Home 2015 ஆகஸ்ட் கனவு நாயகர் “ எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே!”
புதன், 21 அக்டோபர் 2020
கனவு நாயகர் “ எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே!”
Print E-mail

அறிவியல் அறிஞர் ஒருவர் குடியரசுத் தலைவரானது இந்தியாவில் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்தாம்.

தமிழ் வழியில் படித்து அறிவியல் உலகில் சாதனை படைத்தவர் குடியரசுத் தலைவரும் ஆனவர்! ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ்ப் புலவரின் பாடல் வரியை எடுத்துக்காட்டி “பரந்து பட்ட உள்ளப் பாங்குடைய எங்கள் தமிழினத்தின் பண்பாட்டைப் பாரீர்’’ என்று அய்ரோப்பிய  நாடாளுமன்றத்தில் அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்தவர்.

குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற நிலையில் திருக்குறளை எடுத்துக்காட்டி  உரை நிகழ்த்தியவர்.  குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்து வேட்பாளர் அப்துல்கலாமிடம் அன்றைய மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் தொடர்பு கொண்டு பேசினார்.

"கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தாங்கள் எந்தத் தேதியில் மனுத் தாக்கல் செய்ய இருக்கிறீர்கள்?

பதில்: நீங்களும், மக்களும் எப்பொழுது நினைக்கிறீர்களோ அதுவே சரியான தேதியாகும்.

கேள்வி: நல்ல நேரத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறதா?

பதில்: பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இரவு - பகல் வருகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதால் ஓர் ஆண்டு மலர்கிறது. இவ்விரண்டு நிகழ்வுகளும் வானவியல் தொடர்பானது. ஜோதிடவியல் அல்ல. இதில் எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே." என்று கூறிய  கூரிய அறிவியலாளர் அப்துல் கலாம் அவர்கள்.

சோதிட மூடநம்பிக்கையைப் பற்றி தோலுரித்தவர்; அக்னிச் சிறகுகள் என்ற புகழ் பெற்ற தம் வாழ்க்கை வரலாற்று நூலில் பின்வரும் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

"நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை;  ஜோதிடம் அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன்.

இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்ற-வில்லை" என்று எழுதியுள்ளாரே! அறிவியல் படித்தவர் மட்டுமல்ல;

அறிவியல் மனப்பான்மையையும் கொண்ட ஒரு மகத்தான மனித குல மாமணி டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள். தான் நேசித்த நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் வகிக்கப் போகும் பங்கு பற்று கனவு கண்டவர். அடுத்த தலைமுறையை நல்ல சிந்தனையில் வளர்த்தெடுக்கவும், அறிவியல் சிந்தனையுடையவர்களாக வார்த்தெடுக்கவும் நாடு முழுக்கப் பயணித்தவர். குழந்தைகளைக் கேள்வியெழுப்பச் சொல்லி பழக்கியவர்.

கேள்விகேட்டு சிந்திக்க வைத்தவர். எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயர்பதவியை வகிக்கும் அளவு உயர்ந்தவர். ஆனால், அந்தப் பதவிகள் தரும் கனத்தைத் தன் தலையில் சுமக்காதவர். தனி மனித வாழ்வின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகவும், அதை நாட்டுடன் சேர்த்து உருவாக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டுபவராகவும் திகழ்ந்தார் அப்துல்கலாம் அவர்கள்.

எண்ணற்றோருக்கு ஊக்க ஆற்றலாக, வழிகாட்டுபவராக, கனவு நாயகராகத் திகழ்ந்தவர். இதுவரை எந்த ஒரு குடியரசுத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்புகள் அவருக்குக் கிடைக்கின்றன. மக்களின் குடியரசுத் தலைவராக அவர் நிலைத்து நிற்பார். நம் தமிழ் மண்ணின் கடல் எல்லையில் தோன்றிய ஓர் அறிவாளர் அங்கேயே நிலை கொள்ளப் போகிறார். -
_ மயிலாடன், உடுமலை


ஆசிரியர் அப்துல்கலாம்!

“நீங்கள் முதலில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்’’ குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகர், இந்தியா 2020 புத்தகம் அல்லது டார்கெட் 3 பில்லியன். இவற்றில் எதற்காக நீங்கள் நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்? என்றேன் அப்துல்கலாமிடம்.

