Home 2015 ஏப்ரல் உலகின் முதல் நூலகம்
வியாழன், 22 அக்டோபர் 2020
உலகின் முதல் நூலகம்
Print E-mail

உலகப் புத்தக நாள்: ஏப்ரல் 23

உலகின் முதல் நூலகம்

புத்தாக்கம் தரும் புத்தகங்களின் பாதுகாப்புப் பெட்டகமாக நூலகங்கள் திகழ்கின்றன. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கு மட்டுமன்றி செய்முறைப் பயிற்சி (Assignment),  தொடர்பான கட்டுரைகள் சமர்ப்பிப்-பதற்கு ஏராளனமான மேற்கோள்-களுடன் செய்திகளைத் தொகுத்தளிக்க நூலகங்கள் பெரிதும் பயன்படுகின்றன.

அது மட்டுமா? நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் படிப்பதற்கும், பல்துறை தொடர்பான செய்திகளை அறிந்து கொள்வதற்கும் உதவும் செய்திகளின் சங்கமமே நூலகங்கள் என்றால் மிகையாகாது.

எதற்கும் தோற்றம் என்ற ஒன்று இருக்கும்தானே. நூலகத்தின் தோற்றத்திற்குக் காரணமானவர்களாக ஈராக் நாட்டைச் சேர்ந்தோர் உள்ளனர். அதாவது, முற்காலத்தில் மெசபடோமியர்கள் என அழைக்கப்பட்ட ஈராக்கியர்கள். தற்போதைய டைகிரிஸ் மற்றும் யூபிரட்டிஸ் ஆகிய ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பே பண்டைய மெசபடோமியப் பகுதியாகும்.

முன்பு மெசபடோமியா என ஒரே பெயரினால் அழைக்கப்பட்டது. தற்போது ஈரான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டத்தில் குறிப்பிடத்தக்க நான்கு பேரரசுகளாக சுமேரியா, பாபிலோனியா, அசிரியா மற்றும் அக்காத்தியர் ஆகியன விளங்கின.

சுமார் 3 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு அசிரியப் பேரரசின் நிர்வாகத் துறையில் ஏற்பட்ட குழப்பங்களை சென்னாசெர்ப் என்ற அரசர் நீக்க விரும்பினார். அரசாங்கத்தினர் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் களிமண் தகடுகளில் எழுதி, சூளைகளில் சுட்டுக் காயவைத்து பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படி ஆணையிட்டார்.

மன்னரின் ஆணையையடுத்து, அரசாங்க ஒப்பந்தங்கள், கடிதங்கள், ஆணைகள், உளவு அறிக்கைகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் களிமண் தகடுகளில் எழுதப்பட்டன. பின்னர், சூளைகளில் சுட்டு அரசாங்கக் கருவூலங்களிலும், கோவில் கருவறைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் மருத்துவக் குறிப்புகள், சமய நூல்களும் பாதுகாக்கப்பட்டன.

அசிரியப் பேரரசின் கடைசி மன்னர் அகர்பானிபல் (கி.மு.700 _ கி.மு.600) ஆட்சியின்-போது, களிமண் தகடுகள் 30 ஆயிரத்திற்கும் அதிகமாகின. வெவ்வேறு இடங்களில் வைத்துப் பாதுகாப்பது மிகவும் கடினமாக இருந்தது.

எனவே, அசிரியாவின் தலைநகரான (தற்போதைய ஈராக்) நினிவெக் (Nineveh) (தற்போது மோசுல்) என்னுமிடத்தில் அனைத்தையும் துறைவாரியாகப் பிரித்து அடுக்கி வைக்க மன்னர் ஆணையிட்டார். மன்னரின் ஆணைப்படி, துறைவாரியாகப் பிரித்து அடுக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டது.

இதுவே உலகில் அமைக்கப்பட்ட முதல் நூலகம் ஆகும். இந்த நூலகம் தி ராயல் லைப்ரரி ஆஃப் அஸ்குர்பனிபல் (The Royal Library of Ashurbanipal) என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

இந்த நூலகத்தைக் கேள்விப்பட்ட அலெக்சாண்டர் (கி.மு.356 _ கி.மு.323) நேரில் சென்று பார்த்தார். அஸ்குர்பனிபலைவிட பெரிய நூலகம் கட்ட நினைத்தார். எகிப்து மக்கள் அப்போது பாப்பிரஸ் தாள்களில் எழுதி வந்தனர்.

உலகம் முழுவதுமிருந்து கல்வி, கலை, இலக்கியம், கணிதம், அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளிலிருந்து சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த நூல்கள் அனைத்தும் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பாப்பிரஸ் தாள்களில் எழுதப்பட்டன.

வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த-போது அலெக்சாண்டர் மரணம் அடைந்தார். எனினும் அவரது நெருங்கிய நண்பரும், அப்போதைய எகிப்தின் அரசருமான டாலமியின் மேற்பார்வையில் வேலைகள் நடைபெற்றன. கி.மு.300இல் எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரில் 7 லட்சத்திற்கும் அதிகமான பாப்பிரஸ் தாள்களைக் கொண்ட பொதுநூலகம் அமைக்கப்பட்டது.

நூலகத்திற்கு தி ராயல் லைப்ரரி ஆஃப் அலெக்சாண்டிரியா (The Royal Library of Alexandria) என பெயர் வைக்கப்பட்டது.

பின்னர் மேலைநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் நூலகங்களின் தேவையினை உணர்ந்தன. பல்கலைக்கழக வளாகங்களிலேயே நூலகங்கள் அமைக்கப்-பட்டன. பின்னர் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து இன்று நாம் பார்க்கக்கூடிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளன.

Share