Home 2015 அக்டோபர் பிரபஞ்ச ரகசியம் 27
புதன், 28 அக்டோபர் 2020
பிரபஞ்ச ரகசியம் 27
Print E-mail

பண்டைய கிரேக்கர்கள் ஸூ (ZUE) என்ற கடவுளின் மகன் புவிக்கு வந்ததாகவும். அவர் புவியில் உள்ள அழகிய பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும். அவருக்கு 8 குழந்தைகள் பிறந்தன. என்றும் கதை எழுதி வைத்திருந்தார்கள். அந்தக் கதைப்படி நீண்ட நாள் பூமியில் வாழ்ந்த அவர் தன்னுடைய மனைவியுடன் சுவர்க்கத்திற்குப் புறப்பட்டாராம், அப்போது அவர் தன்னுடைய குழந்தைகளிடம் நான் சுவர்க்கத்திற்குச் சென்று அங்கிருந்து உங்களை அழைப்பேன், அப்போது நீங்கள் வாருங்கள் என்று கூறினாராம்.

இவர் சுவர்க்கத்திற்குச் சென்றதும், அவரது தந்தை பூமியில் பிறந்த மனிதர்களுடன் சுவர்க்கத்தில் நுழையவிடவில்லையாம். இதனால் அவரும் அவரது மனைவியும் வடதிசையில் விண்மீன்களாக இருந்துவிட்டனர். இதைக் கண்ட அவரது குழந்தைகளும் அவர்களுடன் சேர்ந்து விண்மீன்களாக மாறிவிட்டதாகக் கதை எழுதிவைத்தனர்.

அமெரிக்காவில் உள்ள மாயா மக்கள் இந்த விண்மீனை பெரிய மண்வெட்டி என்று அழைத்தனர். அமெரிக்காவில் வசந்தகாலத்தின் போது இந்த விண்மீன் மண்டலம் மிகவும் வெளிச்சத்துடன் மண்வெட்டி வடிவத்தில் காட்சி தரும், ஆகவே இது விவசாயத்திற்கு பயன்படும் பொருளின் அடையாளமாகப் பார்த்தனர்.

ரோமானியர்கள் இந்த விண்மீன் மண்டலத்தை கரடி வடிவில் பார்த்தனர். பல நாடுகளில் பயணம் செய்த இவர்களுக்கு இந்த விண்மீன் மண்டலம் பெரிதும் உதவிகரமாக இருந்தது. மேலும் ரோமானியர்களின் கடவுளர்கள் பெரும்பாலானவர்கள் கரடி மீது பயணம் செய்வது போல் புனைக்கதைகளை வகுத்துள்ளனர். இதனால் இந்த விண்மீன் மண்டலத்திற்கு கரடி என பெயர் தந்துவிட்டனர். லத்தீன் மொழியில் உர்சா மேஜர் Ursae major  என்றால் பெருங்கரடி என்று பொருளாகும்.

சீனர்கள் மற்றும் கொரியர்களும் கடற்கொள்ளையர்களை, விரட்டும் கரடியாக இதனைப் பார்க்கின்றனர். இந்த உர்சா மேஜர் தெளிவாகத் தோன்றும் காலத்தில் தென் இந்தியா மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் நாடுகளில் சூறாவளியுடன் கூடிய தொடர்மழை பெய்யும் காலமாகையால் சுமத்திரா மற்றும் மலேய மீனவர்கள் ஓய்வுகாலமாக அறிவித்தனர்.

பெருங்கரடி விண்மீனில் பீட்டா உர்சா மேஜாரிஸ் (Beta ursae majoris) என்ற மிரக் (Merak) விண்மீனிற்கு நேர் கீழாக மற்றோர் துருவமண்டல விண்மீன் உள்ளது. இந்த விண்மீன் மண்டலம் உர்சா மைனாரீஸ் (Ursae Minoris) ‘குறுங்கரடி’ என்று அழைக்கப்படும், இந்த விண்மீன் மண்டலத்தில் உள்ள ஆல்பா உர்சா மைனாரீஸ் விண்மீன் (Alpha ursae Minoris) போலாரீஸ் (Polaris) என்று அழைக்கப்படும் இது துருவ நட்சத்திரமாக அடையாளம் காணப்படும்.

