Home 2015 ஜூன் ஆர்வத்துடன் கற்போம் ஊர்போற்ற உயர்வோம்!
திங்கள், 08 மார்ச் 2021
ஆர்வத்துடன் கற்போம் ஊர்போற்ற உயர்வோம்!
Print E-mail

கோடை விடுமுறை கழிந்து, பள்ளிக்குச் செல்ல பிஞ்சுகள் தயாராய் இருப்பீர்கள்! விடுமுறையில் புதுப்புது இடங்கள், பொழுதுபோக்கு, ஆட்டம், விளையாட்டு, சுற்றுலா என்று பல.

உறவினர் வீட்டிற்குச் சென்ற மகிழ்வு, நண்பர்களோடு மகிழ்ந்த பூரிப்பு, பள்ளிப் பாடச்சுமை இல்லாத நிம்மதி என்று சுகமான உணர்வுகள் பல. தற்போது உள்ளுக்குள் உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதால், ஆர்வத்தோடு பள்ளிக்குச் செல்ல அது உதவும்.

மீண்டும் பள்ளித் தோழர்களைச் சந்திக்கப் போகிறோம், ஆசிரியர்களைச் சந்திக்கப் போகிறோம் என்ற ஆர்வம் எல்லா பிஞ்சுகளுக்குள்ளும் எழும். மேல் வகுப்பிற்குத் தேர்ச்சிபெற்ற மகிழ்வும் உங்களுக்குக் கூடுதல் உற்சாகம் அளிக்கும். ஆக, பள்ளி திறப்பது, பள்ளிக்குச் செல்வது உங்களுக்கு மகிழ்வை அளிக்கும் என்பதில் அய்யமில்லை.

என்றாலும், ஒரு மாதம் விளையாடித் திரிந்து, ஊர்பல சென்று, ஓய்வாக இருந்த சுகம் மாறி, பள்ளிக்குச் செல்லுவது ஒரு பக்கம் ஏக்கம் தரும் என்பது உண்மை. காரணம், அது பிஞ்சுகளின் இயல்பு.

ஆனால், அந்த ஏக்கத்தைப் பெரிதாக்காமல், பெற்ற உற்சாகத்தை அடுத்த ஆண்டில் ஆர்வத்தோடு அடியெடுத்து வைக்கப் பயன்படுத்த வேண்டும்.

விருப்பம்போல் விளையாடுவது, விதவிதமாய் தின்பண்டம் சாப்பிடுவது, ஊர்ஊராய்ச் செல்வது, எல்லோருக்கும் இன்பம் தருவதுதான். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கூடுதல் இன்பம் அளிக்கக் கூடியதுதான்.

ஆனால், வாழ்க்கை என்பது அது மட்டுமல்ல. பல கடமைகளையும் உள்ளடக்கியது. ஒரேயடியாக விளையாடுவதும் சலிப்பைத் தரும், தொடர்ந்து ஊர் சுற்றினாலும் அலுப்பைத் தரும். இனிப்பும், சுவையும் தொடர்ந்து உண்டாலும் வெறுக்கும்.

எனவே, பொழுதுபோக்குதல், விளையாடுதல், சுவையாக உண்ணுதல், ஊர் சுற்றுதல் போன்றவற்றை இடையில் உற்சாகம் தரும் ஊக்கிகளாகக் கொள்ள வேண்டும். அதுவே எப்பொழுதும் செய்யக்கூடியவை அல்ல.

உழைத்துக் களைத்தவர் சற்று ஓய்வெடுத்து மீண்டும் வேலைசெய்யத் தொடங்குவது போல, கோடை விடுமுறை, விளையாட்டு, பொழுதுபோக்கு, சுற்றுலா போன்றவை உங்களின் சோர்வைப் போக்கும் செயல்பாடுகள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ஆனால், கல்வி கற்றல் என்பது உங்களுடைய பெருங்கடமை. நீங்கள் பெறுகின்ற இக்கல்வி, உங்களுக்கு எளிதில் கிடைக்கின்ற இக்கல்வி, உங்கள் தாத்தாக்களுக்குக் கிடைக்காதது. எவ்வளவு முயன்றாலும் கிடைக்காதது.

தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் போராடிப் பெற்றுத்தந்தது இக்கல்வி. அன்றைக்குக் கட்டணம் செலுத்தி, உயர்ஜாதிக்காரர்கள் மட்டும் கற்ற கல்வி, இன்றைக்கு கட்டாயமாக எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி. சீருடை, செருப்பு, புத்தகம், நோட்டு எல்லாம் இலவசம்.

இவ்வளவு வசதி வாய்ப்புகள் தரப்பட்டு, உங்களுக்குக் கல்வி அளிக்கப்படுகின்றபோது அதைத் தவறாது பொறுப்போடு கற்று முன்னேற வேண்டும். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள்கூட, கல்வி கற்பதற்கு எத்தடையும் இல்லை.

இன்றைக்குப் பிள்ளைகள் கற்காமல் போனால், அது பெற்றோர் குற்றம், பிள்ளையின் குற்றமேயாகும். கல்விதான் இவ்வுலகில் வாழும் தகுதியை உங்களுக்குத் தருகிறது. உலக அறிவை, பல்வேறு செய்திகளை, பல்துறைக் கருத்துகளை உங்களுக்கு ஒரே இடத்தில் கொடுக்கிறது.

குறிப்பிட்ட நோக்கை அடைகின்றவரை கல்வி கற்பதில் சலிப்போ, வெறுப்போ, அலுப்போ கொள்ளக் கூடாது.

கல்வியில் ஆர்வத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கல்விதான் பிறப்பால் வந்த பேதம், இழிவு, அடிமை நிலை அனைத்தையும் அகற்றும்.

சமுதாயத்தில் உயர்வையும், வருவாயையும், பாராட்டையும், திறமையையும் அளிக்கும் ஒரே கருவி கல்விதான்.

ஆண்களே அன்றி பெண்களும் கற்க வேண்டும். அனைத்துப் பிள்ளைகளும் தவறாது கற்க வேண்டும். எல்லா ஜாதிப் பிள்ளைகளும் கற்க வேண்டும், இல்லாதவர் வீட்டுப் பிள்ளைகளும் கற்க வேண்டும் என்பதற்காக நம் தலைவர்கள் உழைத்தது கொஞ்சமன்று.

சேரிப்புறத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை யெல்லாம் நீதிபதிகளாக, அதிகாரிகளாக, வழக்குரைஞர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக மாற்றியது கல்வி.

நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், தினம் செய்தித்தாள் வீடுவீடாகப் போட்டு அந்த வருவாயைக் கொண்டு படித்தார். அதனால்தான் இன்று அவர் எல்லோராலும் மதிக்கப்படுகிறார்; பாராட்டப்படுகிறார்.

அவரை மனதில் கொண்டு பிள்ளைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டும். படிப்பில் விருப்பத்தை உண்டாக்கிக் கொண்டால் படிப்பு எளிதாக மாறும், சுகமாக மாறும்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சொன்னதுபோல் மலை வாழையல்லவோ கல்வி. அதைக் கசப்பாக எண்ணாமல் பெருமையாக எண்ணி, ஆண்டின் தொடக்கத்திலே ஆர்வத்துடன் படியுங்கள்! வாழ்த்துகள்!

Share