Home 2015 ஜூலை பிஞ்சு சமையல்
திங்கள், 25 ஜனவரி 2021
பிஞ்சு சமையல்
Print E-mail

உங்கள் அப்பா, அம்மாக்களெல்லாம் சிறு பிள்ளையாக இருந்த காலத்திலிருந்து இந்தியாவில் பிரபலம் மேகி நூடுல்ஸ். இந்தியாவுக்குள் நூடுல்ஸ் என்ற உணவைப் பெருமளவில் அறிமுகப்-படுத்தியதும், கொண்டு போய்ச் சேர்த்ததும் இதே மேகி தான். இன்று எண்ணற்ற வகைகள் வந்திருந்தாலும், அத்தனையையும் தாண்டி விற்பனையில் அதற்கென தனி இடம் உண்டு.

இரண்டே நிமிடத்தில் செய்துவிடலாம் என்ற விளம்பரம் பிஞ்சுகளான உங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். குதூகலமாக குழந்தைகள் விரும்பு-வதாகத் தான் அந்த விளம்பரங்களும் இருக்கும். உடனடியாக, எளிதாகத் தயார் செய்ய முடியும் என்று பெற்றோரும் அதை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்துவந்தனர்.

இதெல்லாம் ஒரு மாதத்துக்கு முந்தைய கதை. கடந்த மாதம் திடீரென மத்திய அரசு மேகி நூடுல்ஸ் மற்றும் சில உணவுப் பொருள்களில் அளவுக்கதிகமான காரியம் இருப்பதால் அது உடல்நலனுக்கு எதிரானது என்று தடை செய்திருக்கிறது. இத்தகைய விரைவு உணவு வகைகளில், சுவைக்காகவும், நீண்டநாள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சேர்க்கப்படும் வேதிப் பொருள்கள் நம்மை பெரும் நோயாளியாக்கு-கின்றன.

ஆனால், இவை தெரிந்தும் தெரியாதவர்கள் போல நாமும் சுவைக்கு அடிமையாகி நச்சுப் பொருள்களை உணவோடு சேர்த்து உண்டு வருகிறோம். மிகவும் புகழ்பெற்ற நெஸ்லே நிறுவனத்தின் வெளியீடே நச்சுத்தன்மை உடையது என்ற செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.

மேகி மட்டுமல்ல, கே.எப்.சி. வகை சிக்கன் உணவுகள், குர்க்குரே, லேஸ் போன்ற பல உணவுப் பொருட்களை தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து ஆசைப்பட்டு வாங்கி உண்ணுகிறோம். நம்முடைய பெற்றோர் வாங்கித் தர மறுத்தாலும், அடம்பிடித்தாவது வாங்குகிறோம். அல்லது தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அப்பா-அம்மாவின் நண்பர்கள் என்று யாரிடமாவது வெட்கத்தை விட்டு கேட்டு வாங்கிச் சுவைக்கிறோம்.

இவை எத்தகைய தீங்குகளை விளைவிக்கின்றன என்று இப்போதாவது நாம் புரிந்துகொள்ள வேண்டாமா? அதிகம் விளம்பரம் செய்யப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து, அதீத சுவையுடன் ஒரு பொருள் விற்கப்பட்டாலே அது நம் உடலுக்குக் கேடானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அலங்காரக் கடைகளில், வண்ண வண்ண பாக்கெட்டுகளில் பெரிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட விற்கப்படுகிறது என்பதாலேயே அவை நல்ல உணவுகள் என்று நாம் நம்பி விடுகிறோம். ஈ மொய்க்கும் பண்டங்களை உண்ணுவதை விட, மிகக் கேடானவை இவை. வெளீநாட்டு, உள்நாட்டுப் பெரும் நிறுவனங்களுக்கு லாபம் தான் முக்கியம். நம் உடல் நலன் அல்ல. ஆனால், நமக்கு நம் உடலே முதல்.

வீட்டில் சுவையான உணவுகளை அப்பா, அம்மாவை சமைக்கச் சொல்லி நாம் உண்ணலாம். அவசியத் தேவை ஏற்படும்போது, கடைகளில் உண்ணலாம். வேண்டுவதை எளிய முறையில் நாமே  செய்து கொள்ளவும் பழக வேண்டும். நச்சுப் பொருட்களை வாங்கி உண்ணும் வழக்கத்தை அடியோடு தொலைக்க வேண்டும். ஜங்க் புட்ஸ் எனப்படும் குப்பை உணவுகளைக் கொடுத்தாலும் தொடோம் என்று உறுதியேற்க வேண்டும்.

சரி, நாமே எளிமையாக தயார் செய்து கொள்வதற்கான உணவு வகைகளையும், செய்முறைகளையும் நாம் பார்க்கவிருக்கிறோம் இந்த இதழிலிருந்து... சரி, சமையல் கூடத்திற்குள் பெரியார் பிஞ்சையும் எடுத்துக்கொண்டு போங்கள்; திருப்புங்கள் 34-ஆம் பக்கத்தை!

மேகி தடை செய்யப்பட்ட பிறகு கூட, இன்னும் பல இடங்களில் மக்கள் வாங்கி உண்ண முயல்கிறார்களாம். இவ்வளவு நாள் சாப்பிட்டோமே ஒன்றும் செய்யவில்லையே என்று சொல்-கிறார்களாம். இந்த உணவுகள் உடனடி விளைவுகளை வயிற்றுப் பகுதியில் காட்டாது. ஆனால், நாம் மருத்துவமனைக்கு நிரந்தரமாகச் செல்ல இவைதான் வழிகோலும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

- சாக்

Share