மண்ணு... சேறு... ஓவியம் பாரு!
Print

- யுசுகே அசய்

வாட்டர் கலர், எம்போசிங், ஆயில் ஓவியம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்; வரைந்தும் பார்த்திருப்பீர்கள். மணலை வைத்து ஓவியம் வரைய முடியுமா? முடியும் என்று சாதித்துக் காட்டி, பார்த்தோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் பிறந்த யுசுகே அசய் என்னும் 33 வயது இளைஞர்.

பீகார் மாநிலத்தில் உள்ள சுஜாதா என்ற சிற்றூரில் ஏழைக் குழந்தைகள் படிக்கும் பொதுநலப் பள்ளி ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் சுவர் ஓவிய விழா நடைபெறுகிறது. கிராமத்தின் பல்வேறு தேவைகள், பிரச்சினைகளை நிறைவு செய்வதற்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது. விழாவின்போது, இந்தியா மற்றும் ஜப்பானிலிருந்து ஓவியர்கள் வருகின்றனர்.

பள்ளியின் சுவர்களையே ஓவியம் வரையும் தாளாகப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைகின்றனர். அப்போது, அங்கு படிக்கும் குழந்தைகளுக்கும் உரிய பயிற்சி கொடுக்கப்படுகிறது.

இந்த ஓவிய விழாவில் பங்கேற்றவர்களுள்  யூசுகே அசயும் ஒருவர். இலை, குப்பை, மண், சேறு என கையில் கிடைக்கும் எந்தப் பொருளையும் வைத்து ஓவியம் தீட்டி விடும் அசய் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஓவிய விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆண்டு சேற்றை (mud) வைத்து எட்டுவிதமான ஓவியங்களை வரைந்துள்ளார்.

வகுப்பறை, மேற்கூரை என அனைத்துச் சுவர்களிலும் தனது கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். குழந்தைகளுடன் சேர்ந்து மண் சேகரித்து, அதைத் தண்ணீருடன் வெவ்வேறு அளவுகளில் கலந்து பல்வேறு நிறங்களைத் தயார் செய்துள்ளார்.

வாழ்க்கை என்பது ஒரு சுழற்சி போன்றது என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும் என நினைத்த அசய் ஓவிய விழா முடிந்ததும் குழந்தைகளை அழைத்து, தன் முயற்சியில் உருவான ஓவியங்களை அழித்துள்ளார்.

Share