ஏமாற்றக் கற்றுத்தர 25,000 ரூபாய்! பிஞ்சுகளைக் குறிவைக்கும் நடுமூளை மோசடி
Print

"பாரு, இன்னும் 10 நிமிசம் தான் இருக்கு. உடனே போகணும்" என்று தன் மகன் சர்வேஷை விரட்டியபடி விரைந்து-கொண்டிருந்தார் சரஸ்வதி. "எங்க அவசரமா போய்ட்டிருக்கீங்க... இப்போ தானே பிள்ளைகள் பள்ளியில இருந்து வந்தாங்க" என்று வழியில் எதிர்கொண்ட எழிலரசி கேட்டார்.

"இவனைக் கொண்டுபோய் மிட் பிரைன் ஆக்டிவேசன் (Mid Brain Activation) ல சேர்க்கப் போறேங்க... அவங்க ஆபீசை மூடுறதுக்குள்ள போகணுமே... அதுதான் அடிச்சுப் புடிச்சுப் போறோம்" சரஸ்வதி பேசியதைக் கேட்டதுமே புரிந்தது எழிலரசிக்கு. இருந்தாலும், சரஸ்வதியைத் தெளியவைக்க வேண்டி-யிருக்கிறது என்பதற்காக புரியாதவர் போல கேட்டார். "அப்படியா, Mid Brain Activation னா என்ன?"

"என்னங்க, உங்களுக்குத் தெரியாதா? இப்போ நம்ம ஊரில ரொம்ப ஃபேமசா இருக்காமே! நிறைய புள்ளைங்க போய் சேர்ந்திருக்காங்களாம். அதுக்குன்னு தனி இன்ஸ்டிடியூட்டே வச்சு நடத்துறாங்களாம்" என்று வியப்பைக் காட்டத் தொடங்கினார் சரஸ்வதி.

"ஓ... சரி.. சரி.. அதில் என்ன செய்யுறாங்களாம்?" என்று மீண்டும் புரியாதவர் போல் கேட்டார் எழிலரசி.

"அதுவா, அது தான் தலைப்புலயே இருக்கு பாருங்க... -Mid Brain Activation-னா நடு மூளையை செயல்படுத்துதல் அப்படின்னு அர்த்தமாம்" என்று விளக்கினார் சரஸ்வதி.

"நமக்கு இதுவரை இடதுமூளை, வலது மூளை பற்றித் தானே தெரியும். ஆனால், இந்த நடுமூளையை செயல்படுத்தினா புள்ளைங்க அப்படியே அறிவு ஜீவியா ஆயிடுவாங்களாம். கிட்டத்தட்ட நெற்றிக்கண் திறந்தமாதிரின்னு வச்சுக்கோங்களேன் இதுவும் சரஸ்வதி சொன்னதுதான்!"

"நெற்றிக்கண்ணைத் திறந்தமாதிரியா? மண்டையை உடைச்சிடுவாங்களோ" என்று பயத்தைக் காட்டினான் இளஞ்சேரன், எழிலரசியின் மகன். அவன் விளையாட்டாய் சொன்னதைக் கேட்ட சர்வேஷுக்கு வேறு பீதி உண்டாகிவிட்டது.

"அட, அப்படியில்லப்பா... அறிவுக்கண்ணைத் திறந்தமாதிரியாம். அதாவது கண்ணைக் கட்டிக்கிட்டும் படிக்க முடியுமாம்!" என்றார் சரஸ்வதி. இதைச் சொல்லும்போது ஏதோ அதிசயமான செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொள்ளும் உணர்வு சரஸ்வதிக்கு!

"என்னம்மா, இப்போ தான் நெற்றிக் கண்ணைத் திறக்கிறாங்கன்னு சொன்னீங்க... இப்போ என்னடான்னா இருக்கிற கண்ணையும் கட்டிடுவாங்கன்னு சொல்றீங்க? கண்ணைத் திறப்பாங்களா, மூடுவாங்களா?" இளஞ்சேரனின் குரலில் கொஞ்சம் கிண்டல் தொனித்ததைக் கேட்டுவிட்ட சரஸ்வதிக்கு கோபம் வந்துவிட்டது.

"என்ன தம்பி! கிண்டலா?" என்றார் சரஸ்வதி. சூழலைப் புரிந்துகொண்ட எழிலரசி, "சரி நேரமாயிடுச்சு சர்வேஷ் அம்மா! நீங்க இனிமேல் போய் அங்கே சேர்க்க முடியாது. நாளைக்கு

போய்க்கலாம். முதல்ல வீட்டுக்குள்ள வாங்க" என்று உள்ளே அழைத்துப்போனார்.

அனைவருக்கும் தேநீர் வழங்கியபின் பேச்சைத் தொடர்ந்தார் எழிலரசி. "சர்வேஷ் அம்மா, அந்த மிட் பிரைன் இன்ஸ்டிடியூட்ல என்ன பண்றாங்கன்னு சொன்னீங்க?"

