Home 2015 அக்டோபர் பிஞ்சுகளின் மன இறுக்கம்
புதன், 28 அக்டோபர் 2020
பிஞ்சுகளின் மன இறுக்கம்
Print E-mail

இது பெற்றோர்களுக்கு...

பிஞ்சுகளின் மன இறுக்கம்

-சிகரம்

மன இறுக்கம் மனித இனத்தின் பொதுமையாய் இன்றைக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. மன இறுக்கம் இல்லாத மனிதன் இல்லை என்கின்ற நிலை இன்து. காணப்படுகிறது. பதட்டம், பரபரப்பு, உடனே நடந்துவிட வேண்டும், முடிந்து விட வேண்டும் என்ற ஆவல், சகிப்பின்மை, உணர்ச்சிவசப்-படுதல், சுயநலம் போன்றவைகளால் மன இறுக்கம் அதிகரிக்கிறது. இதன் விளைவு 30 வயதிலே இதய நோய்கள்!

இந்த மன இறுக்கம் பெரியவர்களுக்கேயன்றி பிஞ்சுகளுக்கும் வருகிறது. கள்ளம் கபடமின்றி, சுற்றித்திரிந்து ஆடிப்பாடி மகிழ்ந்த குழந்தைகள் இன்று அறைக்குள் அடைக்கப்பட்டு நெருக்கப்படுவதால் இறுக்கம் ஏற்படுவது இயல்பாகிவிட்டது. இது அவர்களின் உடல், உள்ளம் இரண்டையும் பாதிக்கிறது. அதன் வழி அவர்களின் அறிவு, திறமை, ஆர்வம் போன்றவற்றையும் கெடுக்கிறது.

பிஞ்சுகளின் மன இறுக்கத்திற்கான காரணங்கள்:

பெற்றோர் பிரிவு: பிள்ளைப்பருவத்தில் பெற்றோர் பிள்ளைகளுடன் இருந்து பாசம் பொழிந்து, உடல்தீண்டி, கட்டியணைத்துக் கொஞ்சி, களிப்பூட்டி மகிழவேண்டும். இதைக் குழந்தைகள் பெரிதும் எதிர்பார்க்கும். ஆனால், பலகுடும்பங்களில் பெற்றோர் பணிக்காக வெளியில் செல்வது நிகழ்வதால் இது போன்ற பிணைப்புகள் பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் பாசத்திற்கு ஏங்கி, பெற்றோர் உடன் இருக்க வேண்டும் என்ற இறுக்கம் அவர்களை முதலாவதாக வந்து சேர்கிறது.

உணவு திணித்தல்: பரபரப்பான உலக வாழ்வில் பெற்றோர் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற பதட்டத்தில், பிள்ளைகளுக்கு உணவை அள்ளித் திணிக்க முயற்சிக்கின்றனர். உணவு பொறுமையாக, விளையாட்டாக உண்ணப்படவேண்டியது. திணிக்கின்ற உணவை பிள்ளைகள் வெறுக்கவே செய்வர். உணவு உண்ணுவதே அவர்களுக்கு ஒருவகை இறுக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இடைவிடாபடிப்பு: பள்ளியில் வகுப்பறையில் தொடர்ந்து பாடம் கேட்க வேண்டும். பதில் சொல்ல வேண்டும். அதன் பின் வீட்டுப்பாடம். வீட்டிற்கு வந்து தூங்கப் போகும் வரைப் படிக்க வேண்டும் எழுத வேண்டும். ஆக பிள்ளைகள் கண் முன் புத்தகமும், நோட்டும் சதா நின்றுகொண்டிருப்-பதால் அவர்கள் மனம் இறுக்கம் பெறுகிறது.

விளையாட முடியாமை: பிள்ளைகள் என்றால் விளையாட்டு என்பதே பெரும்-பகுதியாக இருக்க வேண்டும். படிப்பு என்பதெல்லாம் இடையிடையே நடக்க வேண்டும். ஆனால், இன்றைய நிலை, விளையாட்டையே முழுவதும் புறந்தள்ளி, விழித்திருக்கும் நேரமெல்லாம் படிப்பு படிப்பு என்று கசக்கிப் பிழியப்படும் கொடுமை குழந்தைகளின் உரிமைக்கும் உணர்விற்கும் எதிரானதாகும்.

குழந்தைகள் எந்த அளவிற்கு மகிழ்வோடு, விரும்பியபடியெல்லாம் ஆடிப்பாடி, ஓடித்திரிந்து வருகின்றனவோ அந்த அளவிற்கு அவர்களின் மனம் இலகுவாக, மகிழ்வாக இருக்கும், அவர்களின். அவர்களின் மூளை புத்துணர்ச்சியாய் இருக்கும். உடல் நலமாக, வளமாக வளர்ச்சிபெறும். மாறாக, அறைக்குள் அடைத்து புத்தகத்தையே படியென்றால் உடலும், உள்ளமும் கெட்டு மன இறுக்கம் ஏற்படவேச்செய்யும்.

