சும்மா மொக்க போடாதீங்க
Print

ஒரு ஊர்ல ஒரு பெரியார் பிஞ்சு இருந்தாங்களாம்! அவங்க சின்ன வயசுசிலேயிருந்தே விஞ்ஞானியாகணும்னு ஆசைப்பட்டாள். அப்பிடின்னு கதை சொல்ற மாதிரியே தொடங்கலாமா இல்லே மாறுவதுதான் மாறாதது அப்பிடிங்கிற இயற்கை நியதியின்படி மாத்தி எழுதலாமான்னு ஒரு சின்ன தடுமாற்றம்
சரி மாத்தியே எழுதலாம்.

- டைரக்ட் டூ பூவிருந்தவல்லி, ராஜா நகர், இலட்சமிபுரம் சாலை, வீட்டு எண் 9, நள்ளிரவு...

வீட்டினுள் பெரியார் மாணாக்கன் ஆழ்ந்து உறங்கும் தன் மகள் தொண்டறத்தை பெருமிதத்தோடு பார்த்தபடி இருந்தார். சற்று முன்னர்தான் உறங்கினாள். ஏழாம் வகுப்புதான் படிக்கிறாள். நிலவுக்கு செல்ல வேண்டுமென்து அவனது கனவு. அதை நிறைவேற்ற அவளது பெற்றோர்களும் இசைவு தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் பூவிருந்தவல்லி நீதிபதி செல்லப்பா தெருவிலுள்ள சத்யா பள்ளியில் நாளை அறிவியல் கண்காட்சியைத் திறந்து வைக்க, இயற்பியல் அறிஞர் சித்து முருகானந்தம் வரவிருக்கிறார்.

இதைத் தெரிந்து கொண்ட பெரியார் மாணாக்கன் அவரிடம் பேசியில் தொடர்பு கொண்டு மதிய உணவுக்கு தங்கள் வீட்டுக்கு அவர் வரவேண்டும் என்று உறுதி வாங்கிவிட்டார். இந்த தகவலை மகள் தொண்டறத்திடம் சொல்லிவிட்டார். அவ்வளவுதான், அப்பப்பா... நினைத்து நினைத்து கேட்கிறாள் உண்மையா?! உண்மையா?! என்று. நள்ளிரவு வரை கேட்டுக் கொண்டேயிருந்து சற்று முன்தான் அசந்து போய் தூங்கினாள்.

அடுத்த நாள்...

அந்த அறிவியல் கண்காட்சியில் பெரியார் மாணாக்கன் தன் மகளோடு கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை முருகானந்தம் மனநிறைவோடு பாராட்டி தானும் மகிழ்ந்தார். அனைவரும் அறிவியல் மனப்பாண்மையோடு வாழ வேண்டும் என்பது தான் அவரின் பேச்சின் சாரம். நிகழ்ச்சி முடிந்து மக்களின் பிடியிலிருந்து அவரை மீட்டு வருவதற்குள் பெரியார் மாணாக்கனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு வரும் வழியில் சித்து முருகானந்தம் தொண்டறத்திடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்த நிகழ்ச்சி பற்றி ஏதோதோ பேசியபடி வந்தார். வீட்டுக்கு வந்ததும் உணவு முடித்த பிறகு நிதானமாக மற்ற விசயங்கள் பற்றி பேசும் போது, “அதுசரி, தொண்டறத்தை என்ன படிக்க வைக்கலாம்னு இருக்கிறீர்கள்” என்று தொண்டறத்தின் அம்மா செல்வியைப் பார்த்துக் கேட்டார்,
அதற்கு அவர், “அவளிடமே கேளுங்களேன்” என்றார்.

அட! என்று ஆச்சரியப்பட்டு, தொண்டறத்தின் பக்கம் திரும்பி, “எதிர்காலத்தில் என்ன படிக்க போறிங்க, என்னவாக ஆகப்போகிறீர்கள்” என்று கேட்டார்.

தொண்டறம் மிகுந்த ஆர்வத்துடன்... “இயற்பியல் படிக்கப் போகிறேன். நிலவுக்கு போகப்போகிறேன்” என்றாள்.

