கதை கேளு...கதை கேளு...
Print

அந்த ஊரிலேயே பெரிய வீடு அதுதான். பால்காரர் பரமசிவம் வீடு என்றால் சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும்.

பத்துப் பதினைந்து எருமை மாடுகளை வைத்துக்கொண்டு, ஊருக்கே பால் அளப்பவர் அவர். பால் வியாபாரம் செய்தே, தன் பிள்ளைகளைப் பட்டதாரிகளாகப் படிக்க வைத்தவர். அவர்களுக்கு, வசதியான இடங்களில் திருமணம் முடித்து  பேரன் பேத்தி எடுத்த பெரிய குடும்பம் அவரது குடும்பம்.

மாடுகள் அனைத்தும், அவர் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் தொழுவத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன.

வழக்கம் போல், வேலை ஆட்கள் பால்கறந்து முடித்து மாடுகளுக்கு வைக்கோல் போட்டு-விட்டுப் போய்விட்டார்கள்.

மாடுகள் தீனியை அசை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு எருமை மட்டும் தனக்குப் போடப்பட்ட வைக்கோலைத் தின்னாமல், தொழுவத்தின் மேல் கூரையைப் பார்த்தபடி அழுது கொண்டு இருந்தது.

அதன் எதிரில் கட்டுண்டு தீனியைத் தின்று கொண்டிருந்த மற்றொரு எருமை, அதைப் பார்த்துவிட்டது. "ஏன் அழுதுகிட்டிருக்கே?" என்று கேட்டது.

"என்னன்னு சொல்ல?... கன்னு போட்டுப் பத்து நாள் கூட ஆகலெ... அதுக்குள்ள அது செத்துப் போச்சே!" என்று வேதனையுடன் சொன்னது அழுது கொண்டிருந்த எருமை.

"அதுகென்ன செய்ய முடியும்? அதன் தலையெழுத்து அவ்வளவுதான். ஆயுசு முடிஞ்சு போச்சு, போய்ச் சேந்துடுச்சு!" என எதிரில் இருந்த எருமை ஆறுதல் சொன்னது. "அப்படிச் சாதாரணமா சொல்லிட முடியுமா?... மனித உயிரை எடுக்கத்தான் எமன் நம்ம மாதிரி எருமை மாட்டு மேலே வர்றதா இந்த மனுசனுங்க சொல்லுவாங்க.

என் கன்னுக்குட்டி உயிரைப் பறிக்கவும், எமன் என் மேலேயே வந்துட்டான் போலிருக்கு!" என்று கன்றைப் பறிகொடுத்த மாடு புலம்ப-

"நீ சொல்றதே புரியலே..." என எதிரில் இருந்த எருமை குழம்பியது.

"அதாவது, என் கன்னோட சாவுக்கு நான்தான் காரணம்னு சொல்றேன்!" என்று விளக்கியது தாய் மாடு.

"உன் கன்னு சாவுக்கு நீ எப்படிக் காரணமாக முடியும்?" மீண்டும் கேள்வி எழுப்பியது எதிர் எருமை.

"ஆமாம்! நான்தான் காரணம். பெற்றெடுக்கத் தெரிஞ்ச எனக்கு, முறையா பால் கொடுத்துக் காப்பாத்தத் தெரியலியே!" என வேதனையோடு பேசியது தாய் எருமை.

"நீ கன்னுக்குட்டிக்கு பால் கொடுக்கவா உன்னை இங்கே கட்டிப் போட்டுப் பராமரிக்கிறாங்க? நம்ம கிட்ட இருந்து கறக்கிற பாலை நம்பித்தான் நம்மை வளக்கிற பரமசிவமும் இருக்காரு, இந்த ஊரும் இருக்குது. அதுலெயும் குறிப்பா ஊருலே உள்ள சின்ன குழந்தைங்க எல்லாம் நாம தர்ற பாலை நம்பித்தான் இருக்கு!" என்றது எதிரில் இருந்த மாடு.

"அது என்னமோ உண்மைதான். தாய்ப்பால் கொடுத்தா அழகு குறைஞ்சிடும், இளமை போயிடும்னு தப்பா நினைக்கிற தாய்மார்களும் இருக்கத்தானே செய்யிறாங்க! அவ்வளவு ஏன்?

இந்தப் பரமசிவத்தோட மூத்த பொண்ணு கூட, அப்படிச் சொல்லிக்கிட்டு நம்ம பாலைத்தான் பிள்ளைக்கு ஊட்டுது நம்ம உடம்புலே உண்டாகிற பாலிலே, ஒரு கன்னுக்குட்டிக்கு என்னென்ன சத்து வேணுமோ அதுதானே இருக்கும்? அதைப் பிள்ளைக்கு ஊட்டுனா, பிள்ளை அருமையாவா வளரும்?... எருமயாத்தான் வளரும்!