"கண்ணைக் கட்டிட்டும் படிக்க வைக்கிறாங்களாம். அதாவது நம்ம புள்ளைங்களுக்கு இருக்கிற நுண்ணுணர்வைத் தூண்டி விடுறாங்களாம். நம்ம புள்ளைங்க அறிவா வளர்றது நமக்குத் தானே பெருமை" என்றார் சரஸ்வதி.

"ஓ... அடடே!  ஆனா, கண்ணைக் கட்டிக்கிட்டு எதுக்கு படிக்கணும். கண்ணத் திறந்துகிட்டே படிக்க வேண்டியது தானே!"

"இல்லங்க... அந்த அளவுக்கு சக்தியைத் தூண்டுறாங்களாம்! கண்ணைக் கட்டிக்கிட்டே படிக்கிறாங்களாம்... என்ன கலர்னு கண்டுபிடிச்சு கரெக்டா சொல்றாங்களாம்.  கணக்கு போடுறாங்களாம். அது ஏதோ ஈ.எஸ்.பி.யாம்! அது தான் வேலை செய்யுதாம்" மீண்டும் சரஸ்வதி.

"நமக்கு நல்லா கண் தெரியும்போது, எதுக்கு கண்ணைக் கட்டிக்கிட்டு படிக்கணும்? அப்படின்னா, பார்வையில்லாதவங்களுக்கு இதே மாதிரி பயிற்சி கொடுத்து அவங்களுக்கு நடுமூளையைத் தூண்டலாமே அம்மா"  என்று இம்முறை கேள்வியைத் தன் அம்மா எழிலரசியை நோக்கி வைத்தான் இளஞ்சேரன்.

இந்தக் கேள்வி கொஞ்சம் சரஸ்வதியைச் சிந்திக்க வைத்தது. "ஏன் அப்படி முடியாதா?" என்று அப்பாவியாகக் கேட்டார் சரஸ்வதி.

"ஆமாங்க... இந்த மிட் பிரைன் ஆக்டிவேசன் அப்படிங்குறது சுத்தமான ஏமாத்து வேலை. கண்ணைக் கட்டிக்கிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுறேன்னு அந்தக் காலத்தில மேஜிக் செய்றவங்கள்லாம் செஞ்சு காட்டுவாங்க. அதையே பெரிய டிரைனிங்குன்னு வச்சு ஊரை ஏமாத்துது ஒரு கும்பல்"

"அப்படியா? எப்படி குழந்தைகளும் கண்ணைக் கட்டிக்கிட்டு படிக்கிறாங்க?" என்று கேட்டான் சர்வேஷ்.

"என்ன தான் நீங்க கண்ணைக் கட்டினாலும், மூக்கை ஒட்டி ஒரு இடைவெளி இருக்கும், நீங்க நல்லா கவனிச்சா, அந்த பயிற்சி எடுத்த குழந்தைகள் எல்லாம் தலைக்குப் பின்னாடியோ, தலைக்கு மேலேயோ வச்சு புத்தகங்களைப் பார்க்க மாட்டாங்க...

நெற்றிக் கண்ணைத் திறக்கிறதுன்னா, நெற்றிக்குப் பக்கத்தில வச்சுப் படிக்கலாம்ல... ஆனால், முகத்துக்குக் கீழே வச்சுத் தான் என்னன்னு படிப்பாங்க... அது வேற எதுவும் இல்லை. இந்த இடைவெளியில படிக்கிறது தான்."

"ஏங்க... இதுக்குத் தானா அவய்ங்க 25 ஆயிரம் கேட்டாய்ங்க. சின்னப் புள்ளைங்க கண்ணாமூச்சி ஆடும் போது இந்த மூக்கு இடைவெளியில பார்த்து நடக்கிற மாதிரி, படிக்கிறதுக்குத் தானா இவ்ளோ பில்ட் அப்" என்று நம்ப முடியாமல் கேட்டார் சரஸ்வதி.

"வேற என்ன நினைச்சீங்க... ஏதாவது ஒன்னு புது பேர்ல, நம்ம புள்ளைங்களை, மத்தவங்களை விட பேர் - புகழ் வாங்க வைக்கும்னா, அதுக்கு பெற்றோர்கள் ஆசைப்படுவாங்கள்ல... அந்த ஆசையைப் பயன்படுத்தி நம்மகிட்ட காசு பிடுங்குற வேலை தான் இது!" என்று விளக்கினார் எழிலரசி.

"ஆனா, ஏதோ பிட்யூட்டரி சுரப்பி, செரடோனின், மெலடோனின் அப்படி இப்படின்னு சயண்டிபிக்-கா பேசினாங்களே!" என்று கேட்ட சரஸ்வதிக்கு, தெளிவாக பதில் சொன்னார் எழிலரசி.

