Home 2015 ஜனவரி கதை கேளு... கதை கேளு...
ஞாயிறு, 04 ஜூன் 2023
கதை கேளு... கதை கேளு...
Print E-mail

மன அழகு

- மு. கலைவாணன்

உயர்ந்த மலை; அதன் அருகே சலசலவென ஓசையிட்டபடி ஓடும் ஆறு; எங்கும் பச்சைப் பசேல் என அடர்ந்த மரங்கள். இப்படி இயற்கை எழில் அனைத்தும் மொத்தமாய்ச் சேர்ந்த காடு.

அந்தக் காட்டில் _ மயில்கள் கூட்டம் கூட்டமாய் வாழ்ந்து வந்தன. இரை தேடி உண்பதும், இணைந்து விளையாடுவதும் தவிர அவற்றுக்கு வேறு கவலை ஏதும் இல்லை.

ஆனாலும், கடந்த சில நாள்களாகவே மலைவாழ் வேடுவர்கள் மயில்களின் தோகைகளுக்காகவும், மயில் எண்ணெய் தயாரிக்கவும், மயில்களை வேட்டையாடி வந்தனர்.

ஒரு நாள், மாலை நேரம், இரைதேடிச் சென்ற மயில்கள் எல்லாம் இருப்பிடம் நாடி திரும்பிக் கொண்டிருந்தன.

வானம், மேக மூட்டத்துடன் மழை வருவதற்கான சூழலில் இருந்தது.

குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

தன் இணையுடன் சேர்ந்து இரை தேடித் தின்று கொண்டிருந்த ஆண்மயிலுக்குக் குளிர்ந்த காற்றும், அடர்ந்த மேகங்களால் ஏற்பட்ட இருண்ட சூழலும் மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கி ஆட்டம் போட வைத்தன.

ஓர் ஓவியனால்கூட உடனே வரைய முடியாத அளவுக்கு அற்புதமாய் அமைந்திருந்த தோகையை விரித்து ஆடத் தொடங்கியது. ஆடியபடியே, தன் அருகில் இருந்த பெண் மயிலைப் பார்த்து, எப்படி என் ஆட்டம்? என்று கேட்டது.

போதும், போதும், ஆடியது. புறப்படு நாம் வழக்கமாய்த் தங்கும் மரத்திற்குப் போவோம். மழை வருவது போல் இருக்கிறது. ம்ம்... கிளம்பு.... என்றது பெண்மயில்.

ஓகோ! என்னைப் போல் உன்னிடம் தோகை இல்லை... அதனால் ஆட முடியவில்லை. அந்தப் பொறாமையால்தான் என் ஆட்டத்தை நீ ரசிக்கவில்லை எனக் கோபம் கலந்த சொற்களை வீசியது ஆண் மயில்.

பொறாமையா? எனக்கா... சீச்சீ... அப்படியெல்லாம் எந்த வருத்தமும் இல்லை. போகலாம் வா! என்று அழைத்தது பெண் மயில்.

அதைக் கேட்காமலேயே, என் போன்ற ஆண் மயில்களுக்குத்தான் அழகும் இருக்கிறது. ஆட்டமும் வருகிறது. உன்னிடம் அழகும் இல்லை, அதனால் ஆட்டமும் இல்லை. மயில் என்றால் என் தோகையும், என் அழகும்தான் நினைவுக்கு வரும். உன்னை மயிலாகவே யாரும் மதிப்பதில்லை என்று கர்வத்தோடு பேசியது ஆண் மயில்.

ஓ... அப்படி ஓர் எண்ணமா உனக்கு? அழகான தோகையும், இந்த ஆட்டமும் மற்றவரின் மனத்தை மயக்குமே தவிர அதனால் உனக்கு என்ன பயன்? ஆபத்துதான் அதிகம்! என்றது பெண் மயில். அழகு, வீரம் எல்லாம் ஆணுக்கே உரியது! என அகந்தையோடு பேசியது ஆண் மயில்.

அழகு, வீரம் என்பதெல்லாம் ஆண் பெண் இருவருக்குமே பொதுவானது. நீ மனிதர்களைப்போல மமதையில் பேசாதே... என்றது பெண் மயில். எது இருந்தாலும் இல்லை என்றாலும், தாய்மை இருக்கிறதே அது போதும் எனக்கு. உன்னைப் போன்ற ஆணைப் பெற்றுத் தருவதே பெண்தானே?... அதை மறந்துவிடாதே!

ஆண் மயில் ஏதோ கூற முயன்றது. ஆனால், பெட்டை மயில் தொடர்ந்து பேசியது:

ஆண்தான் உயர்த்தி... பெண் கேவலம், புறத்தோற்ற அழகுதான் பெருமை தருமென நீ நினைக்கிறது தப்பு. அழகுப்போட்டி நடத்துவதும், ஆண் பெண் வித்தியாசம் பார்த்துக் கேவலப்படுத்துவதும் மனிதர்கள் வேலை. மயிலாகிய உனக்கு ஏன் அந்த வேலை? தோகை அழகாக இருந்தாலும், அதுவே ஆபத்திலும் சிக்க வைத்துவிடும். புறப்படு போகலாம்...

சொல்லி முடிப்பதற்குள் _ எங்கிருந்தோ வந்த இரண்டு வேடர்கள், பெரிய வலையை வீசி ஆடிக்கொண்டிருந்த ஆண் மயிலை அப்படியே சுருட்டிப் பிடித்தனர்.
சட்டெனப் பறந்து வேறு ஓர் இடத்திற்குச் சென்றது பெண் மயில். பறக்கவும் முடியாமல், தப்பிக்கவும் முடியாமல் தத்தளித்துத் தவித்தது ஆண்மயில்.

ஆணே உயர்வு,.. அழகே சிறப்பு... என வாய்கிழியப் பேசிய ஆண் மயில், வலையில் இருந்தபடி பெண் மயில் சொன்னதை நினைத்துப் பார்த்தது.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் புறத்தோற்ற அழகு முக்கியமில்லை. அதைவிட மனத் தூய்மை அழகே மகத்தானது. அது இல்லாததால்தான், பெண் மயிலைக் கேவலமாய்ப் பேசும்படி ஆயிற்று... என எண்ணி வருந்தியது.

அழகு பற்றிய போதையில் மமதையில் விழிப்புணர்ச்சி மழுங்கும் ஆபத்து புரிந்தது.

எனவே, வேடர்களிடம் சிக்க நேர்ந்த அவலம் விளங்கியது.

தப்பிக்க வழி தெரியாமல், அகவியது ஆண் மயில்.

அதன் அகவலில், இரக்கம் ஒலித்தது.

Share