Home 2016 பிப்ரவரி குழந்தைகள் நாடகம்
வியாழன், 22 அக்டோபர் 2020
குழந்தைகள் நாடகம்
Print E-mail

கதா பாத்திரங்கள்:

தேன்மொழி  சிறுமி, அப்பா  அன்பரசு, அம்மா  மீனா, தாத்தா, மாணிக்கம்  சிறுவன், செல்வம் சிறுவன்.
தேவையான பொருள்கள்:
நாற்காலி, செய்தித்தாள்.

காட்சி : 1

பங்கேற்போர் : தேன்மொழி, அப்பா அன்பரசன், அம்மா மீனா.
(அப்பா நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கிறார். வெளியிலிருந்து வந்த தேன்மொழி இடது கன்னத்தில் கைவைத்தபடி இங்கும் அங்கும் நடந்து கொண்டே...)

தேன்மொழி : அவ்வா! அல்லு அலி அயிரை ஆங்குதே ஆங்... அன்னா அய்வேன்...

அப்பா : என்னம்மா தேனு? என்னமோ புதுமொழி பேசிக்கிட்டிருக்கே...
(அம்மா உள்ளிருந்து வந்தபடி...)

அம்மா : இம்... உங்க அருமை மக தேன்மொழிக்கு பல்லுவலி... அதுனாலேதான் புரியாத மொழியெல்லாம் பேசுறா...

அப்பா : அம்மா தேனு கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லும்மா...

தேன் : அவ்வா! அல்லு அலி அயிற ஆங்குது...

அப்பா : என்னா சொல்றேன்னு புரியலியே...

அம்மா : அப்பா... பல்லு வலி உயிரை வாங்குதுன்னு சொல்றா... ஒழுங்கா பல்லை தேயின்னு சொன்னா... கேட்டாதானே... அப்ப நாம சொன்ன பேச்சை அவ கேக்கலே, இப்ப அவ சொல்ற பேச்சு நமக்குப் புரியலே.

அப்பா : அட... கொஞ்சம் நேரம் சும்மா இரு மீனா... புள்ளை வலியிலே துடிக்குது இப்ப போயி பல்லு தேய்க்குலெ வாய் கொப்பளிக்கலேன்னு குறை சொல்றே... நீ வாம்மா நாம டாக்டர் கிட்டே போயிட்டு வர்லாம்...

தேன் : ஆட்டர் இட்டியா ஆனாப்பா! ஆனாம்! ஆனாம்! அல்லெ அடுங்குறென்னு ஆசை அடுங்கிடு ஆங்க...

அப்பா : என்ன சொல்றென்னு புரியலியே,,,

அம்மா : டாக்டர்கிட்டே போனா பல்லெ புடுங்கிறேன்னு காசை புடுங்கிடு வாங்கலாம். இதெல்லாம் இலக்கணமா பேசு... சுத்தமா பல்லு தேயின்னா தேய்க்காமெ விட்டுட்டு எங்க உயிரை வாங்குது.... நீங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போங்க....

தேன்: ஆனா... ஆனா!....

அம்மா: ஆனாவாவாது ஆவன்னாவாவது முதல்ல டாக்டரைப் போய் பாருங்க... இவ பல்ல ஒழுங்காத் தேய்க்கல, ஏதாவது சாப்பிட்டா வாயில குச்சிப் போட்டு குத்தறா அப்படின்னு டாக்டர்கிட்ட சொல்லுங்க...

தேன்: ஆனாவ்வா... ஆனா! ஆசை அடுங்கிடுவாங்க...

அப்பா: அதெல்லாம் ஒண்ணும் அடுங்க மாட்டாங்க... செ... எனக்கு ஒட்டிக்கிச்சு... உன் பேச்சு... காசை புடுங்கிக்க மாட்டாங்க... வா... போயி டாக்டரைப் பாத்துட்டு வந்திடுவோம்...

தேன்: ஆனாவ்வா!!! ஆனா...

