Home 2015 பிப்ரவரி தனித்திறன் வளர்ப்போம்
வியாழன், 03 டிசம்பர் 2020
தனித்திறன் வளர்ப்போம்
Print E-mail

- சிகரம்

கற்றல் கற்பித்தல் வரையறைப்படியும், உளவியல், உடலியல் தத்துவப்படியும் பிஞ்சுப் பிள்ளைகளின் கல்விக்கூடக் கற்றல் என்பது அய்ந்து வயதில் தொடங்க வேண்டியதே சரியாகும். அதுவே குழந்தைகளின் எதிர்கால ஆற்றலுக்கும், ஆளுமைக்கும், வளர்ச்சிக்கும், வளமைக்கும் வழி வகுக்கும்.

ஆனால் இந்த உண்மையை மறந்து அல்லது மறுத்து பெற்றோர்களும், கல்விக்கூடங்களும் மூன்று வயதிலே கல்விக்கூடங்களில் கட்டாயப்படுத்திக் கசக்கிப் பிழிகின்றனர்.

துள்ளித் திரிந்து உடலும் உள்ளமும் இறுக்கமின்றி இதத்துடன் வளர வேண்டிய காலத்தில் பள்ளியறையில் அடைத்துப் பாடம் கற்பித்தல் பிஞ்சுகளுக்கு எதிரான வன்முறை என்பதை அனைத்துத் தரப்பினரும் அறிய வேண்டும்.

குழந்தைகளின் கற்றல் என்பது பிறந்தது முதலே தொடங்கிவிடுகிறது. தாயை அடையாளம் காணல், தந்தையைக் காணல், உற்றார் உறவினரைக் காணல், அருகிலுள்ள பொருள்களை அறிதல், வார்த்தைகளை  அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று ஒவ்வொன்றாய் அறிதல் என்று ஒவ்வொன்றாய் ஒவ்வொரு நொடியும் அறிதல், கற்றல் நடந்தே வருகிறது.

இவையெல்லாம் கட்டுப்பாடற்ற கற்றலும் கற்பித்தலும் ஆகும். கல்விக்கூடத்தில் நடக்கும் கற்பித்தலும் கற்றலும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது.

கட்டுப்பாட்டுடன் கூடிய முறை சார்ந்த கல்வி அய்ந்து வயதுக்கு முன்னர் என்பது கூடாது. ஆனால், அதை மறுத்தே இன்றைக்கு பிஞ்சுகளுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இது குறித்து கல்வியாளர்களும், அரசும், பெற்றோரும் கூடிப் பேசி உடனடித் தீர்வு காண வேண்டும்.

அய்ந்து வயது வரை வீட்டிலே விளையாட்டாக பலவும்  கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குரிய வாய்ப்பு பல குடும்பங்களில் இல்லாமையும், இருக்கும் குடும்பங்களில் பெற்றோர் வேலைக்குச் சென்று பிள்ளைகள் தனித்து விடப்படுவதாலும், மூன்று வயதிற்கு முன் (இரண்டு வயதிலேயே) Pre. K.G. என்ற பெயரில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் அவலம் நிகழ்கிறது.

இதைப் பயன்படுத்தி கல்வி வணிகர்கள் பல கவர்ச்சிகளைக் காட்டிக் காசு பறிக்கின்றனர். இவற்றைத் தவிர்க்க ஒவ்வொரு ஊரிலும் மழலையர் கூடங்கள் அமைத்து, அதில் கட்டாயம் பெண் ஆசிரியர்களை அமர்த்தி ஆடல், பாடல், விளையாட்டு என்று மரத்து நிழலில் தூய்மையான தரையில் விளையாட்டு, இடையிடையே அடிப்படையான எளிய கற்பித்தலும் கற்றலும் நடைபெற வேண்டும்.            இதற்குச் செலவு செய்ய அரசு தயங்கவே கூடாது.

இதைச் செய்துவிட்டு Pre. K.G., L.K.G., U.K.G. போன்ற மழலை விரோதக் கல்விக் கூடங்களை அறவே மூட வேண்டும்.

