பூமிக்கடியில் ஓர் அருவி
Print

அருவி என்றாலே உயரமான மலைகளிலிருந்து பாய்ந்தோடி வருவதுதான் நம் நினைவுக்கு வரும். இந்த இதழின் 6 மற்றும் 7ஆம் பக்கங்களிலும் பார்த்து, படித்து மகிழ்ந்திருப்பீர்கள். பூமிக்கு அடியில் சுமார் 120 அடிக்குக் கீழே அருவி அமைந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

அமெரிக்காவின் டென்னஸி, சாட்டானோகா என்ற இடங்களின் அருகில் அமைந்துள்ள லுக்கவுட் மலைக் குகையில்தான் இந்த அருவி உள்ளது. இது ரூபி அருவி என அழைக்கப்படுகிறது. சுமார் 10 லட்சம் ஆண்டு-களுக்கு முன்னர் இங்குள்ள சுண்ணாம்புப் பாறைகள் உப்பு நீரினால் அரிக்கப்பட்டு மலையில் குகை உருவாகியுள்ளது.

இந்த அருவி இயற்கையாக குளிர்காலத்தில் ஏற்படும் மழை நீரின் காரணமாக உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தண்ணீர் 145 அடி கீழ்நோக்கி விழுந்து குளமாக குகையின் நிலப்பரப்பில் சேர்கின்றது. பின்னர் அங்கிருந்து மலையின் வழியே ஓடி டென்னஸி ஆற்றைச் சென்றடைகிறது. சுமார் 30 மில்லியன் ஆண்டுகளாக இந்த அருவி இருப்பதாகக் கூறப்படுகிறது.

லுக்அவுட் மலைக் குகையினைப் போல இல்லாமல்  ரூபி அருவி குகைக்குச் செல்ல இருபதாம் நூற்றாண்டு வரை இயற்கையான வழியில்லாமல் இருந்துள்ளது. 1905ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே சுரங்கப் பாதையின் கட்டுமானப் பணிக்காக லுக்அவுட் மலைக்குகையின் இயற்கைத் துளைகளும் மூடப்பட்டுவிட்டன.

அந்தப் பகுதியில் வசித்து வந்த குகை ஆர்வலர் லியோ லாம்பெர்ட் என்பவரின் முயற்சியால் 1928ஆம் ஆண்டு நடைவழிப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. புதிதாக உருவாக்கிய நுழைவாயிலின் வழியே லாம்பெர்ட்டின் குழு உள்ளே சென்றது. வித்தியாசமான பாறை அமைப்புகளைப் பார்த்து வியப்படைந்து பாதையை விரிவுபடுத்தினர்.

அப்போதுதான் நம்ப முடியாத விசித்திர அருவியைப் பார்த்தனர். தாங்கள் பெற்ற மகிழ்ச்சியை மேலே வந்து பார்த்த மக்களிடம் சொல்லி மகிழ்ந்துள்ளனர்.

லுக்அவுட் மலைக்குகை மற்றும் அருவி இரண்டையும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் திறந்து வைத்தனர். லுக்அவுட் மலைக்குகை பொதுமக்களின் ஆர்வத்தை ஈர்க்காததால் 1935ஆம் ஆண்டு மூடப்பட்டது. அருவி பார்வையாளர்களின் கண்களுக்கும் மனதிற்கும் நிறைவைத் தந்ததால் சுற்றுலாத் தலமாகிவிட்டது.

குகையினுள் மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டு, உலகிலேயே மின்சார விளக்கு அமைக்கப்பட்ட முதல் குகை என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மேலும் மின்தூக்கி (Elevator) வசதியும் செய்யப்-பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share