அச்சுறுத்தலும் அச்சமும் அளவிற்கதிகம் ஆகாது!
Print

அச்சுறுத்தலும் அச்சமும் அளவிற்கதிகம் ஆகாது!

-சிகரம்

குழந்தைகளை வளர்ப்பதுடன், அவர்களுக்கு வழிகாட்டுவதும், திருத்துவதும், திறன்பெறச் செய்வதும், நன்னடத்தை பெறச் செய்வதும் பெற்றோர், சமுதாயம், பள்ளி என்ற முத்தரப்புப் பொறுப்பாகும்.

இம்முத்தரப்பும் தங்கள் நோக்கத்திற்கு குழந்தைகள் வளரவேண்டும், வாழவேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் பெற்றோருக்-குள்ளது பொறுப்பு, ஆசிரியர்களுக்குள்ளது கடமை, சமுதாயத்திற்குள்ளது பணி(தொண்டு).

முத்தரப்பும் குழந்தைகளைத் தத்தம் வழிக்கு இழுக்கும்போது, பிள்ளைகள் (பிஞ்சுகள்) பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பிள்ளைகளை வளர்ப்பதில் இந்த முத்தரப்பிற்கும் ஒரு புரிந்துணர்வு வேண்டும். இந்த முத்தரப்பும் சேர்ந்து, தேர்ந்து இலக்குகளை, நெறிகளை, கருத்துக்களை உருவாக்கி தத்தம் பங்களிப்பைத் தரவேண்டும்.

இதற்குப் பெற்றோர் + ஆசிரியர் கூட்டடங்-களைப் பள்ளியில் கூட்டும்போதே சமூக ஆர்வலர்களையும் அழைத்து அவர்கள் கருத்துகளையும் கேட்பதோடு, சமூகத்திற்குள்ள பொறுப்புணர்ச்சிகளையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

காரணம், ஒருபிள்ளையின் வளர்ச்சியில், வடிவமைப்பில் சமூகத்தின் பங்களிப்பும் மகத்தானது. மதிப்பெண்ணை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாது, மனிதம் வளர்ப்பதினும், மாண்பு வளர்ப்பதினும் பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் அக்கறை செழுத்த வேண்டும். சமூக ஆர்வலர்கள் அதற்குத் துணை நிற்கவேண்டும்.

இப்படி முத்தரப்பும் பிள்ளைகளை வளர்த்து உருவாக்கும்போது, அச்சுறுத்தல், தண்டித்தல் என்ற வழிகளை  எளிதாகப் பின்பற்றுகின்றனர். ஆனால், அச்சுறுத்தலும் தண்டனையும் அளவோடு வேண்டும். அறவே கூடாது என்பதும் சரியல்ல; அளவிற்கு அதிகம் செல்லுதலும் சரியல்ல.

நோய்க்கு மருந்து அளிப்பது போல, அளவறிந்து  ஆளுக்கு ஏற்ப கண்டிப்பும், தண்டிப்பும் இருக்க வேண்டும்.

பிள்ளைகளை அச்சுறுத்தியே வளர்க்க முயல்வது அறிவார்ந்த செயல் அல்ல. அதேபோல் பிள்ளைகள் எந்த வொன்றிலும் அதிகம் அச்சங் கொள்வதும் சரியில்லை.

வள்ளுவர் கூறியது அஞ்சுவதற்கு அளவோடு அஞ்சவேண்டும். அஞ்சாது செய்ய-வேண்டியவற்றை அஞ்சாது செய்யவேண்டும்.

அச்சமில்லா உள்ளத்தில் தான், ஆற்றலும் வளரும், அறிவும் வளரும். அச்சுறுத்தி வளர்க்கும்போது அவர்களுடைய சுயமுனைப்புகள், சுயசிந்தனைகள், சுயவிருப்பங்கள் எல்லாம் முடங்கிப் போகின்றன; அல்லது பொசுங்கிப் போகின்றன.

தோழமை:

எனவே, பிள்ளைகளுடன் பெற்றோரும் ஆசிரியர்களும், சமூக உறுப்பினர்களும் தோழமை உணர்வோடு பழகவேண்டும். பிஞ்சுகள் தம் மனதில் உள்ளதைச் சொல்லவோ கேட்கவோ அஞ்சக்கூடாது. தன் நண்பனிடம் வெளியிடுவது போல வெளியிட வாய்ப்பளிக்க வேண்டும்.

அதற்காக பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்களின் நிலையை விட்டுவிட வேண்டும் என்பது பொருள் அல்ல.

பெற்றோரும், ஆசிரியர்களும் பிள்ளை-களுடன் பழகுகின்ற முறையிலே பிஞ்சுகள் உரிமையோடு, நெருக்கத்தோடு கருத்துக் கூறுவர், அய்யம் எழுப்புவர், கேள்வி கேட்பர்.

கண்டவுடனே பிள்ளைகள் அச்சங் கொள்ளும் நிலையிருந்தால், அங்கு அடக்கம், ஒடுக்கம் நிலவுமே தவிர, விருப்பப்படியான உறவு நிலையோ தடையில்லா கருத்துப்-பரிமாற்றமோ நிகழாது.

“அடியாத மாடு படியாது”  “அடி உதவுவது-போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்”
“முருங்கையை ஒடித்து வளர்க்கணும், பிள்ளையை அடித்து வளர்க்கணும்”  என்பன போன்ற வழக்குகள் பண்பட்ட சமூகவளர்ச்சிக்கு உகந்தவையல்ல.

அடித்துத் துன்புறுத்தும்போது வரும் அடக்கம், பணிவு, செயல் எல்லாம் தற்காலிகமானது. அந்த பிள்ளையிடம் ஏற்படும் மாற்றங்கள் அடிமீது உள்ள அச்சத்தால் வருபவை.

ஆழ்மனதில் மாற்றம் வராமல், அடிக்குப் பயந்து உருவாகும் அடக்கம், பணிவு, செயல் எல்லாம் அக்குழந்தையிடம் எதிர்விளைவு-களையே உருவாக்கும்.

அடக்கி ஒடுக்கி வளர்க்கப்படும் குழந்தைகள் கட்டுப்பாடு அகலும் காலத்தில், கட்டுப்பாடற்ற காலிகளாக மாறிவிடும். எனவே, அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கி வளர்ப்பது சரியல்ல. அளவோடு கண்டித்து, தண்டித்து, அறிவுறுத்தி, திருத்தி மனதளவில் மாற்றத்தைக் கொண்டுவருதலே சரியான அணுகுமுறை.

பிள்ளைகளும் பெரியவர்களின் சொற்களை ஏற்று, பொறுப்புணர்ந்து அச்சம் தவிர்த்து, துணிவோடு, பணிவோடு நன்னெறியில் நடத்தல் வேண்டும், அது அவர்களை உயர்த்தும், வளப்படுத்தும்.

Share