இரண்டு வயதில் பத்துக் கிலோமீட்டர் தூரம் பள்ளி வாகனத்தில் பயணம் செய்து, ஆயிரக்கணக்கான ரூபாயைச் செலவிட்டு, காலை உணவையும் மதிய உணவையும் முறையாக போதிய அளவில் உண்ணாமல், உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொண்டு, ஆங்கில எழுத்தையும் ஆங்கிலப் பாடலையும் கற்று, வகுப்பறையிலேயே படுத்துத் தூங்கிவிட்டு மீண்டும் வாகனத்தில் ஏறி வருகின்றனர்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், பள்ளிக்குச் சென்று படுத்துத் தூங்கிவிட்டுவர, பல கி.மீட்டர் பயணம், பல ஆயிரம் செலவு, உடலுக்கும், உள்ளத்துக்கும் கேடு. மன அழுத்தம் விம்மல், வெதும்பல் என்று பல...

இதைத் தவிர்க்க மேற்கண்ட மழலையர்-கூடங்களை ஒவ்வொரு ஊரிலும் அரசே அமைத்து பெண் ஆசிரியர்களைப் பணியமர்த்திப் பயிற்றுவித்தால், குழந்தைகள் 9 மணிக்குமேல் உண்டு முடித்துச் செல்லும், ஓடியாடி விளையாடும், ஆடல் பாடல் கற்கும், அடிப்படையான எண்ணறிவு எழுத்தறிவையும் பெறும்.

இதைக் கல்வியாளர்களும் அரசும் உடன் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். பெற்றோரும் இதில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மழலையர் கூடங்களில் பிள்ளைகளுக்கு டை, ஷு போன்றவற்றை விலக்கி, எளிய உடைகளை உடுத்தச் செய்ய வேண்டும்.

இதன்வழி பிள்ளைகளின் மனஇறுக்கம் தவிர்க்கப்படுவதோடு, மன மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கப்படுகிறது. மேலும், பிஞ்சுகளின் தனித்திறனும் வளர்க்கப்படுகிறது. கட்டுப்பாடில்லா, சுதந்திரமான செயல்பாடுகள் இங்கு இருப்பதால் பிள்ளைகளின் ஆடல், பாடல், விளையாட்டு, பேச்சாற்றல் வளர்க்கப்படுகிறது.

இப்படி பிஞ்சுப் பருவத்தில் கல்வியோடு கலந்து வளர்க்கப்படும் திறமைகள், பிற்காலத்தில் அவர்களை வல்லவர்களாகவும் சாதனையாளர்-களாகவும் மாற்றும்.

இன்றைக்குக் கல்விக்கூடங்கள் செய்கின்ற மிகப் பெரிய தவறு, தேர்வு நோக்கில், மதிப்பெண் இலக்கில் மாணவர்களுக்கு மற்றவற்றைக் கற்பிக்கத் தவறுவதாகும்.

நல்ல பண்பும், உலகோடு ஒத்துவாழும் பயிற்சியும், தன் கருத்தை வெளிப்படுத்தும் திறனும் இல்லாமல் எத்தனை உயர் மதிப்பெண் பெற்றாலும் என்ன பயன்?

இலட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு, இரவு பகலாய் கடினப்பட்டுப் படித்து உயர் மதிப்பெண் பெற்றவர்கள் பலர், வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுவது கண்கூடாய்க் காணும் காட்சி! இதற்கு என்ன காரணம்?

நல்ல மதிப்பெண் பெற்ற மாணவராயினும் பலரோடு பழகத் தெரியவில்லை. தன் கருத்தை, தான் சொல்ல வந்ததை, தன் நிறுவனத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லும் திறன் (Communication Skill) இல்லாமையே யாகும்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பிறரிடம் பேசக் கூச்சப்படுகின்றனர் அல்லது அஞ்சுகின்றனர். திறமையாகப் பேசத் தெரியாது விழிக்கின்றனர். சிக்கல் வந்தால் எதிர்கொள்ளத் தெரியாமல் ஒதுங்கி ஓடுகின்றனர். மாறாக, குறைவான மதிப்பெண் பெற்றாலும் சிறந்த திறமையுள்ள மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுச் சாதிக்கின்றனர்.

எனவே, பிள்ளைகளின் கல்வியில் செலுத்தும் கவனத்தை, அவர்களின் ஆற்றல்களை, நல்ல பண்புகளை, ஆளுமையை வளர்க்கவும் செலுத்த வேண்டும். அதுவே சரியான கல்வி முறை, அணுகுமுறை. அரசும், கல்வியாளரும், பெற்றோரும் உடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும்!

பிள்ளைகளும், உயர் மதிப்பெண் பெற உழைப்பது போலவே, பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஆளுமைத் திறன், உடல் திறன், கலை-யாற்றல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது கட்டாயக் கடமை!

Share