Home 2015 பிப்ரவரி பெரிய தண்டனை
வியாழன், 03 டிசம்பர் 2020
பெரிய தண்டனை
Print E-mail

அரிசி மூட்டைகள் ஆயிரக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெரிய அறை.

அந்த அறைக்குள் ஆட்கள் திடீரென வருவதும், சில மூட்டைகளைத் தூக்கிச் செல்வதும், பின் அறையை மூடிவிடுவதுமாக இருப்பார்கள்.

அவை அனைத்துமே கள்ளக் கடத்தலுக்கும், கலப்படம் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் அரிசி மூட்டைகள்.

அந்த அறைக்குள் இரண்டு எலிகள் இருந்தன. அவை மூட்டைகளைக் கடித்து ஓட்டையிட்டு அரிசியைத் தின்று வாழ்ந்து வந்தன.

அந்த மூலை இந்த மூலைக்கு ஓடுவதும், மூட்டைகளின் மீது ஏறிக் குதித்து விளையாடுவதுமாய்க் காலம் கழித்தன.

ஒரு நாள் மூட்டைகளைத் தூக்க வந்தவர்களில் ஒருவன் மூட்டை ஓட்டையிடப்பட்டு, கிழிந்து அரிசி கொட்டியிருப்பதைக் கண்டான். முதலாளி, இந்த இடத்திலே எலி இருக்குங்க என்றான்.

அப்படின்னா, கருவாட்டுத் துண்டு ஒன்னை மாட்டி எலிப்பொறியைக் கொண்டு வந்து வை. இன்னைக்கே செய்... இல்லேன்னா, எல்லா மூட்டையையும் கடிச்சுப் பாழாக்கிடும்! எனக் கனத்த குரலில் அதிகாரத்துடன் கூறினான், பதுக்கல் முதலாளி.

மூட்டைகளின் அடியில் ஒளிந்திருந்த எலிகள், இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தன.

முதலாளியும், கூலி ஆளும் வெளியே போனார்கள்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த கூலி ஆள், கருவாடு மாட்டிய எலிப்பொறியை மூட்டைகளின் அடியில் _ ஒரு மூலையில் வைத்துவிட்டுக் கிளம்பினான்.

கருவாட்டு வாசம் மூக்கைத் துளைத்தது.

ஒரு எலி மற்றொரு எலியைப் பார்த்து, மூட்டையைக் கடித்து அரிசியைத் தின்ற நம்மைப் பிடிக்கத்தான் கருவாடு பொருத்திய எலிப்பொறி வைத்திருக்கிறார்கள். அவசரப்பட்டு நீ போய் அதில் மாட்டிக் கொள்ளாதே என்றது.

அட... எத்தனை நாளைக்குத்தான் வெறும் அரிசியையே தின்பது?... கருவாடு சுவையாக இருக்குமே! என்றது மற்றொரு சுட்டி எலி.

வேண்டாம்... அது நம்மைப் பிடித்து அழிக்க மனிதன் செய்திருக்கும் சூழ்ச்சி. நீ போய் அதில் மாட்டிக் கொள்ளாதே! என்றது நட்பு எலி.

அதன் பேச்சைச் சட்டை செய்யாத சுட்டி எலி, அது அசந்த நேரத்தில் தாவிக் குதித்து ஓடி, கருவாடு பொருத்திய எலிப்பொறிக்குள் சென்று, கருவாட்டை நுகர்ந்து பார்த்தது.

வாய் ஊறியது. சட்டென்று தன் கூரிய பல்லால் கருவாட்டுத் துண்டைப் பிடித்து இழுத்தது.

டமார் என, பெரிய சத்தம்.

சுட்டி எலி உள்ளே மாட்டிக் கொண்டது.

சத்தம் கேட்ட மற்றொரு எலி, நாம் சொன்னதைக் கேட்காமல் போய் மாட்டிக் கொண்டது சுட்டி எலி என்பதைப் புரிந்துகொண்டது. எலிப்பொறி இருக்கும் இடத்திற்கு மெதுவாகச் சென்று பார்த்தது.

சுட்டி எலியோ, பொறிக்குள் மாட்டிய பிறகுதான் தான் செய்த தவற்றை உணர்ந்தது.

எப்படி வெளியே வருவது எனத் தெரியாமல் அந்தப் பெட்டிக்குள் இங்கும் அங்கும் தவிப்புடன் ஓடுவதும், கம்பி வழியே வெளியே எட்டிப் பார்ப்பதுமாக இருந்தது.

மற்றொரு எலி கம்பிக்கு அருகில் வருவது தெரியவும், சுட்டி எலி, என்னை எப்படியாவது காப்பாற்று... என்று பரிதாபமாய்க் கெஞ்சியது.

நான்தான் அப்பவே சொன்னேனே... வேண்டாம்... ஆபத்து... போகாதேன்னு... நீ கேக்கல்லே. மாட்டிக்கிட்டே... ஆயிரக்கணக்கான மூட்டைகளைப் பதுக்கி வைச்சு, அநியாயக் கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யிற இந்த முதலாளி மாட்டிக்கிட்டா, அவருடைய செல்வாக்கு, மேலிடத் தொடர்பு இதையெல்லாம் பயன்படுத்தி உடனே வெளியே வந்துடுவாரு.

ஆனா, வயித்துப் பசிக்காகக் கொஞ்சம் அரிசியத் தின்ன நீ மாட்டினா எப்படி வெளியே வர முடியும்? உனக்கு ஆசை காட்டி இந்தக் கூண்டுக்குள்ளே அடைச்சிருக்காங்க.
மூட்டையை ஓட்டை போட்டுத் தின்னது நீ செய்த சின்னத் தப்பு. அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை.

ஆனா... ஊரையே தேட்டை போட்டு, மூட்டை மூட்டையா பதுக்கி வச்சுக் கலப்படம் செய்து ஊரை ஏய்க்கிற பெரிய மனிதருக்கு யாரு தண்டனை கொடுப்பது?

இப்படித்தான் மனிதர்கள் இருக்காங்க. இது புரியாம அவசரப்பட்டு வந்து மாட்டிக்கிட்டியே! நான் என்ன செய்ய முடியும்? நானும் உன்னை மாதிரி எலிதானே... உன்னை மீட்கிற பலம் எனக்கு இல்லையே!

நாட்டை ஏய்க்கிற பெருச்சாளிகளுக்கு, நம்ம மாதிரி எலிகளைக் கொல்றது ரொம்பச் சுலபம். ஆனா, அவங்களை?... என்று அரற்றிக் கொண்டிருக்கும் போதே, கதவு திறக்கும் ஓசை கேட்டது.

அச்சப்பட்டு வாழும் அவல மனிதர்களைப் போல், பேசிக் கொண்டிருந்த எலி பயந்து ஓடி ஒளிந்தது.

கதையும் படமும்
மு.கலைவாணன்

Share