அப்பா: பயப்படாத வாம்மா...! வா... வா... வா...
(தேன்மொழியும் அப்பாவும் வெளியே போகின்றனர்)

அம்மா : புள்ளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா அப்பா மனசு தாங்க மாட்டேங்குது.
(உள்ளே போகிறார்கள்)

காட்சி : 2      இடம் : மரத்தடி

பங்கேற்போர் : தாத்தா, செல்வம், மாணிக்கம், தேன்மொழி, அப்பா அன்பரசு
(தாத்தா வருகிறார் சிறுவன் செல்வம் எதிரே ஓடி வந்து...)

செல்வம் : தாத்தா... தாத்தா... உங்களைத்தான் தேடிக்கிட்டு வந்தேன்.

தாத்தா : அப்படியா... என்ன சமாச்சாரம்...

செல்வம் : கதை சொல்றேன்னு சொன்னீங்களே... அதான் வந்தேன்... நல்ல கதையா சொல்லுங்க தாத்தா....

தாத்தா : நல்ல கதையா...? ம்... என்ன கதை சொல்லலாம்... செல்வம் உங்கூட வர்ற மத்த பிள்ளைகளெல்லாம் எங்கப்பா?

செல்வம் : யாரையுமே காணோம் தாத்தா! அதோ மாணிக்கம் வந்துட்டான்!

தாத்தா : வா! மாணிக்கம்! உன்கூட படிக்கிற தேன்மொழி எங்கே காணோம்?

மாணிக்கம் : தாத்தா! தேன்மொழி அவங்க அப்பாவோட எங்கேயே போயிட்டு வர்றா

தாத்தா : வாம்மா, தேன்மொழி...

அப்பா : வணக்கம் தாத்தா...

தாத்தா : தேன்மொழிய கூட்டிக்கிட்டு எங்க போயிட்டு வர்றிங்க அன்பரசு...

அப்பா : இன்னைக்கு காலையிலேயிருந்து இவளுக்கு பல்லுவலி அதனாலே பல் டாக்டர் கிட்டே கூட்டிக்கிட்டுப் போயிட்டு வர்றேன்...

தாத்தா : டாக்டர் என்ன சொன்னாரு...

அப்பா : ஒழுங்கா பல் தேய்க்கணும், சரியா பல் துலக்குலேன்னா பல் சொத்தையாப் போயிடும் அப்படிண்ணு சொன்னாரு... வலி குறைய மருந்து குடுத்து இருக்காரு...

தாத்தா : சுத்தமா முறையா பல் தேய்க்கிறது, விரல் நகங்களை ஒட்ட வெட்டி விரல்களை சுத்தமா வச்சிக்கிறது... தினமும் உடம்புக்கு குளிக்கிறது... உணவை முறையா சாப்பிடுறது... சரியான விளக்கு வெளிச்சத்தில் முறையா படிக்கிறது... இப்படி பல நல்ல பழக்கத்தை குழந்தைகள் சின்ன வயசிலேயே கடைப்பிடிச்சா பின்னாடி என்னப்போல வயசான ஆளா ஆகிற வரையிலே கவலையே பட வேண்டியதில்லே...

செல்வம் : தாத்தா பல்ல சரியா தேய்க்கிலேன்னா என்ன ஆகும்...

தாத்தா : நாம சாப்பிடுற உணவுப் பொருள் பல் இடுக்கிலே சிக்கி இருக்கும்... அதை சரியான பல்பொடி இல்லேன்னா பேஸ்ட் வச்சு பிரஷ்ஷாலயோ கையாலயோ நல்லா தேய்க்கணும்...

அப்பா : பாத்திரங்களை தேய்க்கிற மாதிரி தேய்க்கக்கூடாது அப்படி தேச்சா பல் மேலே இருக்கிற எனாமல் போயிடும்... பல் கூசும்... அதனாலே, பிரஷ்ஷை மேலும் கீழும் சுழற்றி தேய்க்கணும்... அப்படின்னு டாக்டர் சொன்னாரு...

தாத்தா : அடடா! இதுகூட நல்ல தகவல் தான்...

