ஆரோக்கிய உணவு
Print

செர்ரி பழம்

இனிப்பு மற்றும் புளிப்புச் சுவைகளைக் கொண்ட செர்ரி பழம் ரோசசியே (Rosaceae) என்ற தாவரக் குடும்பத்தினைச் சேர்ந்தது. இனிப்புச் செர்ரிக்கு புருனஸ் அவியம் எனவும், புளிப்புச் செர்ரிக்கு புருனஸ் செரசஸ் எனவும் அறிவியல் பெயர் உண்டு. கிழக்கு அய்ரோப்பா மற்றும் ஆசியா மைனர் மண்டலங்களிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் கிடைக்கும் அசெரோலா வகை செர்ரிப் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகமாக உள்ளன. குறைந்த அளவு கலோரியினைக் கொண்டுள்ள பழங்களுள் செர்ரியும் ஒன்றாகும்.

வைட்டமின் ஏ, சி, கே, பி1, பி2, பி3, பி5, பி6, பி9, கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னிசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், தாமிரம் போன்ற சத்துகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. செர்ரி பழத்துக்கு நிறம் கொடுக்க உதவும் நிறமியான ஆன்தோசயனின் கிளைகோசிட் நம் உடம்பில் சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலாகச் செயல்படுகிறது.

நமது உடம்பில் சைக்ளோ ஆக்சிஜனேஸ் 1, சைக்ளோ ஆக்சிஜனேஸ் 2 போன்ற நொதிகள் செய்யும் வேலையினை ஆன்தோசயனின் நிறமி செய்வதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நொதியானது குடல் மற்றும் சிறுநீரகத்தைப் பாதுகாப்பதில் பங்கெடுப்பதுடன் கீல்வாதம் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது.

ஆன்தோசயனின் உடலில் சோர்வடைந்த தசைப் பகுதியை விரைவில் புத்துணர்ச்சியூட்ட உதவுவதாக பிரிட்டன் நார்தும்பிரியா பாப் விளையாட்டுப் பயிற்சி மய்ய ஆய்வக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

செர்ரி பழத்தில் உள்ள மெலடானின் என்ற நோய் எதிர்ப்புப் பொருள் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி ஏற்படுவதைத் தடுக்கிறது. இதுபோன்ற பாதிப்புகளில் வலியைக் கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டலக் கோளாறுகள், தலைவலி போன்றவற்றிற்கு எதிராக நோய்த் தடுப்பாக மெலடானின் செயல்படுகிறது.

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காலையிலும் மாலையிலும் செர்ரி பழச் சாற்றினை அருந்தி வர நன்கு தூக்கம் வரும் என நியுயார்க் ரோசஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக டெய்லி மெயில் பத்திரிகை கூறியுள்ளது.

மெலடானின் உடம்பிலுள்ள ஹார்மோனை முறைப்படுத்தித் தூக்கத்தைக் கொடுப்பதாக மெடிசனல் புட் பத்திரிகையும் விரிவான செய்தியினை வெளியிட்டுள்ளது.

இதில் உள்ள பொட்டாசியம் இதயம், இரத்த அழுத்தம் சீராகச் செயல்பட உதவுகிறது. புளிப்புச் செர்ரி பழத்தில் உள்ள லுடின், ஸி-_சான்தின், பீட்டாகரோட்டின் போன்ற ஆக்சிடென்டுகள் தீங்கு விளைவிக்கும் பிரீரேடிக்கல்களை விரட்டி அடிப்பதுடன் முதுமை மற்றும் புற்று நோய்க்கு எதிராகவும் செயல்படக் கூடியன.

கேக், ரொட்டி, பிஸ்கட், அய்ஸ்கிரீம் தயாரிப்புகளில் உலர்த்தப்பட்ட செர்ரி பயன்படுத்தப்படுகிறது.

Share