எந்தப் பிராணியும் தன் குட்டிக்கு வேறொரு பிராணியின் பாலை எதிர் பார்க்காது. ஆனால், பல சத்துங்க இருக்கிறதாலே, நம்ம பாலை இந்த மனிதர்கள் அதிகமாகவே எதிர் பார்க்கிறாங்க.

ஒவ்வொரு முறையும் என் கன்னை மடியெ முட்டி பால் குடிக்க வெச்சு - பால் சுரக்க ஆரம்பிச்சதும் இழுத்துத் தூரமா கட்டி ஒட்ட ஒட்டப் பால் கறந்துட்டு, கடைசியா வத்திப் போற நேரத்துலே கன்னை அவிழ்த்து விட்டா அது செத்துப்போகாம என்ன செய்யும்?" என மனக் குமுறலைக் கொட்டியது தாய் எருமை.

"அதைவிடப் பெரிய கொடுமை -------- செத்துப் போன கன்னுக்குட்டியோட தோலை உரிச்சு, அதுக்குள்ள வைக்கோலை அடைச்சு நம்ம முன்னாடி நிக்க வைச்சு பால் கறக்கிறது! இந்த மனிதர்களை நினைச்சாலே ஆத்திரம் வருது!" என்றது எதிரில் இருக்கும் எருமை.

"பாசமா... ஆசையா தாயைப் பார்த்ததும் அம்மான்னு கத்திக்கிட்டு ஓடிவந்த கன்னுக்குட்டிக்கும், செத்துப் போயி தோலா நிக்கிற கன்னுக்குட்டிக்கும் வித்தியாசம் தெரியாத எருமையாவே நாம இருப்போம்னு நினைக்கிறாங்களே, மனிதர்கள்!" என நொந்து போய்ப் பேசியது தாய் எருமை.

"அட, நம்ம கன்னுக்குட்டி அந்த நாள்லே இருந்து, அம்மான்னுதான் கத்துது. பரமசிவத்துப் பேரன் பேத்தியெல்லாம், மம்மின்னு வேற மொழியிலே இல்லை, அம்மாவைக் கூப்பிடுதுங்க. காலம் அவ்வளவு கெட்டுப்போச்சு. மனிதனைவிட, மாடு நாம எவ்வளவோ மேல்!" என ஏளனமாய்ச்சொல்லிற்று எதிரில் இருந்த மாடு.

"கன்னுக்குட்டியை இழந்த வருத்தத்திலே பால் கறக்க முடியாமே இருக்கிற எனக்கு, ஊசி குத்தியில்லே பால் கறந்தாங்க. ஊசி குத்தின பிறகு, என்கிட்டே கறைந்தது பால் இல்லை; என்ரத்தம். கடைசியிலே, பாலே கறக்க முடியல்லேன்னு தெரிஞ்சு போச்சின்னா அடிமாட்டுக்கு இல்லே அனுப்பி வைச்சிடுறாங்க!" என்றது தாய் மாடு.

"ஆமாமா... வரதட்சணை  கொடுக்க வழில்லாத மருமகள் மோசமான மாமியார் கிட்டே மாட்டின மாதிரிதான். முடிஞ்ச வரைக்கும் கறப்பாங்க... முடியலேன்னா மண் எண்ணெய் ஊத்திக் கொளுத்திட்டு, ஸ்டவ் வெடிச்சிடுச்சின்னு சொல்லிடுவாங்க. அதனாலதான், அந்த  மாதிரி மருமகள்களை மாட்டுப் பொண்ணுன்னு சொல்றாங்க போலிருக்கு!"

"மனிதர்கள் - பலனில்லேன்னா, தன்னைப் போன்ற மனிதர்களையே கொல்லும்போது மாடு நாம எம்மாத்திரம்? எனக்கென்ன வேதனைன்னா... எந்தத் தாயாவது தன் பிள்ளையைப் பறி கொடுத்திட்டு பொம்மைக்குப் பால் கொடுப்பாளா? என் வேதனையை எங்கே போய் சொல்றது? ஆண்டவன் கிட்டே முறையிடலான்னா, அவரும் நம்ம பாலைத்தானே எதிர் பார்த்துக் காத்திருக்காரு பாலாபிஷேகத்துக்கு!" என வருந்தியபடி சொல்லிற்று தாய் எருமை .

இப்படி இரண்டு எருமைகளும் பேசிக் கொண்டிருக்கும் போதே, பால் கறக்கிறவர் பாத்திரத்துடன் வந்து நின்றார்.

எப்போதும் போல், வஞ்சனையில்லாமல் பால் தந்தது எருமைத் தாய்.

Share