பிஞ்சு நெஞ்சை நஞ்சாக்காதீர்
Print

பிஞ்சு நெஞ்சை நஞ்சாக்காதீர்

-சிகரம்

பிஞ்சுகள் நெஞ்சு என்பது விண்ணிலிருந்து வீழும் தூய மழைத்துளி போன்றது. மழைநீர் மாசுபடும்போதே அது கேடுறுகிறது. அப்படித்தான் பிள்ளைகளின் தூய நெஞ்சும் புறச்சூழலாலே நஞ்சாகிறது.

பிள்ளைகளின் வாழ்வு பெரியவர்கள் பொறுப்பில். அதன் வாழ்வாயினும், வளர்ச்சியாயினும், நலமாயினும், நல்லொழுக்கமாயினும் அது நம்மாலே தீர்மானிக்கப்படுகிறது. பிள்ளைப் பருவம் தீர்மானித்து செயலாற்ற முடியாத பருவம். பெரியவர்களை நம்பி, சார்ந்து வாழ வேண்டியது.

பிள்ளைக்குக் கொடுக்கும் உணவு, மருந்து, கருத்து, பாதுகாப்பு எல்லாம் பெரியவர்களாலே தீர்மானிக்கப்படுகிறது. இதில் பெரியவர்கள் செய்யும் பிழை பிள்ளைகளை வாழ்நாள் முழுக்கப் பாதிக்கும்.

எனவே பிள்ளைகளை வளர்ப்பதில் பெரியவர்கள் அதிகப் பொறுப்புடனும் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். பெரியவர் செய்யும் தவற்றுக்கு, தப்புக்கு பிள்ளைகள் தண்டனையும் பாதிப்பும் அடையலாமா? என்பதை மனிதநேயத்தோடு சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

பிள்ளைகளின் பாதிப்பு இருவகையில் பெரியவர்கள் மூலம் வருகிறது. 1. உடல் சார்ந்தது. 2. உள்ளம் சார்ந்தது.

உடல் சார்ந்தது:

(அ) உணவு: பிள்ளைகளுக்குக் கொடுக்கும் உணவை பெரியவர்கள் மருத்துவர் பரிந்துரைப்படி பொறுப்புடன் கொடுக்க வேண்டும். ருசி, கவர்ச்சி, நாகரிகம் என்ற நாட்டத்தில் கேடான உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

(ஆ) மருந்து: குழந்தைகளுக்குத் தரப்படும் மருந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படியே கொடுக்க வேண்டும். நமக்குத் தெரிந்த மருந்தையெல்லாம் குழந்தைக்குக் கொடுத்துச் சோதனை செய்யக் கூடாது.

(இ) உடை: பிஞ்சுகளுக்கு உடை மகிழ்ச்சியும், சுதந்திரமும் தருவதாய் இருக்க வேண்டும். மாறாக டை, ஷு, சாக்ஸ் என்று இறுக்கி நெறுக்கி பிழிவதாய் இருக்கக் கூடாது.

(ஈ) உடற்பயிற்சி: மனமும் உடலும் நலம் பெறும் வகையில் பிள்ளைகளை மகிழ்வாக விளையாடச் செய்ய வேண்டும். பள்ளியிலும், வீட்டிலும் புத்தகத்தைக் கொடுத்து புத்தகப் புழுவாக்கி, கருக்கக் கூடாது.

(உ) தூய்மை: குளித்தல், கழிவகற்றல், ஆடை, உணவு இவற்றில் தூய்மை முழுமையாய் பின்பற்றப்பட வேண்டும்.

உள்ளம் சார்ந்தது:

உடல் சார்ந்த மாசுகள், நஞ்சுகள், கேடுகள் நீங்க, நீக்கப்பட வாய்ப்புண்டு. ஆனால் உள்ளம் சார்ந்த மாசும், நஞ்சும், கேடும் வாழ்நாள் முழுவதும் நிலைக்கும், தழைக்கும். எனவே, உள்ளம் சார்ந்து பிஞ்சுகளைப் பொறுப்போடு வளர்க்க வேண்டும்.

(அ) காட்சி: பிஞ்சுகள் காணும் காட்சிகள் அவர்களின் உள்ளம் செம்மையும், வளமும், திறனும், உறுதியும் பெறும் அளவிற்கு அமைய வேண்டும். பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சு கலக்கும் வகையில் எக்காட்சியும் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் முன் பெரியவர்களின் செயல்பாடுகளும் கண்ணியமானவையாக, பின்பற்றத்தக்கவையாக இருக்க வேண்டும்.

(ஆ) பேச்சு: கடுஞ்சொற்களை, கண்ணியமில்லா வார்த்தைகளை பிள்ளைகள்-முன் பேசக்கூடாது. மரியாதையும், மாண்பும் உடைய வார்த்தைகளைப் பேச வேண்டும், பேசப் பழக்க வேண்டும்.

(இ) கல்வி: குழந்தைகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் தரும் நல்ல நூல்களைத் தந்து படிக்கச் செய்ய வேண்டும். மனம் கெடும் நூல்களை குழந்தைகள் படிக்காதவாறு சூழல் தரவேண்டும்.

(ஈ) இணையம்: இன்றைய அறிவியல் உலகில் இணையம் குழந்தைகளின் இணைபிரியா நண்பனாகப் பிணைந்துவிட்டது. எனவே, பெரியவர்களின் கண்காணிப்பில் பிள்ளைகளின் இணையப் பயன்பாடு அமைய வேண்டும். இணையம் என்பது கத்தியைப் போன்றது. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே விளைவு வரும்.

(உ) மூடநம்பிக்கை: பெரியவர்களுக்குள்ள மூடநம்பிக்கைகளையெல்லாம் பிள்ளைகளின் உள்ளத்தில் பதிக்கக் கூடாது. பிள்ளைகள் மனதில் பதிக்கப்படும் மூடநம்பிக்கைகள் அவர்களின் உள்ளம், உடல், வளர்ச்சி, வாழ்வு எல்லாவற்றையும் மாற்றும், பாதிக்கும். குறிப்பாகத் தன்னம்பிக்கையைக் குலைக்கும்.

எனவே, பிஞ்சுகளுக்கு சுயசிந்தனை வருகின்றவரை பகுத்தறிவிற்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத எக்கருத்தையும் பிஞ்சுகளின் நெஞ்சில் பதிக்கக் கூடாது.

அதேபோல் மூடச் செயல்களைச் செய்ய பிள்ளைகளை அனுமதிக்கக் கூடாது. வீட்டிலும் சரி கல்விக்கூடங்களிலும் சரி பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சைக் கலப்பவர்கள் பெரியவர்களே! எனவே பெரியவர்கள் பொறுப்புடன் நடக்க வேண்டியது கட்டாயம்.

(ஊ) நற்குணங்கள்: மனிதநேயம், இரக்கம், உதவுதல், கூடிவாழல், இழிவு செய்யாமை, பேதம் கருதாமை, நட்பு, பகை பாராட்டாமை, புறங்கூறாமை, பொய் சொல்லாமை போன்ற நல்ல குணங்களை பிஞ்சுகளின் நெஞ்சில் பதிக்க வேண்டும்.

‘நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல் பதாகும் அறிவு’

பிஞ்சுகளுக்கு இது மிகவும் பொருந்தும். பெரியவர்கள் உணர்க!

Share