தேன் : பல் இடுக்கிலே மாட்டிக்கிற துகள்களை சுத்தப்படுத்த கண்ட கண்ட குச்சி போட்டு குத்தக்கூடாது... அப்படி செய்ததாலேதான் எனக்கு பல் வலி வந்ததாம். வாயை நல்ல தண்ணியிலே கொப்பளிக்கணும்... பல் தேச்சு முடிஞ்ச பிறகு ஈறுகளையும் விரலால தேச்சு விடணும்னு டாக்டர் சொன்னாங்க...

செல்வம் : இப்படியெல்லாம் செய்யலேண்ணா?

தாத்தா : பல்லு சொத்தையாப் போயிடும்... அதைப் புடுங்கிக்கிட்டே இருந்தா வாயி பொக்கையாப் போயிடும்... அது மட்டுமில்லே... பல் இடுக்கிலே இருக்கிற உணவுத்துகள் கெட்டுப்போயி எச்சிலை விழுங்கும்போதோ உணவு உண்ணும்போதோ வயத்துக்குள்ள போயிடும். அப்பறம் வயத்துக் கோளாறுகளும் வரும். வாய் துர்நாற்றம் அடிக்கும்....

மாணிக்கம் : தாத்தா விரல் நகத்தை வெட்டனும்னு சொன்னிங்களே அதை வெட்டாம பெரிசா வளத்தா அழகா இருக்குமில்ல...

தாத்தா : இப்படிப்பட்ட அழகுல ஆபத்தும் இருக்கு...

தேன் : அது என்னா ஆபத்து...

தாத்தா : விரல் நகத்தை வெட்டாமெ விட்டுட்டா நகத்தின் இடுக்கிலே அழுக்கு சேரும்... அது உணவு உண்ணும் போது வயத்துக்குள்ள போயி பல நோய்களை உண்டாக்கிடும்... அதனாலே நகத்தை வெட்டி விரலை சுத்தமா வச்சுக்கிட்டா குடலைக் கெடுக்காமெ உடலைக் காப்பாத்தலாம்...

செல்வம் : தினமும் குளிச்சு சுத்தமா வச்சுக்கணுமிண்ணு சொன்னிங்களே அதனாலே என்ன நன்மை?

அப்பா : அப்படி தினமும் குளிச்சா... உடல் மேலே கண்ணுக்குத் தெரியாமெ படிஞ்சிருக்கிற அழுக்குப் போகும்... வியர்வை நாளங்கள் அடைபடாமெ திறந்து இருக்கும். உடல் ஆரோக்கியமாவும், மன மகிழ்ச்சியாவும் இருக்கலாம்...

மாணிக்கம் : தண்ணி சரியா கிடைக்காத இந்த காலத்திலே தினமும் குளிக்க முடியுமா தாத்தா...?

தாத்தா : அதுக்காக குளிக்காம இருந்தா எப்படி? தம்பி மாணிக்கம்... தங்கமா இருந்தாலும் அதை தொடச்சு வச்சாத்தான் பளபளக்கும். உன் அங்கமா இருந்தாலும் குளிச்சு வச்சாத்தான் சுத்தமா சுகாதாரமா இருக்க முடியும்... இல்லேன்னா சொறிஞ்சுக்கிட்டே நிக்க வேண்டியதான்...

தேன் : உணவை முறையா சாப்பிடுறதுன்ன சொன்னிங்களே அப்படின்னா என்ன தாத்தா?

தாத்தா : ம்... உணவை காலை மதியம் இரவுன்னு மூணு வேளையும் முறையா சாப்பிடணும்... உணவை வீணாக்காம சாப்பிடணும்... சாப்பிடறதுக்கு முன்னாலயும் சாப்பிட்ட பிறகும் கைகளை சுத்தமா கழுவணும்... வாயை நல்லா கொப்பளிக்கணும்... கண்ட நேரத்தில கண்டதை தின்னா உடம்பு கெட்டுடும்.

அப்பா : சரியா சொன்னிங்க தாத்தா!

