் நம்ம டி.முகிலன் வாங்கியிருக்காரு.

இவ்வளவுதான்னு நினைக்காதீங்க. அறிவியல், ஆங்கிலம், கணக்கு, கணினி அறிவியல் என்று நான்கு பிரிவுகளாக நடத்தப்படும் இந்தத் தேர்வில், பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு பிரிவுகளில்தான் கலந்து கொண்டார்கள். நம்ம முகிலனோ நான்கு பிரிவுகளிலும் கலந்து கொண்டு அசத்தோ அசத்துன்னு அசத்தியிருக்காரு.

தனது வெற்றிக்கு பெற்றோரும், பள்ளித் தாளாளரும்தான் காரணமுன்னு சொல்லியிருக் காரு. இதில நம்ம ஒன்ன சேர்த்துக்கலாம். அதாவது, இந்த வெற்றிக்கு  நமக்கெல்லாம் மானமும் அறிவும் தந்து, உலக மக்களைப் போல நாமெல்லாம் வரணும்னு படாதபாடுபட்ட பெரியார் தாத்தாவும் ஒரு காரணம், இல்லையா?

அப்புறம் முடிக்கிறதுக்கு முன்னால, சொல்லிடறேன். கயல், முகிலனைப் போல, ஒவ்வொரு பெரியார் பிஞ்சும் இப்படிப்பட்ட பல்வேறு துறைகளில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.

தகுதியும் திறமையும் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கே சொந்தமென்ற முட்டாள் தனத்தை மீண்டும் ஒருமுறை தகர்த்து இவ்வளவு பெரிய வெற்றியை உலக அளவில் பெற்றிருக்கிறார்கள் கயலும், முகிலனும்!

- உடுமலை & செல்வா

Share