விருப்பம் நிறைவேறாமை:

பிஞ்சுகளுக்கென்று எத்தனையோ விருப்பங்கள் இருக்கும். மணலில் விளையாடுதல், கிளிஞ்சல் பொறுக்குதல், சிறுவண்டி ஓட்டுதல், ஊஞ்சல் ஆடுதல், வீடுகட்டுதல், மண்சோறு ஆக்குதல், பதுங்கிவிளையாடுதல், சில்லி, கண்ணாமூச்சி ஆட்டம் என்று பல. இந்த விருப்பங்கள் எதையும் நாம் நிறைவேற்றி வைப்பதில்லை. இதன் விளைவாய் அவர்களின் மனம் ஏமாற்றத்தாலும், கவலையாலும் இறுக்கம் பெறுகிறது.

அச்சுறுத்தல்: வீட்டில் பெற்றோர் அச்சுறுத்துவது; பள்ளியில் ஆசிரியர் அச்சுறுத்துவது. அறியாத பருவத்தில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் அவர்களின் மனத்தை பெரிதும் பாதிப்பதோடு, மன இறுக்கத்தையும் உருவாக்குகிறது. எனவே, பிள்ளைகளை அச்சுறுத்தி, அடித்து வளர்ப்பதை அறவே கைவிட வேண்டும். அன்போடும், அக்கறையோடும் சொன்னால் பிள்ளைகள் ஆர்வத்தோடு கேட்டுச் செயல்படுவர்.

பள்ளியின் நடைமுறைகள்: விருப்பப்படியெல்லாம் மகிழ்ந்திருக்க வேண்டிய பருவத்தில் விதிகளுக்கு உட்படுத்தி அவர்களைக் கல்வி நிலையங்களில் கசக்கிப் பிழிவதால் பெரும் மன உளச்சல், இறுக்கம் அவர்களுக்கு ஏற்படுகிறது. காலில் ஷு, கழுத்தில் டை, இடுப்பில் பெல்ட், கால் சட்டைக்குள் மேல் சட்டையைச் செருகுதல்,  திருப்பாதே, அசையாதே என்பன போன்றவற்றில் அவர்கள் வாழ்வு எந்திரம் போலாகி, இறுக்கம் பெறுகிறது.

பாடச்சுமை: ஒரு பிள்ளைக்கு எந்த அளவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும். வீட்டுவேலைகள் தரவேண்டும் என்பதற்கு உளவியல் சார்ந்த சில அளவுகள் உள்ளன. அதையெல்லாம் பொருட்படுத்தாது ஒவ்வொரு ஆசிரியரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆளாளுக்கு வீட்டுவேலைகளைக் கொடுத்து பிஞ்சுகளைக் கொடுமைப்படுத்துவது அவர்களின் மன இறுக்கத்திற்குப் பெருங்காரணமாகும். இது பிள்ளைகளுக்கு எதிரான குற்றச் செயல் என்றே கூறலாம்!

ஒப்பிட்டு குறைசொல்லுதல்: அடுத்தப் பிள்ளைகளோடு ஒப்பிட்டுக் குறை சொல்லும் போது பிள்ளைகளின் மனது ஒரு தாழ்வு மனப்பான்மையோடு வேதனைப்படும், அது அவர்களை அடிக்கடி வேதனைப்படுத்தும். இதன் விளைவாய் மன இறுக்கம் ஏற்படும்.

தீர்வு என்ன?: கல்வியாளர்கள், உளநலமருத்துவர்கள் கலந்து, ஆய்ந்து, சிந்தித்து பிள்ளைகளுக்கான கற்பித்தலை, விளையாட்டை, தேர்வை, வீட்டுப்பாட அளவை, பள்ளியின் தூரத்தை, பயணத்தை, உணவு முறையைத் தீர்மானிக்க வேண்டும். அதைப் பெற்றோர்களும், கல்வி நிலையத்தாரும் பின்பற்ற வேண்டும்.

பிள்ளைகளை அடிக்கடி விழாக்களுக்கு, பொழுது போக்கிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பெற்றோர் பிள்ளைகளுடன் நெருக்கமாகப் பழகி அன்பைப் பொழிய வேண்டும். பாடத்தைச் சுமையாக்காமல், விரும்பி கற்பதாய் ஆக்கவேண்டும்.

Share