Home 2014 நவம்பர் விவேகமில்லாத வீரம்
வியாழன், 13 ஆகஸ்ட் 2020
விவேகமில்லாத வீரம்
Print E-mail

அலங்கரிக்கப்பட்ட அழகுச் சிறுமிபோல், விழாக்கோலமாய்க் காட்சி அளித்தது பொய்யாமணி கிராமம்,

அதற்குக் காரணம், அம்மன் கோவில் திருவிழா.

தெருவின் இருபுறமும் பொம்மை, பொரிகடலை, வளையல், மணிமாலை, விளையாட்டுச் சாமான்கள் எனப் பலவிதமான கடைகள். மரத்தடியில் மணி ஒலியுடன் குடை ராட்டினம்.

திரள்திரளாய் மக்கள் கூட்டம். அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம்கூட வந்திருந்தார்கள்.

உடுக்கை, பம்பை ஒலியோடு பக்திப் பாடலும் ஒலிபெருக்கியில் முழங்கிக் கொண்டிருந்தது.

இத்தனைக்கும் நடுவே, கோவிலை ஒட்டியுள்ள  அரச மரத்தடியில் ஒரு கூட்டம். மக்கள் வட்டமாக நின்று கூச்சலும் கும்மாளமுமாக இருந்தனர். திருவிழாவை முன்னிட்டு அங்கே சேவல் சண்டை நிகழ்ந்து கொண்டிருந்தது.

பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுச் சிவப்புச் சேவலுக்கும், பண்ணையார் வீட்டுக் கறுப்புச் சேவலுக்கும் சண்டை.

சிவப்புதான் வெற்றி பெறும்!

இல்லை... இல்லை, கறுப்புதான் வெற்றி பெறும்!

ஆளுக்கு ஆள் பந்தயம் கட்டிக் கொண்டனர். பணம் பல பேரிடம் கை மாறியது.

இதுதான் வெற்றி பெறும்! அதுதான் வெற்றி பெறும்! என ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசிக் கொண்டனர்.

காலில் கூரான கத்தி கட்டப்பட்டு, இரண்டு சேவல்களும் சண்டைக்குத் தயாராக இருந்தன. மஞ்சள் தண்ணீர் தெளித்து _ சேவல்கள் தலையைச் சிலிர்த்தவுடன், தரையில் எதிர் எதிரே விட்டார்கள்.

அவ்வளவுதான்... புழுதி பறக்கப் போர்க்களத்து வீரர்கள் போல் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கீழே விழுந்தன. விழுந்த உடனே எழுந்து ஒன்றை ஒன்று முறைத்தபடி மேலே கொஞ்சம் பறந்து மீண்டும் மோதிக் கொண்டன.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களும், பணம் கட்டியவர்களும், விடாதே! போடு! அடி! குத்து! எனவும், விசில் அடித்தும் சண்டையிடும் சேவல்களை உற்சாகப்படுத்தினார்கள்.

சேவல்களும் சளைக்காமல் சண்டையிட்டன.

கடைசியில் கறுப்புச் சேவல், சிவப்புச் சேவலைத் தாக்கி வீழ்த்தியது.

பெருங்கூச்சல்... கை தட்டல்கள்.

நான் சொல்லலே... கறுப்புச் சேவல்தான் ஜெயிக்கும்னு! என்று எக்களித்தபடி வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

ச்சே.. சிவப்புச் சேவல் இப்படி ஏமாத்திருச்சே! என்று புலம்பியபடி தோற்றவர்கள் வேதனையோடு போனார்கள்.

மறுநாள். காலைநேரம், விழா நடந்த அறிகுறியே தெரியாமல் கிராமமே வெறிச்சோடி இருந்தது. கடைவீதிகள் காலியாகிக் கிடந்தன. தெருக்களில் மக்கள் நடமாட்டமே இல்லை.

இரவெல்லாம் ஆட்டம் பாட்டம் என இருந்ததால், கிராமத்து மக்களெல்லாம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த குப்பை மேட்டில், தன் குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருந்தது, ஒரு பெட்டைக் கோழி.

முதல் நாள் சேவல் சண்டையில் வெற்றி பெற்ற கறுப்புச் சேவல், கம்பீர நடை நடந்து வந்து அதன் அருகில் நின்றது.

கொஞ்ச தூரத்தில், சண்டையில் தோற்றுப் போன சிவப்புச் சேவல் நடக்க முடியாமல் நொண்டியபடி இரை தேடிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும் கறுப்புச் சேவல் தன் அருகில் இருந்த பெட்டைக் கோழியிடம், அதோ அங்கே நொண்டி நொண்டி வருகிறதே சிவப்புச் சேவல், அதை நேற்று நடந்த சண்டையிலே அடி பின்னி எடுத்துட்டேன்ல!... எழுந்திருக்க முடியாதபடி கொத்திக் கீழே தள்ளிட்டேன்ல!... என்று தன் வீர தீரப் பெருமையை முழங்கியது.

இதைக் கேட்டும் கேட்காதது போல் குப்பையைக் கிளறி இரை தின்றபடி இருந்தது பெட்டைக் கோழி.

அதைக் கவனித்த கறுப்புச் சேவல், நேற்று நடந்த சண்டையிலே நான் வெற்றி பெற்றதைப் பத்திச் சொல்றேன், நீ கண்டுக்கவே மாட்டேங்குறியே...! என்று கேட்டு முறைத்தது.

கறுப்புச் சேவலைக் கேவலமாகப் பார்த்த பெட்டைக் கோழி, நீ யாருக்காகச் சண்டை போட்டே? எதுக்காகச் சண்டை போட்டே? உனக்காகவா... இல்லே இனத்துக்காகவா? நீ போட்ட சண்டையாலே பந்தயம் கட்டுனவங்களுக்குப் பணம் கிடைச்சுது. உனக்கு என்ன கிடைச்சுது? உன் இனத்துலே ஒரு சேவலை நொண்டியாக்கியதைத் தவிர, வேறென்ன பயன்? என்று ஏளனமும், சினமுமாய்க் கேட்டது.

கறுப்புச் சேவலால் பேச முடியவில்லை. இனத்துக்குள் இனம் மோதி இரத்தம் சிந்தினதாலே நீ என்ன லாபம் கண்டே?... விவேகமில்லாத வீரம் யாருக்கும் எந்தப் பயனையும் தராது!

அடுத்தவனுடைய ஆசைக்காக, ஆதாயத்துக்காக நாம அடிச்சிக்கிட்டுச் சாகறது அசிங்கமாத் தெரியலே உனக்கு?... வெட்டிக்குச் சண்டை போட்டுட்டு வந்து, வீரம் பேசுறியே!... உனக்கு வெக்கமா இல்லை?... எனத் திட்டித் தீர்த்தது பெட்டைக் கோழி.

அதுவரை கம்பீரமாக நின்றிருந்த கறுப்புச் சேவல், தன் தவற்றை உணர்ந்தது போல் கூனிக் குறுகித் தலை கவிழ்ந்து கொண்டது.

Share