முதியவர் உருவாக்கிய மலைக்குகை
Print

மெக்சிகோ நாட்டின் மலைப் பகுதியிலிருந்து பாறைகளைக் குடைந்து குகைகளை உருவாக்கி கண்களைக் கவரும் வகையில் அழகுபடுத்தியுள்ளார் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரா பவ்லெட். தற்போது இவருக்கு 74 வயதாகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய கோடாரி, கரண்டி, முள்கரண்டி, ஸ்பூன் இவற்றை எடுத்துக்கொண்டு சென்றவர், தான் செல்வதற்கு ஒரு வழியை அமைத்துக் கொண்டுள்ளார். பிறகு இதர உபகரணங்களைப் பயன்படுத்தி கல், மண் ஆகியவற்றில் தனது கலை நுணுக்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

குகையின் வெளிப்புறத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் உள்ளே அரண்மனை போன்ற வடிவமைப்பைத் தனது கற்பனையால் _ திறமையால் கொண்டு வந்துள்ளார். குகையைப் பார்க்க வருபவர்களுக்குக் காயம் ஏற்படா வண்ணம் பாறைகளின் முனைகள் மழுங்கடிக்கப்பட்டு உள்ளன.

குறுகலான சந்துகள், பாழடைந்த பகுதிகள் நல்ல வெளிச்சம் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் நீளமான இடத்தில் படிக்கட்டுகள் வடிவமைக்கப்-பட்டுள்ளதுடன் குகையினுள் தங்குவதற்கும் உறங்குவதற்கும் ஏற்ற வசதிகளும் செய்யப்-பட்டுள்ளன. குகைக்குள் உள்ள படுக்கை, தலையணை மணலினால் செய்யப்பட்டுள்ளன.

ரா பவ்லெட் உருவாக்கிய குகையினைப் போல இன்னொரு குகையினை உருவாக்க வேண்டுமென்றால்  சுமார் 6.5 கோடி ரூபாய் (9 லட்சத்து 95 ஆயிரம் டாலர்கள்) செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாம். இவர் இதுவரை 12 குகைகளை வடிவமைத்துள்ளார்.

இந்தப் பன்னிரெண்டு குகைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டதாக அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். குகை வடிவமைப்புக் கட்டிடக்கலை நிபுணர்களிடையே ஆச்சரியத்தையும் சுற்றுலாப் பயணிகளிடம் பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

குகை வடிவமைப்பின் போது ரா பவ்லெட் வளர்த்த நாய் கருவிகளை எடுத்துக் கொடுத்து உடனிருந்து உதவி செய்துள்ளது.

Share