Home 2014 அக்டோபர் எப்போது புரியும்?
ஞாயிறு, 09 ஆகஸ்ட் 2020
எப்போது புரியும்?
Print E-mail

- மு.கலைவாணன்

ஊரே கோலாகலமும் பரபரப்புமாய்க் காணப்பட்டது. ஒவ்வொருவரும், தங்கள் வீட்டில் நடைபெறும் திருமணத்திற்கு அலைவதுபோல் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஒலி பெருக்கியில் மங்கல இசை முழங்கியபடி இருந்தது.

இளைஞர்கள் வண்ண வண்ணத் தாள்கள் ஒட்டி, தென்னங் குருத்தைக் கட்டித் தோரணம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.

அக்கம் பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் அந்த ஊருக்கு மக்கள் திரள் திரளாக வந்து கொண்டிருந்தார்கள்.

அப்படி அங்கு என்னதான் விசேஷம்? என்கிற விசாரணையுடன் பலர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மழையே இல்லாமெ ஏரி, குளம், ஆறு எல்லாம் வறண்டு போயிடுச்சா?... விவசாயம் செய்ய முடியாமல் நிலம் வெடித்துக் கிடக்குதா? மழையெ பார்த்தே பல ஆண்டுகள் ஆச்சா?... அதனாலே, கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்யப் போறாங்களாம்!

பக்கத்து ஊர்ப் பெண் கழுதையை இந்த ஊர் ஆண் கழுதைக்குக் கட்டிவைக்கப் போகிறார்கள்! அப்படிச் செய்தா, மழை பெய்யும்ன்னு ஒரு நம்பிக்கை!

போகிற போக்கில் மக்கள் பேசிக்கொண்டே சென்றார்கள்.

முகூர்த்த நேரத்திற்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்குது! என்று சிலர் வேகம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.

ஊருக்கு நடுவில் போடப்பட்டிருந்த பெரிய பந்தலில், இரண்டு கழுதைகள் பக்கம் பக்கமாய்க் கட்டி வைக்கப்பட்டிருந்தன. சற்று நேரத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகும் கழுதைகள், ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.

குழப்பத்தில் இருந்த பெண்கழுதை, ஆண் கழுதையைப் பார்த்து, ஆமாம் எதற்காக நம்மை இங்கே கொண்டு வந்து கட்டி வைத்திருக்கிறார்கள்? என்று கேட்டது.

மக்கள் பேசிக்கொண்ட செய்திகளை ஓரளவு கேட்டிருந்த ஆண் கழுதை, நமக்குக் கல்யாணம் செய்து வைக்கத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்! என்றது.

மூனு குட்டி போட்ட என்னை உனக்குத் திருமணம் செய்து வைக்கப் போறாங்களா!... நீ திருமணம் செய்து வைக்கச் சொல்லி யாரையாவது கேட்டியா? என்றது பெண் கழுதை. இல்லை எனத் தலையாட்டியது ஆண் கழுதை.

அப்புறம் எதற்காக நமக்குத் திருமணம் செய்து வைக்கிறாங்க? என்று சந்தேகத்துடன் கேட்டது பெண் கழுதை.

நமக்குத் திருமணம் செய்து வைத்தால் ஊருலே மழை பெய்யுமாம்! என பதில் உரைத்தது ஆண் கழுதை.

பல்லை இளித்தபடி, சரியான முட்டாள் மனிதர்கள்! நமக்குத் திருமணம் செய்து வைக்கிறதுக்கும், மழை பெய்யிறதுக்கும் என்ன தொடர்பு? நம்ம திருமணம் நடக்கல்லேன்னா, மழை பெய்யாதுன்னு எந்த மேதாவி சொன்னானோ? என ஏளனமாய்க் கேட்டது, பெண் கழுதை.

பொற்காலம் படைச்சுட்டதாப் பீத்தல்! ஆனா, இவங்க நடவடிக்கை எல்லாம் கற்கால நடவடிக்கையாவே இருக்குது! என ஆதங்கப்பட்டது ஆண் கழுதை.

ஊர் முழுக்க, காடு மாதிரி மரங்க மண்டிக்கிடக்கும்! அதையெல்லாம் சுயநலத்துக்காக வெட்டினது யாரு? இந்த மனிதர்கள்தானே?...

தண்ணியைப் பாதுகாத்து வச்சுக்கத் தெரியாமெ, வீணாச் செலவு செய்து விரயமாக்குனது யாரு? நீயும், நானுமா? காடு மலையென எங்கும் பசுமையா இருந்த இந்தப் பூமியைப் பாழாக்கிச் சுற்றுச் சூழலைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிட்டு, உனக்கும் எனக்கும் திருமணம் செய்து வெச்சா, சோன்னு மழை பெய்யும்னு நினைக்கிறாங்களே! இவங்களை என்ன செய்யிறது? என்று குமைந்தது பெண் கழுதை.

இதைச் சொல்றியே, இன்னொரு கதையைக் கேளு. இந்த மனிதர்கள், நம்ம மாதிரி கழுதைப் படத்தை மாட்டி, அதுக்குக் கீழே என்னைப் பார்... யோகம் வரும்ன்னு எழுதியிருப்பாங்க! நம்ம படத்தைப் பாத்தா யோகம் வரும்ன்னா, நமக்குத் தீனி போட்டு வளர்த்து, அழுக்கு மூட்டை தூக்க அன்றாடம் பயன்படுத்துறாரே துணி துவைக்கிற தொழிலாளி, அவருக்கில்ல முதல்ல யோகம் வந்திருக்கணும்? வரல்லையே!... என இளக்காரம் பேசியது ஆண்கழுதை.

இப்படித் தப்பையும் தவறையும் மனிதர்கள் செய்திட்டு, அதை மூடி மறைக்க இப்பக் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் என்று கதை விட்டுக்கிட்டு இருக்கானுங்க... அவனுங்க நம்ம பக்கத்திலே வரட்டும் உதைக்கிற உதையிலே மொத்தப் பல்லும் கொட்டிப் போகிற மாதிரி செய்றேன்! என்றது பெண் கழுதை.

சீ... சீ... உதைச்சா திருந்துவாங்கன்னு எனக்கு நம்பிக்கையில்லை. இயற்கை இவனுங்க செய்த தப்புக்குத் தண்டனையா மழையில்லாம வாட்டி வதைக்குது. அதுக்குப் பிறகும் சிந்திச்சுப் பாக்காம, நமக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடியிருக்கிறானுங்களே, இவங்களா திருந்துவாங்க? நமக்குத் திருமணம் செய்யிறதுக்குப் பதிலா நூறு மரக் கன்றுகளை நட்டு வளர்க்கவும், ஏரி குளத்தைத் தூர் வாரவும் ஒன்னு சேர்ந்தால் அல்லவா திருந்தறாங்கன்னு அர்த்தம்?... என்றது ஆண் கழுதை.

அதை _ சொல்லாலே உணர்த்த நம்மால் முடியாதுங்கறதாலே, உதையாலேதான் உணர்த்தியாகணும் என உறுதியாய்ப் பேசியது பெண் கழுதை.

இது புரியாத மனிதர்கள், திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

Share