பிரபஞ்ச ரகசியம் 31
Print

நமது பால்வெளிமண்டலத்திற்கு அருகில் உள்ள பால்வெளிமண்டலம் பற்றிய ஒருவரியை நாம் படித்திருப்போம். நமது பால்வெளிமண்டலத்தை விட சிறிதான ஆண்டிஅண்ட்ரோமீடா 25,00,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. அதாவது ஒளிவேகத்தில் நாம் அந்த பால்வெளிமண்டலத்தை அடைய வேண்டுமென்றால் 25,00,000 லட்சம் ஆண்டுகள் பயணம் செய்யவேண்டும். நமது கண்களுக்குத் தனித்து தெரியும் ஒரே ஒரு  பால்வெளிமண்டலம் ஆகும்.

4 ஆம் நூற்றாண்டில் ரோமானியக் கவிஞர் விண்மீன் மண்டலத்தைப் பற்றி கவிதை ஒன்றை எழுதினார், அவரைத் தொடர்ந்து அரபுநாட்டைச் சேர்ந்த அபத் அல் ரகுமான் என்பவரும்

964ஆம் ஆண்டு தனது வானியல் நூலில் ஆண்டிரோமீடா பற்றி சிறிய மேகம் என்று குறிப்பிட்டிருந்தார். அரபியப் பாலைவனத்தின் தெளிவான வானத்தில் மிகவும் அழகாக தெளிவாக ஆண்டிரோமீடா காட்சியளித்த காரணத்தால் ஆண்டிரோமீடா அல் ரகுமானைக் கவர்ந்தது,

1764-ஆம் ஆண்டு ஜெர்மன் வானியல் அறிஞர் சீமோன் மோரியஸ் தொலைநோக்கி வழியாக இந்த பால்வெளிமண்டலத்தை ஆய்வு செய்தார்.

1785ஆம் ஆண்டு பிரபல விண்வெளி ஆய்வாளரும் விண்மீன்கள் பற்றிய முழுத்தொகுப்பை முதல் முதலாக நமக்கு வழங்கியவருமான வில்லியம் ஹர்ஷல் இதை ஒரு சிவப்பு வண்ண ஒளிர்முகில் என்று கூறினார். பிரமாண்ட விண்மீனான சீரியசை விட மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும் கூறினார்.

வில்லியம் ஹர்ஷல் தந்த விண்மீன்களின் தொகுப்பை ஆதாரமாக வைத்து 1864-ஆம் ஆண்டு வில்லியம் ஹக்னிஸ் என்பவர் ஆண்டிரோமீடாவை தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார். இதன் ஒளியில் உள்ள வேதியியல் குணத்தை ஆய்வு செய்த போது இது ஒரு தனிப்பட்ட விண்மீனோ அல்லது ஒளிர்முகில் கூட்டமோ அல்ல என்றும், இதில் பல்வேறு குணங்களுடைய அதிக விண்மீன் தொகுப்புக்கள் இங்கு இருக்கலாம் என்று கூறினார்.

இவரின் இந்தக் கருத்து வானியல் அறிஞர்களை இந்தப் புதிய விண்மீனைப் பற்றி அறிய மேலும் அதிக ஆர்வத்தைத் தூண்டியது. 1885ஆம் ஆண்டு ஆண்டிரோமீடா பால்வெளிமண்டலம் அதிக ஒளியுடன் காட்சியளிக்கத்துவங்கியது. இந்த நிலையில் இதை கலிலியோ தொகுக்க மறந்த சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் என்று வானியல் அறிஞர்களில் ஒரு சாரர் நினைத்தனர், மற்றொரு குழுவினரோ இது வெடித்துச் சிதறிய விண்மீனால் ஏற்பட்ட சூப்பர் நோவா என்று நினைத்தனர். இதற்கு நோவா 1885 என்று கூடப் பெயர் சூட்டப்பட்டது.

இதே காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஈசாக் ராபர்ட் என்ற வசதிபடைத்த வானியல் அறிஞர் தனதுவீட்டின் மேல்தளத்தை ஆய்வுக்கூடமாக மாற்றி ஆண்டிரோமீடாவை தொடர்ந்து ஆய்வு செய்தார். இவரது அறிவியல் தொகுப்புக் கட்டுரையில் இடம் பெற்ற வரைபடத்தில் மேகங்களைப் போன்ற சுருள்வடிவமும் அதில் புள்ளிபுள்ளியாக ஒளிரும் பல விண்மீன்களும் இருப்பது போல் காட்சியளித்தது. 1912 ஆம் ஆண்டு  வானில் இருந்து வரும் ஒளியலைகளை அளந்து ஆய்வு செய்த வோஸ்டோ சில்ஃபர் ஆண்டிரோமீடாவிலிருந்து வரும் ஒளியலை-களையும் ஆய்வு செய்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹேவர் கார்டஸ் என்ற வானியல் அறிஞர் ஆண்டிரோமீடாவின் தொலைவை ஆய்வு செய்தார். இதனடிப்படையில் இது நமது பூமியில் இருந்து சுமார் 5,00,000  ஒளியாண்டுகள் தூரம் இருக்கலாம் என்று கணித்துக் கூறினார். அப்போது சக்திவாய்ந்த தொலை-நோக்கிகள் இல்லாத காரணத்தால் இவரால் துல்லியமான அளவைத் தர இயலவில்லை, இருப்பினும் இது ஒரு பால்வெளிமண்டலம் தான் என்பதை உறுதிசெய்தார்.

