எளிய முறையில் எடைப்பார்க்கும் கருவி
Print

எளிய முறையில் எடைப்பார்க்கும் கருவி

உபயோகப்படுத்திவிட்டு வீணாகத் தூக்கி எறியப்படும் பொருள் என எதுவும் இல்லை, சிந்தித்துச் செயல்பட்டால் எதனையும் மறு உபயோகமுள்ள புதிய பொருளாக உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் அபுபக்கர் சித்திக் என்ற மாணவர். இவர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநர்.

பழைய ஆட்டோ டியூப், குளுக்கோஸ் டியூப் மற்றும் நீளத்தை அளக்கும் இன்ஞ் டேப் ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிய முறையில் எடை பார்க்கும் கருவியினை உருவாக்கியுள்ளார் அபுபக்கர்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழும் ஜப்பான், பிற ஆசிய நாடுகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க வைக்கும் வகையில் ஜப்பான் _ ஆசிய இளையோர் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தில் இந்தியா, சீனா, கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 15 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ஜப்பானில் உள்ள தொழிற்சாலைகள், அறிவியல் தொழில்நுட்ப மய்யங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

2015ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 50 பேர்களுள் அபுபக்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து 12ஆம் வகுப்புச் செல்ல இருக்கும் அபுபக்கர், எங்கள் ஊரில் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போது அறிவியல் பாடத்தில் அதிக ஈடுபாடு இருந்ததை உணர்ந்த அறிவியல் ஆசிரியை அறிவியல் கண்காட்சியில் கலந்துகொள்ளச் செய்தார்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின், சார்பில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இன்ஸ்பேர் விருதுக்கான போட்டியில் முதல்பரிசு பெற்றேன். 2010ஆம் ஆண்டு மாநில அளவில் முதல் பரிசு கிடைத்தது.

இடைப்பட்ட காலங்களில் எனது கண்டுபிடிப்பை மேம்படுத்திக் கொண்டே வந்ததால் 2011ஆம் ஆண்டு தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்தது. 2013ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருடன் விருந்தல் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

தற்போது, ஜப்பான் செல்லும் 50 பேர்களுள் நானும் ஒருவன். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், யுகவேந்தன் ஆகியோரும் ஜப்பான் செல்லத் தேர்வாகியுள்ளனர். இப்போது படிக்கும் மதுரை பிரிட்டோ பள்ளியின் தலைமையாசிரியர் என்னை உற்சாகப்படுத்தி ஊக்கத்துடன் செயல்படத் துணைபுரிகிறார் என கூறியுள்ளார்.

Share