Home 2015 பிப்ரவரி பிரபஞ்ச ரகசியம் - 20
வியாழன், 29 அக்டோபர் 2020
பிரபஞ்ச ரகசியம் - 20
Print E-mail

விண்மலர்த் தோட்டம்

- சரவணா இராஜேந்திரன்

நவம்பர் மாத பிரபஞ்ச ரகசியத் தொடரில் கார்த்திகை விண்மீன் கூட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள்.   கார்த்திகை விண்மீன் கூட்டம் என்பது அருகருகே அமைந்த விண்மீன்களின் தொகுப்பு ஆகும்.

பொதுவாக நாம் வானில் பார்க்கும் போது ஆங்காங்கே மின்னிடும் விண்மீன்களைத்தான் பார்த்திருக்கிறோம். விண்ணை அடிக்கடி நோட்டமிடுபவர்களுக்கு ஆங்காங்கே தெரியும் விண்மீன்கள், நமது வீட்டில் விழாக் காலங்களில் மிளிரும் வண்ணத் தொடர்-விளக்குகள் போல் காணப்படும். நாம் முன்பு கூறியதைப்போல் இந்த விண்மீன் தோரணங்களை குளிர்கால வானில் தெளிவாகப் பார்க்க முடியும்.

கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் வெண்மை நிறச் சிறிய பூக்களைக் கண்டிருப்பீர்கள். இதற்குத் தும்பைப் பூ என்று பெயர். பொதுவாக மழை பெய்து முடித்த பிறகு இந்தத் தும்பைப் பூச்செடிகள் ஆங்காங்கே முளைத்து மலர் விட்டிருக்கும். பெரிய பெரிய பட்டாம்பூச்சிகள் இந்தப் பூவில் உள்ள தேனை உண்பதற்காக  பறந்துகொண்டு இருக்கும்.

பொதுவாக ஒரு செடியில் இரண்டு மூன்று மலர்கள்தான் இருக்கும்.   பத்துக்கும் மேற்பட்ட மலர்கள் ஏதாவது ஒரு செடியில் இருப்பதைக் காணலாம். இந்தத் தும்பைப் பூங்கொத்துகள் போலவே குளிர்காலத்தில் வானில் அபூர்வமாக  பூங்கொத்து போன்ற விண்மீன்கள் நமது கண்களுக்கு விருந்தாகும்.

இப்பூங்கொத்து விண்மீன்களைக் கண்டறிவது மிகவும் எளிது. எப்படி கார்த்திகை விண்மீன்களைக் கண்டறிந்து ரசித்தோமோ அதேபோல்தான் பூங்கொத்துப் போல் காட்சிதரும் விண்மீன்களையும் கண்டு ரசிக்கலாம்.

விண்மீன் கொத்துகள் இரண்டு வகைப்படும். விண்மீன் கொத்துகளில் பத்தாயிரத்திற்கும் குறைவான விண்மீன்கள் காணப்பட்டால் அவற்றை கோளகவிண்மீன் கொத்துகள்(Globular Cluster) என்று அழைப்பர், பத்தாயிரத்திற்கு மேல்  காணப்பட்டால்  பால்வெளி விண்மீன் கொத்துகள் என்று அழைப்பர். (Galactic Cluster) இவற்றில் அதிகமாக போலி விண்மீன் கொத்துகள் காணப்படுகின்றன.

நாம் சென்ற தொடர்களில் கண்ட ஒளிர்முகில் கூட்டங்களுக்கும் இந்த விண்மீன் கொத்துகளுக்கும்  வேறுபாடுகள் நிறைய உண்டு. ஒளிர்முகில்கள் விண்மீன்களின் பிறப்பிடமாகும். விண்மீன் கொத்துகள் தனிமங்களின் பிறப்பிடமாகும். விண்மீன்கள் தங்களுக்குள்ளான ஈர்ப்பு விசையின் காரணமாக அருகருகில் உள்ள விண்மீன்களை ஈர்க்க ஆரம்பிக்கும்.

அதேவேளையில் நேர்எதிர் விசையானது விண்மீன்களை விலக்கி வைக்கும். இதன் காரணமாக இத்தகைய விண்மீன்கள் ஒன்றையொன்று ஒட்டாமல் அருகருகே விலகி நிற்கும். அருகருகே அமைந்த இந்த விண்மீன் கொத்துகளின் வெப்பநிலை பல்லாயிரம் பாரன்ஹீட் இருக்கும்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த தலைசிறந்த வானியல் ஆய்வாளர் கார்ல் சகன் (Carl Sagan) கூறிய கருத்து ஒன்றை நாம் இங்கே நினைவு கொள்வோம். வரையறை செய்யமுடியாத இப்பெருவெளியில் (பிரபஞ்சத்தில்) ஒரு ஊசிமுனைப் பொருள்கூட வீணாவதில்லை  என்று கூறியுள்ளார்.

