Home 2015 அக்டோபர் பிரதமருக்குப் புத்தி சொன்ன பிஞ்சு விசாலினி!
புதன், 28 அக்டோபர் 2020
பிரதமருக்குப் புத்தி சொன்ன பிஞ்சு விசாலினி!
Print E-mail

பிரதமருக்குப் புத்தி சொன்ன பிஞ்சு விசாலினி!

ஒவ்வோர் ஆண்டும் நம் ஆசிரியர்களைப் பெருமைப் படுத்தும் விதமாக ஆசிரியர் நாள் கொண்டாடுகிறோம் அல்லவா? முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்பவரின் நினைவாக அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5- ஆம் தேதி அன்று தான் அந்த விழா நாடு முழுக்கக் கொண்டாடப்படுகிறது.

திடீரென கடந்த ஆண்டு இந்திய மத்திய அரசு சார்பில் அதை குரு உத்சவ் என்று அறிவித்து விட்டார்கள். இது என்ன புதுசா? ஏற்கெனவே அவரவர் மொழியில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமே, ஏன் வேற மொழியில அதுக்கு பெயர் வைக்கணும்? என்று எல்லா இடங்களிலும் கேள்விகள். பிரதமர் இந்தியில் பேசுவதை நாடு முழுக்க பள்ளிகளில் போட்டுக் காட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டார்களா? அதுவே, பெரிய பேச்சாகிவிட்டது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டி-லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விசாலினி.

இளம்வயதிலேயே நிறைய சாதனைகள் செய்திருக்கக் கூடியவர் விசாலினி. படிக்கும் போது, இவரது அறிவுத்திறனைப் பாராட்டி, டபுள் புரோமசன் வழங்கப்பட்டிருக்கிறது. அய்.க்யூ (IQ-Intelligent Quotient) எனப்படும் நுண்ணறிவுத் திறன் சோதனையில் உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.

இவர் பெற்றிருந்த அய்.க்யூ அளவு 225 புள்ளிகள். அதே போல இளம்வயதிலேயே சிசிஎன்ஏ எனப்படும் தேர்வு எழுதி தேர்வானவர் என்ற சிறப்புக்குரிய-வராதலால், 9-ஆம் வகுப்பு படிக்கும் போதே ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில், பி.டெக்., முதலாம் ஆண்டில் பயில அனுமதிக்கப்-பட்டுள்ளார். இவரது சாதனைகளைப் பற்றி நம் பெரியார் பிஞ்சு இதழில் முன்பே பதிவு செய்து பாராட்டியிருக்கிறோம்.

இவர்தான் பிரதமருடன் உரையாடும் மாணவியருள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்-பட்டிருந்தார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி (Video Conferencing) மூலமாக உரையாடல் நடந்தது.

காலை 10 மணிக்கு மாணவர் களுடன் பிரதமர் மோடி உரையாட தொடங்கினார். 11.15 மணியளவில் விசாலினி பிரதமருடன் பேசினார். அவர், வணக்கம் என்று தமிழில் தெரிவித்ததும், பிரதமரும் தமிழில் வணக்கம் தெரிவித்தார். “தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டத் தில் இருந்து பேசுகிறேன்” என்று ஆங்கிலத்தில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட விசாலினி, “நான் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அதற்கு தங்களின் அறிவுரை என்ன?” என கேட்டார்.

பிரதமர் அறிவுரை?

அதற்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பதில் அளித்தார். “நாட்டுக்கு சேவை செய்ய படை வீரராக இருக்க வேண்டும், அல்லது தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது இல்லை. நீ இந்த சிறு வயதிலேயே இவ்வளவு சாதனைகள் படைத்திருப்பதுகூட ஒரு சேவைதான். வீட்டில் தேவையில்லாதபோது மின் சாதனங்களை நிறுத்திவைத்து மின்சாரத்தை சேமிப்பதும்,

செல்பேசி அழைப்பு வந்தால் மோட்டார் சைக்கிளின் இன்ஜினை அணைத்துவிட்டு பேசுவதன் மூலம் பெட்ரோலை மிச்சம் பிடிப்பதும் நாட்டுக்கு செய்யும் சேவைதான். உங்கள் வீட்டின் அருகில் படிப்பறிவில்லாத பெண்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுப்பதும் மிகப்பெரிய சேவைதான். இப்படி உன்னால் முடிந்த எல்லா சேவைகளையும் நாட்டுக்குச் செய்யலாம்” என்று பிரதமர் தெரிவித்தார். இறுதியில் நன்றி என்று ஆங்கிலத்தில் தெரிவித்து விடைபெற்றார்.

விசாலினி சொன்ன புத்திமதி

பிரதமருடனான உரையாடல் பற்றி பின்னர் பேட்டியளித்த விசாலினி, "நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டேன். பிரதமர் இந்தியில் பதிலளித்தார். அனைத்து மக்களுக்கும் புரியும் விதத்தில் அவர் ஆங்கிலத்திலேயே பதில் அளித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அனைவருக்கும் புரிந்திருக்கும்" என்று பதிலளித்தார்.

இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒன்று தான் இந்தி. இந்தி பேசத்தெரிந்த மாநிலங்களையும், மக்களயும் விட பிற மொழிகளைப் பேசக் கூடிய மக்களின் எண்ணிக்கை தான் இந்தியாவில் அதிகம்.

அதனால் தான் அனைவருக்கும் பொதுவான மொழியான ஆங்கிலம் தொடர்பு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைப் புரிந்து கொண்டு தான் விசாலினி ஆங்கிலத்தில் கேள்விகேட்டார். பிரதமருக்கும், அதிகாரத்தில் இருப்போர் சிலருக்கும் தான் இன்னும் புரியவில்லை.

-சமன்

Share