பல்வேறு பதில்களை நானே அளித்-திருந்ததால் அவர் எளிதில் சொல்லிவிடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதமாக, ஆசிரியராக இருந்ததற்காகவே நினைவு-கூரப்பட விரும்புவேன்! என்றார். அப்துல்கலாமின் அலோசகர் ஜீவன் பால்சிங்.


கேள்வி கேட்க வைத்த கலாம்!

1. வறுமையின் காரணமாக, தான் படிக்கும் போதே நாளிதழ்களை விற்பனை செய்து வருவாய் ஈட்டியவர்.

2. தான் தவறு செய்ததால் தன்னை தனது கணித ஆசிரியர் பிரம்பால் அடித்து விட்டதாகவும், அதன் காரணமாக தான் படித்து கணிதத்தில் 100/100 வாங்கியவர். இதை பின்னாளில் தன் வரலாறு புத்தகத்தில் எழுதி தனது கணித ஆசிரியரை நெகிழ வைத்தவர்.

3. இன்றைய கல்வி முறை குழந்தைகளின் ஆற்றல் திறனுக்கு ஏற்றதல்ல என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர். தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்துக்கு எடுத்துக்காட்டானவர்.

4. நாளைய உலகை ஆளப் போவது குழந்தைகளே என்பதால், அவர்கள் மத்தியில் ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்க்க விரும்பியவர். கேள்வி கேட்க வைத்தவர்.

5. குழந்தைகளின் கள்ளமில்லாச் சிரிப்பு வயதாக வயதாக காணாமல் போவதை எண்ணிக் கவலையுற்று, அந்தச் சிரிப்பு தொடர, வாழ்க்கையில் சந்திக்கவிருக்கும் இன்ப துன்பங்களை எதிர்கொள்ளும் தன்மையை வளர்க்க விரும்பியவர்.


'கனவு காணுங்கள்

'கனவு காணுங்கள்' என்பது இந்தியாவில் இந்த நூற்றாண்டின் புகழ் பெற்ற சொற்றொடர். இதற்குச் சொந்தக்காரர் இன்றைக்கு இயற்கை அடைந்துவிட்ட என்றைக்கும் மக்களின் குடியரசுத் தலைவராக இருக்கும் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். 'தூங்கினால்தானே கனவு வரும். ஆகவே இளைஞர்கள் அனைவரையும் தூங்கச் சொல்கிறார்' என்று இதைப்பற்றி கேலியாகக்கூட விமர்சனங்கள் வந்ததுண்டு.

ஆனால், அவர் காணச் சொன்னது அந்தக் கனவு அல்ல. இந்தியாவில் இளைய சமுதாயத்தினர் பலரின் நிலை இலக்கில்லாத பயணம்தான். இதுதான் அவரை பாதிப்படையச் செய்திருக்கிறது. ஆகவே, அனைவரும் தவறாமல் தனக்கென்று ஓர் இலக்கை - இலட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு, அதற்காக விடாமுயற்சியுடன் பாடுபட-வேண்டும்.

இப்படிப்பட்ட இலக்கை அடைவதற்கு தேடல் தானாக வரும். தேடலின் போது அறிஞர்கள் பலரோடு தொடர்புகள் ஏற்படும். இதனால் அறிவு அகண்டமாகும். எட்டாத இலக்கும் எளிதில் வசப்படும். இப்படி ஒவ்வொருவரும் தத்தம் இலக்கில் வென்றால் _- அதாவது கனவு நிறைவேறினால் இந்தியா வளர்ச்சி பெற்றே தீரும் என்பது அவரின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இலக்கில்லாதவர்கள் அனைவரும் இலக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது, அவர் நமக்காக கண்ட கனவு. அந்தக் கனவு அவரைப் பொறுத்த அளவில் இலக்கை அடைந்திருக்கிறது. காரணம், இன்று எல்லோருக்கும் அவரவர் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளும் முனைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதை நிறைவேற்றுவதின் மூலம் நம் கனவும் நிறைவேறும், அதே சமயத்தில் அதுவே நாம் அவருக்கு காட்டும் வீரவணக்கமாகவும் இருக்கும்.

- வேலவன்,
10-ஆம் வகுப்பு, பூந்தமல்லி

Share