அவர் இந்த விண்மீன் கொத்துகளின் பணியைத்தான் மறைமுகமாகக் கூறியுள்ளார். விண்மீன்கள் வெடித்துச் சிதறும் போது அணுக்கள் ஒன்றிணைந்து பல்வேறு தனிமங்கள் உருவாகின்றன, இதை விவரமாக வரும் தொடர்களில் காணலாம், சில அணுக்கள் ஒன்றிணைய முடியாமல் தப்பிவிடுகின்றன. இந்த அணுக்களை இணைத்துத் தனிமங்களாக மாற்றும் பணியை இந்த விண்மீன் கொத்துகள் செய்கின்றன.

பொங்கல் திருநாளை நாம் அனைவரும் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். பொங்கல், வேளாண்மையை மய்யமாகக் கொண்டு கொண்டாடப்படும் விழாவாகும். விவசாயத்திற்குத் தேவையானது தண்ணீர், தாவரங்களுக்குத் தேவையான மாவுப்பொருட்கள், புரதங்கள் இவற்றைத் தாவரங்கள் எங்கிருந்து எடுக்கின்றன-? மண்ணிலுள்ள தனிமங்களில் இருந்துதானே, ஆம் பாஸ்பரஸ், சோடியம், கந்தகம், நைட்ரஜன், நீர் போன்ற பல்வேறு தனிமங்களை உருவாக்கும் பணியில் இந்த விண்மீன் கொத்துகள் ஈடுபட்டுள்ளன.

நீங்கள் டிஸ்கவரி சேனல், நேசனல் ஜியோகிராபிக் போன்ற தொலைக்காட்சி அறிவியல் தொடர்களைப் பார்க்கும் போது தயாரிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் ஒரு இடத்தில் மூலப்பொருள் உருவாகும், இன்னொரு இடத்தில் அதை இணைக்கும் பணி நடைபெறும். பிறிதொரு பகுதியில் அதைப் பொதிக்கும் (பேக்கிங்) பணி நடக்கும். விண்மீன் கொத்துகள் இந்த இணைக்கும் பணியைத்தான் செய்கின்றன.

எடுத்துக்காட்டாக பாஸ்பரஸ் 15 அணுக்கள் இணைந்து உருவான தனிமமாகும். இந்த அணுக்களை இணைக்கும் பணியைத்தான் இந்த விண்மீன் கொத்துகள் செய்கின்றன. இது எப்படிச் சாத்தியமாகிறது? என்று கேட்கலாம். அணுக்கள் நமது சூரியனைவிட ஆயிரக்கணக்கான பாரன்ஹீட் வெப்பநிலையில் ஒன்று சேர்கின்றன. சிலவகைத் தனிமங்கள் நமது சூரியனின் உட்பகுதி வெப்பத்தில்கூட இணைவதில்லை.

ஆனால் விண்மீன் கொத்துகளிடையே நமது சூரியனைப் போன்ற விண்மீன்களும், இதைவிடப் பெரிய அளவினாலான விண்மீன்களும் உள்ளன. மிகவும் அருகருகே உள்ள இந்த விண்மீன்களின் இடையே வரும் அணுத்துகள்கள் அங்குள்ள வெப்பத்தால் ஒன்றிணைந்து பல்வேறு தனிமங்கள் உருவாகின்றன. இந்தத் தனிமங்கள் பெருவெளியில் வீசப்படுகின்றன.

இவை பயணித்துக் கொண்டே வந்து ஒளிர்முகில் கூட்டங்களில் நுழையும்போது  நமது சூரியன் போன்ற சிறிய விண்மீன்களில் ஒட்டிக் கொள்கின்றன. பின்பு இவை கோள்கள் உருவாகும் போது அக்கோள்களில் தஞ்சம் புகுந்துவிடுகின்றன. இப்படித் தஞ்சம் புகும் தனிமங்களால் நமது பூமியைப் போன்ற உயிரோட்டம் மிகுந்த கோள்கள் உருவாகின்றன.

இந்த விண்மீன் கொத்துகளை, கார்த்திகை விண்மீன் கூட்டங்களுக்கும் ஓரியன் விண்மீன் கூட்டத்திற்கும் இடையில் உள்ள காளை வடிவை ஒத்த விண்மீன் குழுக்களில் காணலாம். முக்கியமாக பொங்கல் கொண்டாடும் அந்த வாரம் முழுவதும் இந்த விண்மீன் கொத்துகள் நேரெதிராக நம் தலைக்கு மேல் காணப்படும்.

