Home 2016 பிப்ரவரி எளிய அறிவியல் தொடர்
புதன், 21 அக்டோபர் 2020
எளிய அறிவியல் தொடர்
Print E-mail

மின்னணுவியல் யுகமான இந்த 21ஆ-ம் நூற்றாண்டில் இந்த கட்டுரையைப் படிக்கும் உங்களிடத்தில் நான் ஒரேயொரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். “மின்சாரம் என்றால் என்ன? அது எதனால் ஆனது?” என்னடா இது!! விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எங்கேயோ சென்று விட்ட இந்த கால கட்டத்தில் இப்படியொரு அடிமட்டமான கேள்வியா? என்று ஆச்சரியப்படலாம் ஆனால் இதைப் பற்றித் தான் இந்த கட்டுரையே.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது முதன்முறையாக மின்சாரத்தைப் பற்றி சற்று விரிவாக பாடப்புத்தகத்தில் படிக்க நேர்ந்தது. நான் மின்சாரம் என்றால் என்ன என்று புரியாமல் கேட்ட போது “எலக்ட்ரான்களின் ஓட்டம்” என்று எனது அறிவியல் ஆசிரியர் பதிலளித்தார். எனக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.

எனது ஆசிரியரிடம் பதிலுக்காக மேலும் துருவி துருவி கேட்டபோது கிடைத்தது பதிலல்ல இரண்டு பிரம்படி. (பின்னொரு நாளில் தான் தெரிந்தது அவர் விலங்கியல் பட்டம் பெற்ற ஆசிரியர் என்று. அதான் இயற்பியல் சம்பந்தப்பட்ட கேள்விகளை சமாளிக்க முடியாமல் பிரம்படி கொடுத்திருக்கிறார்).

அதற்கு பின்பு பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியலை ஒரு தனி பாடமாக படித்து வந்த போது மின்சாரத்தைப் பற்றி சற்று அதிகம் படிக்க நேர்ந்தது. அப்போது எனது இயற்பியல் ஆசிரியரிடம் அதே கேள்வியைக் கேட்டேன் அதற்கு அவர் ‘மின்சாரம் என்பது எலக்ட்ரான்களின் ஓட்டம்’ என்றும் ‘மின் இழுவிசையானது எலக்ட்ரான்கள் ஓடும் திசைக்கு எதிர் திசையில் பாயும்’ என்றும் கூறினார். சத்தியமாக ஒன்றும் புரியவில்லை.

சரி அது போனால் போகட்டும், “Va I என்ற ஓம் விதி விளங்கிக்கொள்ள சற்று கடினமாக இருக்கிறது, விளக்க முடியுமா?” என்று கேட்டேன். அதற்கு என் ஆசிரியர், “V=IR அப்படியென்றால் Vegetarian=IyyeR என்று எடுத்துக்கொள். அய்யர் வெஜிடேரியன் தானே சாப்பிடுவார்கள் இப்படி ஞாபகம் வச்சிக்கோ இது தான் சரியான வழி” என்று விளக்கினார். இதற்கு பிரம்படி கொடுத்த ஆசிரியரே மேல் என்று தோன்றியது.

இறுதியாக, ஒளி என்பது போட்டான்களால் ஆனது போல மின்சாரம் என்பது எலக்ட்ரான்களால் ஆனது போலும் என்று நானாக ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். ஆனால் அது தவறாகத்தான் இருக்கும் என்று மனதிற்குள்ளே உதைத்து கொண்டே இருந்தது. மின்சாரம் எதனால் ஆனது என்ற ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறோமே என்று மனம் நிம்மதியிழந்து வருந்தியது.

பள்ளி படிப்பை முடித்து விட்டு அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் சேர்ந்த போது அந்த வருடம் தமிழகத்திலேயே இரண்டாம் மதிப்பெண் பெற்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (ECE) படிப்பில் சேர்ந்த அந்த மாணவனை அங்கு சந்திக்க நேர்ந்தது. மாநிலத்திலேயே இரண்டாம் மதிப்பெண் பெற்றவன் என்றால் தெளிவாகத் தான் இருப்பான் என்று முடிவெடுத்து அவனிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு. “மின்சாரம் எதனால் ஆனது?” என்று பேச்சுவாக்கில் அவனிடம் கேட்டேன்.

அதற்கு அவன் “எலக்ட்ரான்களால் ஆனது” என்று பதிலளித்தான். அப்போது மனதிற்கு ஒரு நிம்மதி வந்தது, “அப்பாடா, ஊர்ல நம்மள மாதிரிதான்பா எல்லாரும் இருக்காங்க...” அண்ணா பல்கலைகழகத்தில் மிகத் திறமையான பல்வேறு பேராசிரியர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்த போது அவர்களிடத்தில் அந்த கேள்வியை கேட்டேன்.

அதற்கு அவர்கள் கூறிய பதில், “அதுக்கான விளக்கத்தை நான் சொல்றதுக்கு பதில், நான் சொல்ற புத்தகங்களை படித்து நீயே புரிந்து கொள். அந்த புத்தகங்களில் ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் மட்டும் என்னை வந்து பார்” என்று கூறினர். அவர்கள் சொன்ன புத்தகங்களை படித்த போது ஒரு புதிய உலகிற்கான வாசல் திறந்தது போன்ற ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது... பல ஆண்டுகளாக உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருந்த எரிமலைக் கேள்விகள் வெடித்து சிதறி அனைத்தும் சாந்தப்படுத்தப்பட்ட ஓர் உணர்வு.

உண்மையில் மின்சாரம் என்பது ஒரு விசை (அ) ஆற்றல் புலம் (Energy Field) அவ்வளவு தான். நாம் தானியங்கி கைக்கடிகாரங்களில் கீ கொடுத்து விட்டால் அந்த ஆற்றல் பற்சக்கர மீள்வான்கள் இழுவிசை மூலம் சேகரிக்கப்பட்டு பின் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அந்த கைக்கடிகாரத்தை இயங்க வைக்கும் அல்லவா அதே போன்று தான் மின்சாரமும் செயல்படுகிறது. இங்கு நாம் கீ கொடுப்பதன் மூலம் அளிக்கும் ஆற்றலை செயல்படுத்த பற்சக்கர இழுவிசை தேவைப்படுவது போல மின்னாற்றலை செயல்படுத்த எலக்ட்ரான்கள் தேவைபடுகின்றன.

நாம் கீ கொடுப்பதன் மூலம் கைக்கடிகாரத்திற்கு தேவையான ஆற்றல் உருவாகிறது பற்சக்கர இழுவிசை மூலம் இந்த ஆற்றலானது சேமிக்கப்பட்டு பின்னர் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மின்னாற்றல் எவ்வாறு உருவாகிறது? எப்படி இந்த எலக்ட்ரான்கள் மூலம் மின்னாற்றல் செயல்படுத்தப்படுகின்றன?

அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

Share