இறுதியில் 1920-ஆம் ஆண்டு _ ஆண்டி-ரோமீடாவைப் பற்றிய உறுதியான தகவல்கள் கிடைக்கத்துவங்கியது.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் ஆண்டிரோமீடா குறித்த ஆய்வுகள் மற்றும் விவாதங்கள் விண்வெளி ஆய்வாளர்களிடையே தொடர்ந்து நடந்துவந்தது. முந்தைய வானியல் அறிஞர்களின் தொகுப்புகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்பட்டன. 1925-ஆம் ஆண்டு எட்வின் ஹப்பளின் தனது ஹூகர் தொலைநோக்கி வழியாக இந்தப் பால்வெளி-மண்டலத்தில் உள்ள பல்வேறு விண்மீன் தொகுப்புக்களை ஆய்வுசெய்தார்.

1943-ஆம் ஆண்டு வல்டர் வாடெ என்ற அமெரிக்கர் ஆண்டிரோமீடாவின் வெளிவளையத்தில் உள்ள இரண்டு விண்மீன்களை தனித்து ஆய்வுசெய்தார். தான் கண்டறிந்த விண்மீனிற்கு டீ 1 என்றும், ஆர் 2 என்றும் பெயரிட்டார். ஆண்டிரோமீடாவைக் கண்டறிந்ததன் மூலம் நமது பால்வெளி-மண்டலத்தைப் பற்றிய பல்வேறு உண்மைகளை வானியல் ஆய்வாளர்கள் அறிந்துகொண்டனர்.

1950 கேம்பிரிட்ஜ் ரோடியோ தொலைநோக்கி நிறுவப்பட்டது, இந்த ரோடியோ தொலைநோக்கி மூலம் ஆண்டிரோமீடாவின் முழுப்பகுதியையும் ஆய்வு செய்ய முடிந்தது. ஆண்டிரோமீடா பால்வெளிமண்டலம் 1953 ஆம் ஆண்டு மீண்டும் அதீத ஒளியுடன் வானில் தெரிய ஆரம்பித்தது. அதனை அடுத்து 1990-ஆம் ஆண்டில் மீண்டும் அதிக ஒளியுடன் மின்னியது. அந்த ஆண்டில் ஹிப்பார்காஸ் செயற்கைகோள் மூலம் ஆய்வு செய்தனர், இந்த ஆண்டு ஆண்டிரோமீடாவின் துல்லியமான தூரம் கணக்கிடப்பட்டது.

இடைவெளிவிட்டு ஒளிரும் ஆண்டிரோமீடாவின் தன்மை குறித்து இதுவரை எந்த உறுதியான முடிவிற்கும் வானியலாளர்கள் வரவில்லை. முதலில் அங்கு பல சூப்பர் நோவாக்கள் தொடர்ந்து வெடித்தவண்ணம் இருக்கும் என்று கூறப்பட்டது. அப்படி வெடித்தால் முழு ஆண்டிரோமீடாவின் சிறுபகுதிதான் ஒளிரும்.

ஆனால் முழு பால்வெளிமண்டலமே ஒளிருவது குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. அய்ரோப்பிய- அமெரிக்க வானியல் ஆய்வுக் கழகத்தால் 2012-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வறிக்கை ஒன்றில்  1000 கோடி ஆண்டு-களுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என்றும் தொடர்ந்து 500 கோடி ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. தற்போதைய உருவகத்தை அடைந்து சரியாக 500 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்றும் உறுதிபடக் கூறியுள்ளனர்.

இந்தப் பால்வெளிமண்டலத்தில் இருந்து அதிக அளவு அகச்சிவப்பு கதிர்கள் வெளியாகிறது, இதன் மூலம் இந்தப் பால்வெளிமண்டலத்தில் உருவாகும் விண்மீன்களின் வெப்பநிலை மிகவும் அதிக அளவு இருக்க வாய்ப்புள்ளது.  இதனுடைய ஆரம்பகட்ட அளவு சிறியதாகவும், இதன் அருகில் உள்ள மற்றோர் பால்வெளிமண்டலம் சுமார் 800 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இதனுடன் மோதியிருக்-கலாம் என்றும் தெரியவருகிறது.

Share