இந்த விண்மீன் நமது சூரியனைக் காட்டிலும் 120 மடங்கு பெரிய மஞ்சள் நிற வடிவம் கொண்டது.இது நம்மிடம் இருந்து 472 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. ராணுவத்தினர் பயன்படுத்தும் இரட்டை தொலை நோக்கி வழியாக நிலவொளியற்ற இரவில் இந்த விண்மீனின் வியக்கத்தகு அழகைக் கண்டு ரசிக்கலாம்.

பீட்டா உர்சா மைனாரிஸ் (Beta Ursae Minoris) என்ற கொச்சாப் (Kochab) இந்த விண்மீன் மண்டலத்தில் உள்ள மற்றொரு விண்மீன் ஆகும். இது ஒரு பொலிவுமாறி எனப்படும் செஃப்பீடு ரக விண்மீன் ஆகும் (செஃப்பீடு என்றால் மிக்குறுகிய இடைவெளியில் ஒளிகுறைந்து மீண்டும் ஒளிநிறைந்து காட்சிதரும்) இந்த விண்மீன் மண்டலத்தில் மொத்தம் 7 விண்மீன்கள் உள்ளன.

ஆனால் போலாரீஸ் மற்றும் கொச்சாப் விண்மீன்களைத் தவிர மற்ற விண்மீன்களை சாதாரணமாக நாம் பார்க்க முடியாது. நிலவொளி முற்றிலும் இல்லாத நள்ளிரவு வேளையில் மங்கலாக முழு விண்மீன் மண்டலம் நமக்குக் காட்சி தரும்.

காசியோப்பியா இயற்கையின் அரசி:

துருவச் சுற்று விண்மீன் மண்டலங்களில் என்றும் மறையாமல் காட்சி தரும் மற்றொரு விண்மீன் மண்டலம் காசியோப்பியா (Cassiopeia constellation) ஆகும். இயற்கையின் அரசி சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று இதை கிரேக்கர்கள் வர்ணித்தார்கள். ஆனால் உண்மையில் இது ஆங்கில எழுத்தில் வி போன்று காட்சி தரும்.

இந்தியாவில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை நன்கு காட்சி தரும். இந்த விண்மீன் மண்டலத்தில் உள்ள விண்மீன்களில் 6 விண்மீன்கள் நன்கு புலப்படும். தொலைநோக்கி வழியாக நாம் இதைப் பார்த்தால் தொலைக்காட்சி அறிவியல் டாக்குமெண்டரியில் வருவதைப் போன்று மிகவும் அழகாகக்காட்சி தரும்.

இந்த விண்மீன் மண்டலத்தின் பின்புலத்தில் நமது பால்வெளிமண்டலமும், சுமார் 70க்கும் மேற்பட்ட ஒளிர்முகில் கூட்டமும், விண்மீன் திரள் எனப்படும் லையரா Lyra மற்றும் எரிகனல் வகை ஒளி உமிழும் செத்துப்போன விண்மீன்களின் (Dead stars) எச்சங்களும் தெரியும்..

ஆல்பா காசியோப்பியா (Alpha Cassiopeiae) என்பது செதிர் Shedir விண்மீன்.

(செதிர் என்றால் அரபு மொழியில் இதயம் என்று பொருள் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரபு வானவியலாளர் காசியோப்பியா என்ற இயற்கை அரசியின் இதயம் போன்ற பகுதியில் உள்ளதால் இப்பெயர் வைத்தார்கள்).

இந்த செதிர் விண்மீன்  நம்மிடமிருந்து 150 ஒளியாண்டு தொலைவில் உள்ளது, இது அதிக காந்தப்புலன் வகை விண்மீன்களில் ஒன்றாகும். இந்த விண்மீனுக்கு அருகில் எந்த ஒரு எரிநட்சத்திரம் அல்லது கோள் சென்றாலும் உடனடியாக தனக்குள் ஈர்த்துக் கொள்ளும்.  இது நமது சூரியனைவிட அய்ந்து மடங்கு பெரிய விண்மீனாகும்.

பீட்டா காசியோப்பியா Beta Cassiopeiae  என்ற சாஃப் Caph, காமா காசியோப்பியா என்ற சிஹ் Tsih, டெல்டா காசியோப்பியா என்ற ருக்பாஹ்-Rukbah போன்றவை முக்கியமான விண்மீன்களாகும்.

