வேண்டும் விடுதலை
Print

பச்சைப் பசேலெனக் குளிர்ச்சியான வேப்பமரம். மஞ்சள் மஞ்சளாய் வேப்பம்பழக் கொத்துகள். இளந்தென்றலின் இதமான தீண்டலில் இலைகள் அசைந்து கொண்டிருந்தன. சிவ்வ்வ் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பச்சைக்கிளி, கீ... கீ... கீ... என்று கீச்சிட்டபடி கிளையில் அமர்ந்தது. நச்... நச்... என்று தன் சிவந்த அலகால் வேப்பம் பழத்தைக் கொத்திச் சுவைக்கத் தொடங்கியது.

அதே வேளையில், கீ... கீ... கீ.... என்று மற்றொரு கிளியின் ஓசை கேட்டது. ஓசை கேட்டதே தவிர, கிளியைக் காணோம்.

எங்கிருந்து வருகிறது இன்னொரு கிளியின் குரல்? பழம் தின்று கொண்டிருந்த பச்சைக்கிளி சுற்று முற்றும் தேடியது. எந்தக் கிளையிலும் இன்னொரு கிளியைக் காணோம்.

ஆனால், கீ... கீ... கீ.... ஓசை மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.

பறந்து பறந்து தேடியது இந்தக் கிளி. முடிவில், அந்தக் கிளியின் கூச்சல் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடித்துவிட்டது!

மரத்தின் அடியில் ஒரு சிறிய கூண்டு. அதற்குள் இருந்துதான் அந்தக் கிளி கத்தியது.

சிவ்வ்... வென்று பறந்து, அந்தக் கூண்டின் அருகே சென்றது, இந்தக் கிளி.

குறுக்கும் நெடுக்குமாய் அசைந்தபடி கீ... கீ.. கீ.. என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தது கூண்டுக் கிளி.

அய்யோ பாவம்! யார் உன்னை இந்தக் கூண்டினுள் போட்டு அடைத்தது? கவலைப்படாதே, நான் திறந்துவிடுகிறேன். வெளியே வா! என்று கூறியபடி, கூண்டின் கதவை அலகால் கவ்வத் தொடங்கியது இந்தக் கிளி.

மு.கலைவாணன்

என்னைக் கண்டு நீ பரிதாபப்படுவதைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்குது! நான் கவலைப்படுவதாக யார் சொன்னது?

நீ கூண்டில் அடைக்கப் பட்டிருக்கிறாயே!

இருக்கட்டுமே! இதில் பாதுகாப்பு இருக்குதே! சுகம் இருக்குதே! அவ்வளவுக்கும் மேலே, மரியாதை இருக்குதே!

மரியாதையா?!

பின்னே?... நான் சோசியக் கிளியாச்சே!

சோசியக் கிளியா!?

ஆமாம்... மனிதர்களின் நல்லது, கெட்டது, நடந்தது, நடக்க இருப்பது எல்லாத்தையும் சொல்ற சீட்டை எடுத்துக் கொடுக்கிறதே நான்தான்!

அதோ, அங்கே தூங்குறாரே- _ அவர்தான் எனக்குப் பயிற்சி கொடுத்துப் பழக்கி வெச்சிருக்காரு. பஞ்சவர்ணம் வெளியே வரணும்னு கூப்பிடுவாரு.

அய்யாவுக்கு ஒரு சீட்டு எடுத்து நீட்டு அப்படின்னு சொன்னவுடனே, சீட்டை எடுத்துக் கொடுப்பேன்.

கொடுத்ததும், படிக்கலாமா?... அப்படின்னு என்னைக் கேட்பாரு. நான் சரீன்னு சொன்னாத்தான் அந்தச் சீட்டைப் படிப்பாரு.

அதுக்குப் பிறகு, எனக்கு ஒரு நெல்லு கொடுப்பாரு. நான் மறுபடி கூண்டுக்குள்ளாற வந்துடுவேன்.

உன்னை மாதிரிப் பறக்க வேண்டியதில்லே... இரை தேடி மரம் மரமாய் அலைய வேண்டியதில்லே... இருக்கிற இடத்திலேயே எனக்கு எல்லாம் கிடைக்குது! நான் ஏன் கூண்டை விட்டு வெளியே வரணும்? என்னை எதுக்காக வெளியே வரச் சொல்றே? என்று கேட்டது கூண்டுக்கிளி.

அடக் கேணக்கிளியே! தனக்குச் சாதகமா உன்னைப் பழக்கி வச்சிருக்கிறான் அந்த ஆளு... அதையே சுகம்ன்னு நெனச்சிக்கிட்டு, இப்படிச் சோம்பேறிக் கிளி ஆயிட்டியே!... நமக்கென்று சில இலக்கணம் இருக்கு. அதன்படி வாழறதுதான் வாழ்க்கை.

ஆனால், நீ அதை இழந்திட்டு, அடிமையாய் இருக்கிறே! வலிக்காமல் பிழைக்க வழி இருக்குமான்னு அலையற கூட்டத்தைப் பயன்படுத்திப் பிழைக்கிறவனுக்குத் துணை செய்து பிழைக்கிறியே! உனக்கு வெக்கமா இல்லை? என்று கண்கள் சிவக்கக் கோபமாய்க் கேட்டது இந்தக் கிளி.

வெக்கமா? எதுக்கு நான் வெக்கப்படணும்? என்றது அறியாமையில் அகப்பட்ட கூண்டுக்கிளி.

பச்சைக்கிளின்னா பறந்து திரியணும்; பழந் தின்னணும்; பாடிக் களிக்கணும். அதுதான் அழகு! அதுதான் நியதி! ஒத்த நெல்லுக்காக உன் சுதந்திரத்தை இழந்து  நிக்கிற நீ, பச்சைக்கிளி இல்லே... பிச்சைக்கிளி! என்று சொல்லிவிட்டு, உயரப் பறந்தது சுதந்திரக் கிளி.

கேட்டுக் கொண்டிருந்த கூண்டுக்கிளிக்கு உறுத்தல் ஏற்பட்டது.

வானளாவப் பறக்கும் தன் இனத்தை ஏக்கத்துடன் பார்த்தது. கீ...கீ...கீ... எனக் கீச்சிட்டது.

இப்போது அதன் குரலில் மாற்றம் இருந்தது.

Share