அடடே என்று இன்னமும் வியந்து போய் தொண்டறத்தை பரிசோதிக்க எண்ணி, இதுகுறித்து சில கேள்விகளை கேட்கலாமா?” என்றார் தயக்கத்துடன்.

தொண்டறம் ஆவலுடன் சரியென்பதுபோல தலையசைத்தாள்.

“இந்த வயதில் கேள்வி கேட்டா, எல்லாரும் சும்மா மொக்க போடாதீங்கன்னு சொல்வாங்க”- என்று தயங்கினார்.
தொண்டறம் நிமிர்ந்து அமர்ந்து, “நான் அப்படி நினைக்க மாட்டேன். தாராளமாக கேளுங்க.” என்றாள்.

“பரவாயில்லையே, அஃபெலியான்ன- என்னன்னு தெரியுமா?”

“சூரியனிடமிருந்து வெகு தூரத்தில் விலகிச் செல்வதைக் குறிக்கும் சொல்.”

“குட்..”

“நன்றி. அது ஒரு கிரேக்க சொல்.”

சித்துமுருகானந்தத்தின் இரண்டு புருவங்களும் வியப்பின் அறிகுறியாக உயர்ந்தன.

“ம்... பரவாயில்லையே... சரி, ஆண்ட்ரோமிடான்னா என்னன்னு தெரியுமா?”

“மிகப்பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரங்கள் அடங்கிய தொகுதி.” என்று கூறி ஒரு சின்ன இடைவெளி விட்டு, “இது வானில் வட பகுதியில் உள்ளது.” என்றாள்.

“நான் இதை எதிர்பார்க்கவேயில்லை.” என்று தனது இரண்டு தோள்களையும் குலுக்கியபடி, “நான் என்னமோ படிச்சிட்டுதான் விஞ்ஞானி ஆனேன். நீ பேசறதைப் பார்த்தா, விஞ்ஞானியா ஆயிட்டுதான் படிக்க போறேன்னு நினைக்கிறேன்.” என்று சொன்னதும் பெரியார் மாணாக்கள் பெரிதாக சிரித்து விட்டார். மற்றவர்களும்தான்

“சரி கடைசியா ஒரு கேள்வி ஒளி ஆண்டு என்றால் என்ன?”

“ஒரு ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தூரம் ஒளி ஆண்டு எனப்படுகிறது. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 2.98,792 கி.மீட்டர்கள்!”

“அட 1,86,000 மைல்கள்னுதானே சொல்வாங்க. நீங்க கிலோ மீட்டர்ல சொல்றீங்களே?”

“அது சரிதான். மைல் கணக்கு இப்போ புழக்கத்தில் இல்லையே. அதனால்தான் கிலோ மீட்டர் கணக்கு. நீங்க தானே சொன்னீங்க எதிலையும் விஞ்ஞான மனப்பான்மை வேணும்னு” என்று பதில் சொன்னதும் சித்து முருகானந்தம் பொறி தட்டியது போல சட்டென்று சுதாரித்து, “விஞ்ஞான மனப்பான்மையை ஊருக்கெல்லாம் நான் சொல்லிட்டிருக்கேன். ஆனா நானே தொண்டறத்து கிட்டேயிருந்துதான் கத்துக்கணும் போலிருக்கே.”

என்று சொல்லிவிட்டு இடிஇடிப்பதுபோல கடகடவென்று சிரித்தார். அந்த சிரிப்பு யாரையுமே தொற்றிக்கொள்ளும். பக்கத்திலிருந்த இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? சிரித்து சிரித்து வயிரே வலிக்கத் தொடங்கி விட்டது. சித்து முருகானந்தம் அந்த சிரிப்பினூடேயே விடை பெற்று காத்திருந்த ஆட்டோவில் ஏறிச் சென்று விட்டார்.

அக்கம் பக்கம் வீடுகளிலிருந்த காவியா, சுஜன், சூரியன், வேலவன், அடல், உடுமலை ஆகிய சின்னஞ்சிறுவர்கள் உட்பட அனைவரும் ஏன் இந்த சிரிப்பு அமளி என்று புரியாமல் “ஙே!” என்று வேடிக்கை பார்த்துக்-கொண்டிருந்தனர்.

Share