அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14
Print

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14

அண்ணல் அம்பேத்கர் லண்டன் சட்டக் கல்லூரியில் படித்தவர். லண்டன் மாநகரிலுள்ள தொல்பொருள்காட்சி சாலையில் பெரிய நூலகம் இருந்தது. தமக்கு நேரம் கிடைக்கும்போதும், விடுமுறை நாள்களிலும் அம்பேத்கர் நூலகத்தில்தான் இருப்பார்.

விடுமுறை நாள்களில் தொல்பொருள்காட்சிசாலை திறந்ததும் உள்ளே செல்வார். படிக்க விரும்பும் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு பசி, தாகம் தெரியாமல் படித்துக் கொண்டே இருப்பார்.

மாலையில் தொல்பொருள்காட்சி சாலையில் வேலை செய்பவர் வந்து, நேரமாகிவிட்டது என்று கூறும்போதுதான் அண்ணல் அம்பேத்கர் சுயநினைவுக்கு வருவாராம். முக்கியமான செய்திகளைக் குறிப்பெடுத்துக் கொள்வாராம். தினமும் அவர் அணியும் கோட் பையில் ஒரு கத்தைக் குறிப்பேடுகள் இருக்குமாம்.

தான் தங்கியுள்ள விடுதிக்கு வந்ததும், அங்கிருந்த பெண் கொடுத்த உணவினைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பாடப் புத்தகங்களையோ, வேறு புத்தகங்களையோ எடுத்துப் படிக்க ஆரம்பித்து விடுவார்.

அண்ணல் அம்பேத்கரின் அறையில் தங்கியிருந்த மாணவர், அம்பேத்கர் இரவு நீண்ட நேரம் படிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். ஒருநாள், ஏன் இவ்வளவு நேரம் படிக்கிறீர்கள்? மனிதனுக்கு ஓய்வு தேவையில்லையா? என்று கேட்டுள்ளார்.

நண்பனே, ஓய்வு தேவைதான். ஆனால், காலம் நமக்காகக் காத்திருக்காதே. நானோ ஏழை. எனக்கோ படிப்பை விரைவாக முடிக்க வேண்டிய சூழ்நிலை. நான் சுகமாகத் தூங்கினால் எப்படி என் படிப்பைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியும் என்று சிரித்துக் கொண்டடே கூறியுள்ளார் அண்ணல் அம்பேத்கர்.

Share