தென் துருவ பறவைகள் southern birds

செப்டம்பர் மாதம் பாதியில் துவங்கி நவம்பர் மாத இறுதிவரை தென் துருவத்தில் காணப்படும் விண்மீன் மண்டலம் பாவோ (Constellation Pavo) ஆகும். (பாவோ என்றால் லத்தீன் மொழியில் சிறகு விரித்த மயில் என்று பொருள்) பீட்டர் பெலான்ஸிஸ் Petrus Plancuius (1552--_-May 15, 1622) என்ற போலாந்து விண்வெளி ஆய்வாளர் கண்டறிந்த தென் துருவ விண்மீன் மண்டலங்களில் முக்கியமான ஒன்று இந்த பாவோ விண்மீன் மண்டலமாகும்.

முதன்முதலாக பீட்டர் பெலான்ஸிஸ் ஆய்வை தொடர்ந்து மேற்கொண்ட பீட்டர் டார்க்ஸ்சூன் கைசர் (Pieter Dirkszoon Keyser) மற்றும் ஃபெரிடிரிக் டி ஹுட்மான்     Frederick de Houtman இருவரும் இணைந்து ஆம்ஸ்டர்டாமில் இருந்து வெளிவரும் வானவியல் இதழில் இந்த விண்மீன் மண்டலம் குறித்தும் இதன் வரைபடத்தையும் வெளியிட்டிருந்தனர்.

பொதுவாக கோடை காலத்திற்குப் பிறகு துருவங்களில் தெரியும் விண்மீன் மண்டலங்களை (பாவோ, போனிக்ஸ்
Phoenix, கிருஸ் Grus, துகானா  போன்றவைகளை தென்பறவைகள் என்று அழைப்பார்கள்.

பாவோ Pavo விண்மீன் மண்டலத்தில் அதிக பொலிவுள்ள விண்மீன் ஆல்பா பாவொனிஸ் Alpha pavonis நிறமானி தொலைநோக்கி வழியாக இந்த விண்மீனைக் பார்க்கும் பொழுது இரட்டை விண்மீன்களாக காட்சிதருகிறது.  மயிலின் தலைப் பகுதி போன்ற இந்த விண்மீனை எளிதில் அடையாளம் காணலாம், மயிலின் தோள் பகுதியில் டெல்டா பாவோனிஸ் Delta Pavonis என்ற விண்மீன் உள்ளது.

இந்த விண்மீன் நமது சூரியனைப் போன்ற குணமுடைய விண்மீனாகும். பூமியிலிருந்து 19.9 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இந்த விண்மீனில் HD 181433 என்ற பெயருடைய 6- க்கும் மேற்பட்ட கோள்கள் உள்ளது ஹப்பல் தொலைநோக்கி (Hubble Telescope) மூலம் உறுதிசெய்யப்பட்டது.

HD 181433 d HD 181433 e இந்த இரண்டு கோள்களும் நமது பூமி மற்றும் செவ்வாய் போன்று அந்த டெல்டா பாவோனிஸ் என்ற விண்மீனிலிருந்து கோல்டி லாட்(Goldilocks) என்ப்படும் உயிரினம் வாழத்தகுந்த தூரத்தில் உள்ளது.  HD 181433 d  யில் உயிரினம் இருக்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

மூடநம்பிக்கைக் கதைகள்

இந்த மயில் வடிவ விண்மீன் மண்டலத்திற்கு பெயர் சூட்டியதன் பின்புலத்தில் மூடநம்பிக்கைக் கதை ஒன்று உள்ளது.

கிரேக்கக் கடவுளான ஜுனோ (Juno) என்பவரின் வாகனம்தான் இந்த மயில் வடிவ விண்மீன் மண்டலம், ஜுனோ கோடை காலத்தில் ஓய்வெடுத்த பிறகு வசந்த காலத்தின் இறுதியில் உலகைச் சுற்றிவர மயிலின் மீது அமர்ந்து ஜூனோ கடவுள் வானில் சுற்றித்திரிவாராம், குளிர்காலத்தில் பல்வேறு விழாக்கள் கொண்டாட ஜுனோ கடவுள் தான் காரணம் என்று பண்டைய அய்ரோப்பியர்கள் கருதிவந்தனர்.

வானில் மூன்றாவதாக மிகவும் அதிக ஒளியுடன் காணப்படும் NGC 6752 என்ற விண்மீன் கொத்துக்கள் உள்ளன. பாவோ விண்மீன் மண்டலம் நமது பூமியிலிருந்து மிக அதிக தொலைவுள்ள விண்மீன் மண்டலம் என்று கருதப்படுகிறது.

Share