Home 2015 செப்டம்பர் கதை கேளு...கதை கேளு...
வெள்ளி, 09 ஜூன் 2023
கதை கேளு...கதை கேளு...
Print E-mail

கதை கேளு... கதை கேளு...

பலி ஆடுகள்

-கதையும் படமும்

மு.கலைவாணன்

பூமி சுற்றிய சுற்றில் சூரியன் தன் கடமையைச் செய்யக் கிழக்கிலிருந்து புறப்பட்டது போல வெளிப்பட்டு சிறிது நேரம்தான் ஆகியிருந்தது.

செடி கொடிகளும், புல்வெளியும் அதிகமுள்ள பள்ளமான ஓர் இடத்தில் ஆடுகளை மேய விட்டுவிட்டு, நிழலுக்காகப் புங்கை மரத்தடியில் ஒதுங்கி உட்கார்ந்திருந்தான் முனியாண்டி.

ஆடுகளும், ‘வயிறு நிறைய உண்ண வேண்டும்’ என்ற எண்ணத்துடன், மும்முரமாக மேய்ந்து கொண்டிருந்தன.

தொலைவில், தாரை தப்பட்டை ஒலிப்பது கேட்டது.

மெள்ள மெள்ள அந்த ஒலி பள்ளமாக பகுதிக்கு அருகில் அதிகம் கேட்கத் தொடங்கியது.
ஓசை மிகுதியாக ஆக, ஒவ்வோர் ஆடும் தலையை உயர்த்தி உயர்த்திப் பார்த்தன.

சுற்றிலும் மேடாக இருந்ததால், பள்ளத்தில் இருக்கும் ஆடுகளுக்கு, ‘மேட்டுக்கு அந்தப் பக்கம் என்ன நடக்கிறது? எதற்காகத் தப்பட்டை ஒலிக்கிறது?’ என்று புரியவில்லை.

தன் தாயோடு சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்த ஒரு குட்டி ஆட்டுக்கு மட்டும் ஆவல் அதிகமானது.

மேட்டை நோக்கி ஓட்டம் பிடித்தது; துள்ளிக் குதித்தது. தாய் ஆடும் தன் குட்டியைத் தொடர்ந்து ஓடியது.

மேட்டுக்குக் கீழ்ப்பகுதியில் அமைந்த மண் சாலையில், கிராம மக்கள் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். பெண்களின் கைகளில் பூ, பழத் தட்டுகள் இருந்தன. ஆண்களில் சிலர் ‘தப்பு’ச் சத்தத்திற்கு ஏற்படி ஆட்டம் போட்டபடி ஊர் எல்லையில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர்.

ஊர்வலத்தின் நடுவே, கழுத்தில் பூமாலை சூட்டிய கறுப்பு ஆடு தெரிந்தது. கயிற்றால் கட்டப்பட்ட அந்த ஆட்டை, ஆரவாரமாக இழுத்துச் சென்றனர்.

அதன் அருகில் -_ கோவில் பூசாரி, தடித்த பெரிய மீசை, தோளில் பெரிய வெட்டரிவாள், நெற்றியில் பெரிய பட்டை, அதன் மத்தியில் பெரிய குங்குமப் பொட்டு ஆகியவற்றுடன் நீண்டு வளர்ந்த தன் தலைமுடியை விரித்துப் போட்டபடி ஆவேசமான பம்பை உடுக்கை ஒலிக்கு ஏற்றபடி அவர் ‘சாமி ஆடியவடி’ வந்து கொண்டிருந்தார்.

உடன் வந்தவர்கள் எல்லாம், கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு, “அம்மா! ஆத்தா! தாயி!’’ எனக் கூச்சலிட்டவாறு வந்தனர்.

‘எதற்காக இத்தனை ஆட்ட பாட்டத்துடன் நம் கறுப்பனை மாலை மரியாதையோடு அழைத்துப் போகிறார்கள்?’ எனப் புரியாத குட்டி ஆடு, தன் பக்கத்தில் நிற்கும் தாயைத் திரும்பிப் பார்த்தது.

தாய் ஆடோ, நேற்றுவரை தன்னோடு இருந்த கறுப்பன், இன்று _ மாலை மரியாதையுடன் இழுத்துச் செல்லப்படுவதை எண்ணிக் கண் கலங்கியது.

இதை அறியாத குட்டி ஆடு தன் தாயிடம், “நம்ம கறுப்பனை மாலை எல்லாம் போட்டு எங்கம்மா கூட்டிக்கிட்டுப் போறாங்க?’’ என்று மறுபடியும் கேட்டது.

கறுப்பன் போகுமிடம் தனக்குத் தெரிந்திருந்தாலும், தன் குட்டிக்குத் தெரியக்கூடாது என்று எண்ணி, “நம்ம கறுப்பனை சாமி பார்க்கக் கூட்டிக்கிட்டுப் போறாங்க’’ என்று பொய் சொன்னது தாய் ஆடு.

அதை உண்மை என நம்பி, "அய் எனக்கும் சாமின்னா ரொம்பப் பிடிக்கும், என்னையும் சாமி பார்க்க அனுப்பி வையிம்மா, மாலை மரியாதை எல்லாம் கிடைக்கும்!" என்று கேட்டது குட்டி ஆடு.