தாத்தா : இன்னும் சில நல்ல பழக்கம் இருக்கு...

செல்வம் : அது என்ன தாத்தா?

தாத்தா : எடுத்த பொருளை எடுத்த இடத்திலே வைக்கிறது... மற்றவர்களிடத்திலே நம்ம தேவைக்காக வாங்கின பொருள நினைவா உரிய நேரத்திலே திருப்பி கொடுக்கிறது... இந்த மாதிரி விஷயத்திலே கூட கவனமா இருக்கணும்...

அப்பா : சரியா சொன்னிங்க தாத்தா... தேன்மொழி கூட வீட்டிலே ஒரு பொருளை எடுத்து பயன்படுத்திவிட்டு வேறே எங்கேயாவது வச்சுட்டு தேடுவா...

செல்வம் : நான் கூட சில நேரத்திலே மாணிக்கத்துக்கிட்ட வாங்கின பென்சில் ஷார்ப்னரை திருப்பி கொடுக்க மறந்துடுவேன்... அவன் வீட்டுக்குப்போயி அவங்க அம்மாக்கிட்டே திட்டு வாங்குவான். மறுநாள் எங்கிட்டே சண்டை போடுவான்...

தாத்தா : இது மாதிரி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்...

மாணிக்கம் : தாத்தா முறையான விளக்கு வெளிச்சத்திலே படிக்கணும்னு சொன்னீங்களே அது எப்படி?

தாத்தா : போதுமான விளக்கு வெளிச்சம் புத்தகத்து மேல படும்படியா உட்கார்ந்துல படிக்கணும். இல்லேன்னா கண் பார்வை பாதிப்பு உண்டாகும்.

அப்பா : அது மட்டுமில்லே! ஓடுற பஸ்சிலே, ரயில்லெ படிக்கிறது... ரோட்டுலெ நடந்துக்கிட்டே படிக்கிறது... இதெல்லாம் தவிர்க்கணும்...

தாத்தா : நமக்கு அறிமுகமில்லாத யாராவது சாக்லெட்டு, பிஸ்கெட்டு இதெல்லாம் கொடுத்தா வாங்கக்கூடாது...

உங்க அப்பா கூப்பிட்டாரு அம்மா கூப்பிட்டாங்க அங்க நிக்கிறாங்கன்னு யாராவது சொன்னா உடனே அவங்க பின்னாடி போயிடக்கூடாது...

செல்வம் : அப்படிப் போனா?

தாத்தா : வீணா... பிரச்சினையிலெ மாட்டிக்கனும் குழந்தைகளை கடத்திக்கிட்டு போறவங்க அப்படி ஏமாத்திதான் கூட்டிக்கிட்டுப் போறாங்க! பேப்பர்லெ படிக்கலியா?

செல்வம் : நாங்க சின்ன புள்ளைதானே நாங்க எதுக்கு பேப்பர் படிக்கணும்...

தாத்தா : அன்றாட நாட்டு நடப்பை தெரிஞ்சுக்க எல்லாருமே படிக்கணும்.

தேன் : குழந்தைகளால படிக்க முடியலென்னா...?

தாத்தா : பெரியவங்க படிச்சு சொல்லணும்... இப்படிப்பட்ட நல்ல பழக்கங்களை குழந்தையிலேயே கத்துக்கிட்டா எல்லாரும் நல்லாயிருக்கலாம்...! எப்பவும் மகிழ்ச்சியா இருக்கலாம்!

தேன் : ஆமா தாத்தா...!

செல்வம் : ரொம்ப நன்றி தாத்தா...!

மாணிக்கம் : நீங்க சொன்ன நல்ல பழக்கத்தை நாங்க எல்லாரும் இனிமே கடை பிடிப்போம் தாத்தா...

தாத்தா : நல்ல பழக்கத்தை குழந்தையிலெயே பழகு... நல்ல பிள்ளைக்கு அதுதான் அழகு...
(அனைவரும் சிரிக்கின்றனர்...)

முற்றும்

Share