Home 2014 செப்டம்பர் தள்ளிப் போட்டால் தள்ளப்படுவோம்!
செவ்வாய், 27 அக்டோபர் 2020
தள்ளிப் போட்டால் தள்ளப்படுவோம்!
Print E-mail

- சிகரம்

துள்ளித்திரியும் பள்ளிப் பருவமாயினும், தொடர்ந்து வரும் வாழ்வாயினும் செய்ய வேண்டியவற்றை, செய்ய வேண்டிய காலத்தே தவறாது, தள்ளிப் போடாது, காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.

வாழ்வின் வளர்ச்சி, தளர்ச்சி; உயர்வு, தாழ்வு; வெற்றி, தோல்வி எல்லாம் இதனால் பெரிதும் தீர்மானிக்கப்படுகின்றன. மனிதன் உள்ளத்தால் உந்தப்படுபவன். வாகனத்தை என்ஜின் உந்துவதுபோல, மனிதனை உந்தித் தள்ளுவது உள்ளம்.

எனவே, உள்ளம் எந்த அளவிற்கு எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும், முனைப்போடும் உள்ளதோ அந்த அளவிற்கே ஒருவரது வாழ்வு அமையும்.

இதையே வள்ளுவர்,

உள்ளத்தனையது உயர்வு என்றார்.

உள்ளம் பல்வேறு உணர்வுகளின் தொகுப்பு. எனவே, அதில் நல்லதும் எழும், அல்லதும் எழும். முனைப்பும் எழும், சோம்பலும் வரும்.

எனவே, வாழ்வில் நிறைய சாதிக்க வேண்டும்; உயர வேண்டும், சிறப்படைய வேண்டும் என்ற உணர்வுகள் எழுந்து, முயற்சி மேற்கொள்ள முனையும்போது, நாளையிலிருந்து செய்வோம் என்ற சோம்பல் எழும். இந்த உணர்வுக்கு அடிமைப்பட்டு, முயற்சியைத் தள்ளிப் போட்டால், மறுநாளும் இதே உணர்வே எழுந்து, நாளையும் தள்ளிப் போடும் நிலையே வரும்.

ஆகவே, எதையும் தள்ளிப்போட எண்ணாது, எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போதே செய்ய வேண்டும். தள்ளிப்போடும் மனநிலை வளர்ந்தால், எல்லாச் செயல்களும் தள்ளித்தான் போகும்; தள்ளிப்போடும் மனநிலையும் வளரும். இதன் விளைவாய் எல்லாச் செயல்களும் செய்யப்படாமல் குவிந்து நிற்கும். அந்நிலையில் எதைச் செய்வது? இவ்வளவையும் எப்படிச் செய்வது என்ற மலைப்பும், தயக்கமும் ஏற்பட, எல்லாப் பணிகளும் நிறைவேறாது நிற்கும்.

உடலில் அழுக்குச் சேரும்போது, ஒவ்வொரு நாளும் அதைத் தேய்த்துக் குளித்துப் போக்குவதுபோல, வேலைகளையும், பணிகளையும் அவ்வப்போது செய்து முடித்துவிட வேண்டும்.

ஆடையில் சேரும் அழுக்கை அன்றாடம் துவைத்து நீக்கினால், எளிதில் நீக்கிவிடலாம். ஆனால், பலநாள் சேர்ந்தால், அழுக்கு எளிதில் அகலாது, தேய் தேயென்று தேய்த்துக் கசக்கினாலும் ஆடைதான் கிழியுமேயன்றி அழுக்கு அகலாது.

அதுபோல, நம் பணியை, வேலையை அவ்வப்போது செய்து முடித்தால், எளிதில் முடித்து நிம்மதியாக இருக்கலாம். மாறாக, தள்ளிப்போட்டு சேர்த்தால், பணிச்சுமை கூடி, மலைப்பும், தயக்கமும ஏற்பட்டு, செய்து முடிப்பதும் சிரமமாகி, செயலும் கெட்டு, செய்பவரும் நொந்து வேதனைப்பட வேண்டிவரும்.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் அன்றைய பாடங்களை, வேலைகளை, கடமைகளை அன்றைக்கே செம்மையாய் செய்து முடித்துவிட வேண்டும். நாளை செய்யலாம், மறுநாள் செய்யலாம் என்ற மனநிலை வளர்ந்தால், எச்செயலும் நிறைவேறாது.

அன்றைக்கே, அப்போதே செய்து முடிப்பதன் பயன், பணிச் சுமை குறைவதோடு, செய்து முடிப்பது எளிது. தள்ளிப் போடுவதன் கேடு, பணிச்சுமை கூடுவதோடு, சிரமம், உளைச்சல், பதட்டம், கவலை, சோர்வு, கெட்டபெயர், திட்டு, தண்டனை, இழப்பு என்று பல.

ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களை அன்றைக்கே படிப்பது, முடிப்பது பசுமையாய் பதியவும், தெளிவாய் புரியவும் உதவும். எழும் அய்யங்களை அடுத்தநாளே ஆசிரியரிடம் அகற்றிக்கொள்ள இயலும்.

தள்ளிப் போடும் எண்ணம் எப்படி வருகிறது என்பதை நாம் கண்டறிய வேண்டும். நண்பர்கள் விளையாட அழைப்பர், விருந்தினர் வந்திருப்பர், திரைப்படம் காண செல்ல வேண்டியிருக்கும் அல்லது சோம்பல் என்பன போன்ற காரணங்கள் பணியைத் தள்ளிப் போடத் தூண்டுகின்றன.

அப்போது நாம் நினைப்பது என்ன? இன்றைக்கு ஒரு நாள் தள்ளிப்போட்டு, நாளை செய்து விடுவோம் என்பதே தள்ளிப்போடும் எண்ணம் எழுவதற்குக் காரணம். ஆனால், உண்மை என்னவென்றால், நாளையும் இக்காரணிகள் வரும். அப்போதும் தள்ளிப் போடவே எண்ணுவோம்.

கடல் அலை ஓய்ந்து குளிக்க முடியுமா? அலைகள் ஓயாது. அது அடித்துக்கொண்டுதான் இருக்கும். அலைகளுக்கு இடையே குளித்து முடிப்பதுதான் அறிவுடைமை. அதேபோல், மற்ற வேலைகள், இடையூறுகள், கவனச்சிதறல்கள் வரவே செய்யும். என்றாலும் அவற்றிற்கு இடையே நம் கடமையை, பணியைச் செய்துமுடிப்பதே அறிவுடைமையாகும்.

எனவே, எச்சூழலிலும் செய்ய வேண்டியவற்றைச் செய்தே ஆகவேண்டும். தள்ளிப் போட எண்ணுவது தவறான அணுகுமுறை. சூழல் கருதி சற்று ஒத்தி வைக்கலாம்; தள்ளிப் போடுதல் கூடாது. தள்ளிப் போடுவோர் தள்ளி விடப்படுவர்! இதைத் தவறாது சிந்தனையில் கொண்டு செயல்பட வேண்டும்.


செய்தி வாசிக்கும் ரோபோ

ஜப்பான் நாட்டின் டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தில் பெண் ரோபோவை உருவாக்கி செய்தி வாசிக்கச் செய்து பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளனர் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ரோபோவினுள் செய்திகளின் (தரவுகளைப்  (டேட்டா) பதிவு செய்துவிட்டால், மிகத் தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிக்கும் பெண் போலவே முகபாவனையுடன் செய்திகளை ரோபோ வாசித்துவிடும் என்று இஷ்கியுரோ என்ற ஆய்வாளர் கூறியுள்ளார்.

Share