காளை வடிவை ஒத்த இந்த விண்மீன் குழுமத்தை ஆங்கிலத்தில் டாரஸ் (Taurus) என்பார்கள். இந்த விண்மீன் குழுமங்களில் உள்ள விண்மீன்களை டாரி என்று அழைப்பார்கள். இந்த டாரஸ் விண்மீன் குழுமங்களில் 5 முக்கியமான விண்மீன்கள் உள்ளன. இதில் ஆல்பா டாரி (Alpha Tauri) என்ற அல்டிபெரான் விண்மீன், வடமொழியில் ரோகினி விண்மீன் என்று அழைக்கப்படுகிறது இந்த விண்மீன் நமது பூமியிலிருந்து 69 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

அடுத்து பீட்டா டாரி (Beta Tauri) என்ற அல்நாத். இது 130 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இதனை அடுத்து உள்ள ஈட்டா டாரி (Eta Tauri) என்ற அல்சியோன் 238 ஒளியாண்டு தொலைவிலும், காமா டாரி (Gamma Tauri) என்ற ஹையாதம் ப்ரிமஸ் 166 ஒளியாண்டு தொலைவிலும், சீட்டா டாரி (Zeta Tauri) என்ற அல்ஹோகா 489 ஒளியாண்டு தொலைவிலும் உள்ளன. (ஒரு ஒளியாண்டு என்பது ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தூரமாகும்). காளை வடிவ விண்மீன் குழுமத்தின் கொம்பு போன்ற பகுதியில் உள்ள சீட்டா டாரி என்ற அல்ஹோகாவிற்கு அருகில்தான் நண்டு ஒளிர்முகில் கூட்டம் உள்ளது.

இந்த ஒரே ஒரு விண்மீன் குழுமத்தில் மட்டும்தான் இரண்டு விண்மீன் கொத்துகள், ஒரு ஒளிர்முகில் கூட்டம் என்று பல அறிவியல் காட்சிகளை நமது கண்களுக்குக் காட்டுகிறது.

நாம் உயிர்வாழத் தேவையான தனிமங்களைத் தரும் விண்மீன் கொத்துகள் சரியாக பொங்கல் தினத்தன்று நமது கண்களுக்குக் காட்சிதருவது தற்செயல் நிகழ்வா அல்லது நம் முன்னோர்கள் இதை அறிந்துதான் அந்த நாளில் பொங்கல் விழாவை உருவாக்கினார்களா? என்பது புதிரான கேள்வியாக உள்ளது.

போலி விண்மீன் கொத்துகள்

நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருக்கும் நமக்கு வெறும் கண்களால் (இதுவரை கண்டறிந்தது) மூன்று தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது 7 முதல் 12 விண்மீன் கொத்துகள் காணக் கிடைக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலிய மற்றும் பசிபிக் பெருங்கடல் நாடுகளில் விண்மீன் கொத்துகள் ஆயிரக்கணக்கில் வெறும் கண்களால் காணக் கிடைக்கும்.

ஆம்! ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் கடல் நாடுகளில் இரவு வானம் நமது வானம் போல் காட்சி தராது. அங்கு நமது பால்வெளி மண்டலத்தின் நீள்வெட்டுத் தோற்றம் நம் கண்களுக்குக் காட்சி தரும். பால்வெளி மண்டலத்தின் ஓரங்களில் லட்சக்கணக்கான விண்மீன் கொத்துகள் காட்சி தரும். இவற்றில் பெரும்பாலானவை போலி விண்மீன் கொத்துகள் என்று கருதப்படுகின்றன. காரணம், நமது பால்வெளி முழுவதுமே எண்ணிலடங்கா விண்மீன்களைக் கொண்ட சுருள்வடிவ உருவகமாகும்.

ஒரே நேர்க்கோட்டில் பார்க்கும் போது பல்வேறு விண்மீன்கள் நெருக்கமாக நமது கண்களுக்குக் காட்சி தரும். ஆனால் உண்மையில் அவை கோடிக்கணக்கான ஒளியாண்டு தூரங்களில் விலகி நிற்கும் விண்மீன்கள் ஆகும். ஆகவே ஆஸ்திரேலிய வானில் பால்வெளி மண்டலத்தின் வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் அதிகப்படியான பால்வெளி விண்மீன் கொத்துகள் (Galactic Cluster) போலி விண்மீன் கொத்துகள் என்றும் அழைக்கப்படும்.

அடுத்த தொடரில் முயல் வடிவ விண்மீன் குழுமம் மற்றும் கண்சிமிட்டும் இரட்டை விண்மீன்களைத் (Demon Blinking) தேடிப் பயணிக்கலாம்.

Share