தாய் ஆட்டுக்கு 'பகீர்' எனத் தூக்கிப் போட்டது.

தான் சொன்ன பொய்யை நம்பி, குட்டி ஆடு இப்படிச் சொல்லிவிட்டதே என்கிற வருத்தத்துடன், "வேண்டாம்! சாமி பாக்க நீயெல்லாம் போகக் கூடாது!" எனப் பதறியது.

"கறுப்பன் எனக்கு முன்னே பிறந்தவன் - அவன் போகும்போது, நான் ஏன் போகக் கூடாது? நான் கட்டாயம் சாமி பாக்கப் போவேன்!" என உறுதியாகச் சொன்னது தாய் ஆடு.

"கறுப்பன் சாமியத்தானே பாக்கப் போறேன். ரெண்டு பேரும் சாமியைப் பாத்திட்டு, திரும்பி வரப் போறோம். அதுக்கு ஏம்மா நீ கண் கலங்குறே?" எனப் புரியாமல் கேட்டது குட்டி ஆடு.

"சாமியப் பாத்திட்டு நம்ம கறுப்பன் திரும்பி வரவே மாட்டான்!" என துக்கம் தாளாமல் சொன்னது தாய் ஆடு.

"திரும்பி வரமாட்டானா? ஏன்? சாமி திருப்பி அனுப்பாதா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது குட்டி.

"நம்ம கறுப்பனை இந்த ஊரு மாரியம்மனுக்குப் பலியிடப் போறாங்க!" எனக் கதறி அழுதபடி சொன்னது தாய்.

"பலியிடப் போறாங்களா! அப்படின்னா?..." என விழித்தது குட்டி.

இனி உண்மையை மறைத்துப் பயனில்லை என உணர்ந்த தாய்  ஆடு, "அதாவது நம்ம கறுப்பனை இந்த ஊரு மாரியம்மன் கோயிலிலே சாமிக்கு முன்னாடி நிக்க வெச்சு, மஞ்சத் தண்ணியைத் தெளிச்சு, துடிக்கத் துடிக்கத் தலையைத் துண்டாக்கப் போறாங்க!" என்று பரிதாபமாகச் சொன்னது தாய் ஆடு.

"அய்யய்யோ! அப்படியா! நம்ம கறுப்பனை கொல்லப் போறாங்களா? அம்மா... தாயி... ஆத்தான்னு குரல் கொடுத்துக்கிட்டுப் போறாங்களே, இவங்க யாருக்குமே இரக்கம் இல்லையா? கடவுள் எல்லா உயிர்கள் மேலேயும் அன்பு செலுத்தும்னு சொல்லுவாங்களே! சாமி  ரத்தப் பலி கேக்குமா?" என்று குமைந்தது குட்டி ஆடு.

"சாமி ஏன் கேக்குது? மனுசன்தான் இப்படிச் சொல்றான்! செய்யிறான்! வெட்டி பலியிட்டுட்டு, பிறகு வேக வெச்சுத் திங்கிறான்!" என்றது தாய்.

"சரி! ஆத்தா கேக்குது,.

பக்தன் கொடுக்குறான்! ஆனா... நம்ம இனத்திலே இதை யாரும் எதிர்க்க முடியாதா? முரட்டுக் கடாவா, முறுக்கிய கொம்போட திரியும் யாருமே இதுவரை இந்தக் கொடுமையை எதிர்க்கலியா?" என்று கோபத்துடன் கேட்டது குட்டி ஆடு.

"நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா, கொம்பிருந்தும் முட்டத் தெரியாத குரும்பை ஆடுகளாகவும், ஓட்டுன பக்கமெல்லாம் ஓடிச் சாய்கிற செம்மறி ஆடுகளாகவும், விவரம் தெரியாம பலியாகுற வெள்ளாடுகளாகவும் தான் நாம இத்தனை காலமா இருந்துகிட்டிருக்கோம்!" என்று சோகத்துடன் சொன்னது தாய் ஆடு.

"நாமே ஒரு புலியாகவோ, சிங்கமாகவோ இருந்தா நம்பளை இப்படி மாலை போட்டு இழுத்துக்கிட்டுப் போயி பலியிடுவானுங்களா, இந்த மனுசனுங்க? நம்மைப் பார்த்ததும் பயந்து ஓடியிருப்பாங்களே! இப்படியே காலம் போகாது! நம்ம  கூட்டத்திலேயும் இதை எதிர்த்து நிக்கிற ஆடு நிச்சயம் ஒரு நாள் வரும்! அப்பத்தான், நம்மைப் பலியிடுகிற கொட்டம் அடங்கும்!"

மேட்டின் உச்சியிலிருந்து எச்சிரிக்கை செய்வது போல் சொன்னது குட்டி ஆடு.

இதையெல்லாம் அறியாமல் அம்மன் கோயிலை நோக்கிச் செல்லும் முட்டாள் பக்தர்கள், "அம்மா! தாயே! ஆத்தா!" எனக் கூவியபடி ஆட்டம் போட்டுக் கொண்டு ஆட்டை இழுத்துச் சென்றனர்.

Share