Home 2015 செப்டம்பர் சும்மா மொக்க போடாதீங்க
வெள்ளி, 09 ஜூன் 2023
சும்மா மொக்க போடாதீங்க
Print E-mail

நாங்கல்லாம் சுனாமிலேயே நீச்சலடிப்-போம்னு சவடால் பேசறவங்க நாட்டில் ஆயிரம் பேர் உண்டு. ஒருவேளை எதிர்காலத்தில் அறிவியல் ஒத்துழைச்சா அது சாத்தியம் ஆனாலும் ஆகலாம். காலம் எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் வாய்ப்புகளும் வளரலாம். என்ன வேணும்னாலும் செய்யலாம்னே வச்சிப்போம்.

ஆனால், ஒன்னே ஒன்ன மட்டும் யாராலும் செய்யவே முடியாது. செய்ய முடியாதா? ஏன்?

“எங்கே, கடந்து போன ஒரு மணித்துளியை யாராவது திருப்பிக் கொண்டுவர முடியுமா?”

“அ... அ... அது... அது எப்படிங்க?”

“ஆனா என்னால் முடியுமே.”

என்ன?!.. எப்படி?!

“கற்பனைதான்”

“அதத்தான் நாங்களும் செய்வமே”

“நீங்க செய்யறது வேற, நான் செய்யறது வேற”

“எப்படி?”

“பேரண்டம் தோன்றியதிலிருந்து இப்ப வரைக்கும் ஒரு ஓராண்டுக்குள்ள அடக்குகிற கற்பனை.”

“ஓராண்டுக்குள்ளேயா? அதுவும் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்தா? எங்க சொல்லுங்க பார்ப்போம்.”

“கவனமா கேளுங்க. அதாவது, ஜனவரி முதல் தேதி - புத்தாண்டு தினம். பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவாகிறது. மார்ச் மாதம் - பால் வீதி அண்டம் தோன்றுகிறது. ஆகஸ்டில் -  சூரியனும், பூமி உள்ளிட்ட ஒன்பது கோள்களும் உருவாகின்றன.

செப்டம்பர் - கடலில் முதல் உயிரினம் தோற்றம். நவம்பர் - கடலில் பல செல் உயிரிகள் தோற்றம் பெறுதல்; டிசம்பர் - 18 நிலத்தில் உயிர்கள் தோற்றம்; டிசம்பர் - 20 நாலுகால் உயிர்கள் தோன்றுதல் டிசம்பர் - 24 டைனோசர்கள் தோற்றம். டிசம்பர் - 27 பறவைகள் தோற்றம் பெறுதல். டிசம்பர் - 29 விண்கல் தாக்குதலில் டைனோசர்கள் அழிந்தன.

டிசம்பர் - 31 - காலை 10.15 - மனிதக்குரங்குகள் தோற்றம். இரவு - 09:24 - மனிதனின் மூதாதைகள் இரண்டு கால்களால் நடக்கத் தொடங்குதல். இரவு - 11:54  - நவீன மனிதனின் தோற்றம். இரவு 11:59:45 -  மனிதன் எழுதுவதற்கு கற்றுக் கொள்ளல். இரவு 11:59:50 - எகிப்தில் பிரமிடுகள் கட்டப்படுகின்றன.

நள்ளிரவுக்கு ஒரு நொடி முன்னதாக கொலம்பஸ் கடல் பயணம் தொடங்கினார்.” -  என்று சொல்லச் சொல்ல பெரியார் பிஞ்சுகள் வியப்பில் தன்னை மறந்து “ஆ...” - வென்று வாயை பிளந்தவாறு கற்பனையை கேட்டுக் கொண்டிருக்க, இவர் தொடருகிறார்.

“இந்த ஒரு ஆண்டில் கடைசி 6 நிமிடம் மட்டும்தான் நமக்கு (மனித இனத்துக்கு) சொந்தம்” - என்று முடிக்க, திடுக்கிட்ட மற்றவர்கள், இது ஒரு கற்பனை என்பதையும் மறந்து 6 நிமிடத்துக்குள் பிரபஞ்சமே முடிந்து விடுமே என்கிற எண்ணவோட்டத்தில், பதறிப்போய் ஆளாளுக்கு ஒரு பக்கம் ஓடுகின்றனர்.

“அடடே... ஓடாதீங்க. நில்லுங்க. நம்ம சூரியக் குடும்பக் கணக்குப்படி இது முடிய இன்னும் 500 கோடி ஆண்டுகள் இருக்கு.” - என்று சொல்லிப்பார்த்தார். கேட்க வேண்டுமே அவர்கள். தனக்குதானே, “இவர்களுக்கு சொந்த புத்தியும் கிடையாது, சொல் புத்தியும் கிடையாது.”

என்று முணுமுணுத்தவர் திடுக்கிட்டார்! முதல் வாக்கியம் மட்டும் தான் இவர் சொல்லியிருந்தார்!. ஆனால், முடிப்பதற்குள் அடுத்த வாக்கியமும் உச்சரிக்கப்பட்டு விட்டதே என்ற வியப்புடன் திரும்பிப்பார்த்தார். இரண்டாவது வாக்கியத்தை உச்சரித்த மனிதர் ஒருவர் எதிரில் நின்று கொண்டு இவர் தோளில் கைபோட்டபடி மய்யமாகச் சிரித்தார்.

Share