"நீங்க வேற, ஏதாவது ரெண்டு சயன்ஸ் வார்த்தையை வைச்சுக்கிட்டு தான் இன்னைக்கு ரொம்ப பேர், அந்த அறிவியலுக்கே முரணான விசயங்களையெல்லாம் செஞ்சுக்கிட்டிருக்காங்க..

சாமியார் கூட்டமா இருந்தாலும் சரி, இந்த மிட்பிரைன் ஆக்டிவேசன் குரூப்பா இருந்தாலும் சரி" என்ற எழிலரசியிடம் தன் அடுத்த கேள்வியைத் தொடுத்தார் சரஸ்வதி.

"என்ன இப்படி சொல்றீங்க... கண் - மூக்கு இடைவெளியில தான் படிக்கிறாங்கன்னா, நம்ம பிள்ளைங்களுக்குத் தெரியும்ல... அவங்களுமா பொய் சொல்வாங்க... எங்க அக்கா பொண்ணு இதே மாதிரி போய் படிக்கிறாளே... கேட்டா இது தான் மிட் பிரைன் பவர் அப்படிங்குறா!"

"அதுதாங்க கொடுமை. நம்ம பணத்தை புடுங்கிக்கிட்டது மட்டுமில்லாமல், இது ஏதோ சக்தியினால நடக்குதுன்னு சொல்லச் சொல்லி, நம்ம பிள்ளைகளையே நம்ம கிட்ட பொய் சொல்ல வச்சிடுறாங்க...

நீங்க முதல்ல, உங்க அக்கா பொண்ணை அந்த நிறுவனத்தில இருந்து கொண்டுவந்து சரி பண்ணுங்க... கட்டி ஏமாந்த பணத்தையும் திரும்ப வாங்க சொல்லுங்க"

"இதை எப்படி எல்லாருக்கும் சொல்றது. நிறைய பேரு என்னை மாதிரி ஏமாந்து சேர்த்துக்கிட்டிருக்காங்களே" என்று கவலைப் பட்டார் சரஸ்வதி. அப்போது விடுதலை நாளிதழை எடுத்துவந்து காட்டினான் இளஞ்சேரன்.

"இங்க பாருங்க... மிட் பிரைன் ஆக்டிவேசன் அப்படிங்குறது உண்மைன்னு நிரூபிச்சா 10 லட்சம் ரூபாய் பரிசுன்னு சவால் விட்டு, ஊர் ஊரா இந்த ஏமாற்றுத் தனத்தை வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறாங்க பகுத்தறிவாளர்கள், அறிவியல் அறிஞர்கள்.

பாண்டிச்சேரியில போன மாதம் நடந்திருக்கு. பேராசிரியர் நரேந்திர நாயக் அப்படிங்கிறவர் வந்து குழந்தைகளுக்கு இந்த விசயத்தை சொல்லி, எப்படி ஏமாத்துறாங்கன்னு சொல்லிக் காட்டியிருக்காரு. நம்ம ஊர்லயும் இதே மாதிரி சவால் அறிவிப்போம்.

யாராவது அப்படி இது உண்மைதான்னு நிரூபிக்கட்டுமே!" என்றான் இளஞ்சேரன். "ஆமா, அறிவியலுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சுத்தமான புரட்டு இது! மனிதனுக்குப் போதுமான அறிவு வேலை செஞ்சுக்கிட்டுதான் இருக்கு.

கேள்வி கேட்கிற அறிவு தான் எல்லா அறிவியல் வளர்ச்சிக்கும் அடிப்படை. கண்ணைக் கட்டிக்கிட்டு படிக்கிற மாதிரி ஏமாத்திறதில்லை" என்று முடித்தார் எழிலரசி

அப்பாடா தப்பித்துக் கொண்டோம் என்று நினைத்தான் சர்வேஷ். ஒரு பெரிய ஏமாற்று கும்பலிடமிருந்து தப்பிய உணர்வு சரஸ்வதிக்கு!

இது கதையல்ல... நம் ஊரிலும் இத்தகைய Mid Brain Activation என்ற பெயரில் ஏமாற்று கும்பல் குழந்தைகளைக் குறிவைத்து வருகிறது. நம் பணத்தை வீணடிப்பதோடு, பிஞ்சுகளின் உள்ளத்திலும், பொய் சொல்லும் உணர்வைத் தோற்றுவிக்கும் இத்தகைய தேவையற்ற விசயங்களிலிருந்து ஒதுங்கி நிற்போம்.

இதை நம்பி ஏமாறுபவர்களுக்கு விளக்கம் சொல்வோம். இத்தகைய மூடத்தனங்களை எதிர்த்து நிற்போம். இது குறித்த உங்கள்  சந்தேகங்களையும், கேள்விகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். உரிய விளக்கங்களைப் பெறுங்கள்!

Share