Home 2015 ஆகஸ்ட் சும்மா மொக்க போடாதீங்க
புதன், 28 அக்டோபர் 2020
சும்மா மொக்க போடாதீங்க
Print E-mail

அறிவியல் அறிஞர் ‘டில்லிபாபு’ அவர்கள், “இன்றைய சுற்றுச் சூழல் நமக்கு கற்றுத் தருவது என்ன?” என்ற தலைப்பில் பேசினார். ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கேட்டனர். அதில் 8 ஆம் வகுப்பு பயிலும் இரட்டையர் அமுதம், குமுதம் இருவரும் அடக்கம். அதன் தாக்கத்தில் இரவில் இருவரும் பேசிக் கொண்டனர்.

அமுதம் : பூமி மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக மாறி வருகிறது. ஆகையால் நாம் நிலாவில் வசிக்க சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?

குமுதம் : எல்லாமே ஆராய்ச்சி அளவிலேதான் இருக்கு.

அமுதம் : அதுசரிதான். ஒருவேளை மனிதன் நிலாவில் குடியேறிவிட்டால்...?

குமுதம் : அதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அமுதம் : ஓஹோ!... சரி, அங்கு ஒருநாள் முடிய எவ்வளவு நேரம் ஆகும்?

குமுதம் : நிலா தன்னைத் தானே சுற்றுவதற்கு கிட்டத்தட்ட நம் கணக்குப்படி ஒரு மாதம் ஆகும். அதில், தலா இரண்டு வாரம் பகல், இரண்டு வாரம் இரவு என்று மாறிமாறி வரும்.

அமுதம் : என்ன... இரண்டு வாரம் இரவு, இரண்டு வாரம் பகலா?!

குமுதம் : இதுக்கேவா... இப்போ நிலா பூமியைச் சுற்றிவர 27 நாட்கள் ஆகின்றன. ஆனால், பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிலா 20 நாட்களிலேயே சுற்றி வந்திடுச்சாம். ஏனா, ஓர் ஆண்டுக்கு 4 செ.மீ தூரம் நிலா பூமியை விட்டு விலகிச் செல்கிறதாம்.

அமுதம் : அச்சச்சோ! அப்புறம் இன்னொரு கேள்வி... ஆங்.... அங்க சூரியன் எப்படித் தெரியும்?

குமுதம் : பூமி தன்னைத் தானே சுற்றுவது மாதிரி நிலாவும் சுற்றிக் கொள்வதால் சூரியன் தெரியும்தான். ஆனால், ரசிக்க முடியாது.

அமுதம் : ஏன்? ஏன்?

குமுதம் : அவசரப்படாதே, பூமியில் இருக்கிற காற்று மண்டலத்தால் காலையில் சூரியனின் ஒளி சூழத்தொடங்கி மெ...துவாகத்...தான் தெரியும். மாலையிலும் அப்படித்தான். ஆனால், நிலாவில் காற்று மண்டலம் இல்லாததால் திடுக்கென்று தெரியும். திடுக்கென்று தெரியாமல் போயிடும்.

அமுதம் : ஓ... இவ்வளவு விசயம் இருக்கா? ஆமா, அங்க வானம் என்ன நிறத்தில் தெரியும்?

குமுதம் : நிச்சயமா நீலம் கிடையாது.

அமுதம் : பின்னே!!

குமுதம் : பூமியில் இருக்கிற மாதிரி நிலாவில் 71 சதவிதம் தண்ணீர் இல்லையே?

அமுதம் : அதனால?!...

குமுதம் : அதனால வானம் எப்போதும் கருப்புதான். அதாவது இருட்டுதான்.

அமுதாவுக்கு கேள்விகள் இன்னமும் ஊற்றெடுத்தன. ஆனால், கேட்க முடியாதபடி யாரோ அவளைப் பிடித்து அசைத்துக் கொண்டிருந்தனர். தன்னை அசைக்கின்ற குரலும்கூட அவளுக்கு அடிக்கடி கேட்டது போல இருந்தது. இந்த சந்தடியில் குமுதமும் எழுந்துவிட்டாள்.

தொல்லை தாங்காமல் அமுதா மிகுந்த சிரமப்பட்டு கண்களை விரித்துப் பார்க்க, எதிரில் அவளுடைய அம்மா மலர்வனம் நின்று கொண்டிருந்தார். இதென்ன? ஏன்? என்ற தடுமாற்றம். ஏதோ கொஞ்சம் மெல்ல மெல்ல புரிந்தது.

கனவில் பேசுவதாக எண்ணி வெளிப்படையாக பேசிவிட்டதாக உணர்ந்த அமுதா, “ம்ச்சு... என்னம்மா...? என்று சலித்தபடியே கேட்டாள்.

“முதல்ல எந்திருச்சி படிக்கிற வேலையைப் பாருங்க. அப்புறமா நிலாவுல குடியேறலாம்.” என்று கூறிவிட்டு சமையலறையில் நுழைந்து விடுகிறார். ஜன்னல் வழியாக இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், ‘ஹெக்’, ஹெக்’ என்று கிச்சுகிச்சு மூட்டுவது போலச் சிரித்தார்.

வெறுப்படைந்திருந்த இரட்டையர் இருவரும் ஒருசேர, “ஏய்... யார் நீ, இதுவரைக்கும் உன்னை பார்த்ததே இல்லையே?” என்று அதட்டினர்.

அதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத அவர், “நானா... நானா... பெரியார் பிஞ்சு, பெரியார் பிஞ்சு” என்று சொல்லிவிட்டு, அதே ‘ஹெக்’, ‘ஹெக்’சிரிப்புடன் துள்ளிக்குதித்தபடியே ஓடி மறைந்துவிட்டார்.

Share