Home 2015 ஏப்ரல் உதயமானது பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்
புதன், 21 அக்டோபர் 2020
உதயமானது பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்
Print E-mail

இருக்கு... ஆனா, இல்ல _ இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கா? _ பதிலுக்கு, இருக்கு... ஆனா, இல்ல_ன்னு சொல்லிடாதீங்க, வரும்... ஆனா, வராது _ என்ற திரைப்பட உரையாடலை நினைவுபடுத்திக் கொள்ளுவோம். வேறொன்றும் இல்லை. பள்ளிக்கூடம் இருக்கு. ஆனா, பாடம் இல்ல. அடடே... கேட்கறதுக்கே அருமையா இருக்கே!

அப்படிக்கூட பள்ளிக்கூடம் இருக்கான்னு _ அடுத்த கேள்வி அம்பு மாதிரி விசுக்_ன்னு வரும் இல்லையா? அதுதான் நம்ம இலக்கு. அதோட தொடக்கம்தான் போன தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி. காலப்போக்குல, இந்த சமச்சீர் கல்விதான் நாம மேலே சொன்ன, பள்ளிக்கூடம் இருக்கு.

ஆனா, பாடம் இல்லே என்றே மாறப் போகிறது. இதன் மூலமா, வெறுமனே மனப்பாடம் மட்டுமே செய்கிற இயந்திரங்களாக மாணவர்களைத் தயாரிக்காமல், ஏன்? எதற்கு? எப்படி? என்கிற அறிவியல் முறையில் தானாகவே சிந்தித்து, தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டு விளையாட்டுப் போலவே கல்வியைக் கற்கக்கூடிய நிலை உருவாகவிருக்கிறது.

இந்தச் சிந்தனையை மாற்றுக் கல்விக்கான தேவையாக, உலகளவில் அறிஞர்கள் முன்வைத்து வருகின்றனர். சில இடங்களில் நடைமுறைக்கும் வந்து-விட்டிருக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்ந்த நமக்கு வேண்டாமா இந்தக்கல்வி என்ற ஏக்கத்தின் அடிப்படையில்தான், குடியாத்தம் நகரத்திலுள்ள லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் பள்ளியில் கடந்த 07.03.2015 _ அன்று முதன்முறையாக பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடங்கப்பட்டு, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடத்தி, மாணவர்களுக்கு பள்ளியில் கிடைக்காத அறிவு, ஆற்றல், அன்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கும் அரிய பணிகள் மேற்கொள்ளப்-பட்டன.

இதைத் தொடங்கி வைத்த பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே மேற்கண்ட கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, சிறந்த பொம்மலாட்டக் கலைஞரும், பெரியார் விருது பெற்றவருமான கலைவாணன் அவர்கள் அறிவியல், ஒழுக்கம், சமூகத்தை உன்னிப்பாகக் கவனிப்பது, கூர்த்த மதிக்கான கேள்வி, பதில்கள்,

தன்னம்பிக்கையை வளர்க்கும் முறைகள், சின்னச்சின்ன விளையாட்டுகள், ஆசிரியர்கள் பள்ளிகளில் நடத்த வாய்ப்பே இல்லாத ஆனால், வாழ்க்கையில் கடைபிடித்தே தீரவேண்டிய நல்ல, நல்ல அனுபவங்கள், அதிலிருந்து நாம் பெறவேண்டிய பாடங்கள் ஆகியவற்றையே சுவையான, அதேசமயம் நகைச்சுவையுடன் கூடிய பாடங்களாக்கி மாணவர்களின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டார்.

இதில் மாணவர்களின் ஈடுபாடு எப்படி இருந்த-தென்றால்? ஒரு மொட்டு எப்படி இயற்கையில் மலர்கிறதோ அது போன்று மாணவர்கள் மலர்ந்து மணம் வீசியபடியே பாடங்களைக் கற்றுக்கொண்டனர். இதில் மாணவர்களைவிட ஆசிரியர்களுக்குத்தான் கற்றுக்கொள்வதற்கான தேவை அதிகமாக இருந்தது. காரணம், அடுத்த தலைமுறையினர் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களின் பொறுப்பும், கடமையும் அப்படிப்பட்டது.

பாடங்களைக் காணொளி மூலமாகக் காட்டும் கல்விமுறை வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையின் சார்பில், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக, குறும்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. இது முதல் தலைமுறையாக கல்விகற்கும் மாணவர்கள் படும் அவதிகளை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும் வகையில் அமைந்-திருந்தது.

அதைத் தொடர்ந்து வானவியல் அறிவியல் பாடங்களைக் பூமிசுழற்சிப் பெயர்ச்சி பேரவையைச் சார்ந்த செந்தமிழன் சேகுவேரா மற்றும் உடுமலை வடிவேல் ஆகியோர் கற்றுக்கொடுத்தனர்.

சீனா போன்ற நாடுகளில் முதல் 5 வகுப்பு முடிவதற்குள்ளாகவே நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற அய்ந்து வகையான பிரிவுகளில் பாடங்களைக் கற்றுக்கொடுத்து மிகச் சிறிய வயதிலேயே உலகையே அறிந்துகொள்ளும் வாய்ப்பு அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இங்கே அப்படியில்லையே!  இதைக் கண்டு மனம் வெதும்பிய தந்தை பெரியார் அவர்கள், மற்றவர்களைப்போல பரிதாபப்-படுவதோடு நின்றுவிடாமல், மற்றமற்ற நாடுகளில் உள்ள மக்களைப் போல மானமும், அறிவும் உள்ள மக்களாக நம்மக்களையும் மாற்றவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு, அதற்காகவே தன் வாழ்வையே பணயமாக்கினார்.

அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். அவருடைய கனவை முழுமையாக்க, நமது அடுத்த தலைமுறை ஜாதி, மதம், கடவுள், மூடநம்பிக்கைகள் என்று எதுவும் குறுக்கே வராமல் படிக்கவேண்டும். அதற்கு ஒரு அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று தொடங்கப்பட்ட இந்த மாபெரும் பணியில் உறுதுணையாக இருந்த லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் மானமிகு சடகோபன் அவர்களுக்கும், பள்ளியின் நிர்வாகத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பெரியார் பிஞ்சு மாத இதழின் நன்றியும் வாழ்த்தும்.

இந்தப்பணி தமிழகம் முழுவதும் தொடரும்.

Share